படிப்பதற்காக பளு துாக்கும் குழந்தைகள்!
பெரும்பாலான பெற்றோருக்கு தங்கள் குழந்தையின் எடை, உயரம், காலணி, சீருடை அளவு தெரியும். ஆனால் பள்ளிக்கு செல்லும் குழந்தை முதுகில் எவ்வளவு எடையைச் சுமக்கிறது என்பது, எத்தனை பேருக்குத் தெரியும்? பள்ளி பையை மாட்டிக்கொண்டு, குழந்தை செல்லும் போது, முதுகை சற்று முன்னோக்கி வளைந்து செல்வர். நம்மில் பலரும் இதை இயல்பாக எடுத்துக் கொள்வோம். மத்திய அரசின் 2020 பள்ளிப் பை கொள்கைப்படி, 1 - 10ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பள்ளிப் பையின் எடை, அவர்களின் உடல் எடையில், 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் ; மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு பையே இருக்கக்கூடாது என்று பரிந்துரைக்கிறது. ஒரு குழந்தையின் எடை, 25 கிலோ என்றால், அதில் 10 சதவீதம், அதாவது, 2.5 கிலோ இருக்கலாம். பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சாப்பாட்டு டப்பா, தண்ணீர் பாட்டில், பென்சில் பாக்ஸ், வரைபடப் பொருட்கள், விளையாட்டு உடைகள் மற்றும் ஒர்க் ஷீட்கள் என அனைத்தும் சேர்ந்து, எடையை எளிதாகக் கூட்டிவிடும். சில நேரங்களில், பார்ப்பதற்கு சிறியதாகத் தெரியும் பை கூட 4, 5 கிலோ எடை இருக்கும். காலையில் பள்ளி வேனில் ஏறி உட்காருவதில் தொடங்கி, வகுப்பில், வீடு திரும்பி வீட்டுப்பாடம், டியூஷன், மொபைல் போன், கம்ப்யூட்டர், 'டிவி' திரைக்கு முன் என்று நாள் முழுவதும் குழந்தைகள் உட்கார்ந்தே இருக்கின்றனர். ஓடியாடி விளையாட நேரமே கொடுப்பதில்லை. உலக சுகாதார அமைப்பு 5 --- 17 வயது குழந்தைகள், தினமும் குறைந்தது 60 நிமிடங்களாவது; மிதமான, தீவிரமான உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்கிறது. வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது தசைகள், எலும்புகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும். ஓடி, விளையாடி, குதித்து, தசை பலத்தை வளர்த்துக் கொள்ளும் ஒரு குழந்தையின் உடல் திறனும், நாளின் பெரும்பகுதியை உட்கார்ந்தபடியே கழிக்கும் ஒரு குழந்தையின் உடல் திறனும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதற்காக, பள்ளிப் பை ஒரு குழந்தையின் முதுகுத்தண்டைச் சேதப்படுத்தி விடும் என்று சொல்ல முடியாது. அதே நேரம், பையை மாட்டியபடி குழந்தை நடக்கும் போது, 'பள்ளி பை அவ்வளவு பெரிய பாரமாக இருக்கது' என்று நாமாகவே முடிவு செய்யக் கூடாது. பையை மாட்டியதும், குழந்தையின் முதுகு முன்னோக்கி வளைகிறதா, பையின் தோள்பட்டை நழுவுகிறதா, பையை மாட்டிக்கொள்ளும்போது குழந்தை சிரமப்படுகிறதா? முதுகு வலிக்கிறது என்று சொல்கிறதா? பையை எப்போதும் ஒரு பக்க தோளில் மட்டும் மாட்டிக் கொள்ளும் பழக்கம் உள்ளதா? என்பதை கவனித்தால், குழந்தை உடல்ரீதியில் எந்த அளவு பலவீனமாக இருக்கிறது என்பது புரியும். ஒரு நல்ல பள்ளிப் பை என்பது எடை குறைவானதாக இருக்க வேண்டும். அதில் மென்மையான, தேவைக்கேற்ப அளவை மாற்றிக் கொள்ளக்கூடிய இரண்டு வார்கள் இருக்க வேண்டும். அது பையின் எடையை இரண்டு தோள்களிலும் சரிசமமாகப் பிரித்து வசதியாகச் சுமக்க உதவ வேண்டும். ஒரு குழந்தை அடிக்கடி முதுகு, கழுத்து வலிப்பதாகக் கூறினால், குறிப்பாக அந்த வலி அவர்களின் பள்ளிப் படிப்பு, விளையாட்டு, துாக்கத்தை பாதித்தால், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். அத்துடன் உடல் பலவீனம், மரத்துப்போதல், நடப்பதில் சிரமம், காய்ச்சல், காரணமில்லாமல் எடை குறைதல், வேறு ஏதேனும் அசாதாரண அறிகுறிகளுடன் வலி இருந்தால், மருத்துவரிடம் பரிசோதிப்பது மிகவும் முக்கியம். டாக்டர். எம்.டி.எஸ்.சசிதரன், முதுகுத்தண்டு மற்றும் ஸ்கோலியோசிஸ் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ஸ்பைன் கிளினிக், சென்னை 9840105510, 7200752223 sasimds@ymail.com