மூட்டுவலி மாத்திரையால் பக்கவிளைவுகள் உண்டா?
* நான், மூட்டுவலியால் இரண்டு ஆண்டாக அவதிப்பட்டு, டாக்டர் கூறியபடி, 'டைலோபெனாக்' என்ற மாத்திரையை, தினமும் 2 எண்ணிக்கையில் சாப்பிடுகிறேன். இல்லை எனில், வலி தீவிரமாகிறது. இம்மாத்திரையால் பக்க விளைவு உண்டா?டைலோபெனாக் என்ற மருந்து, 'NSAID' என்கிற குழுமத்தைச் சேர்ந்த மருந்து. இம்மருந்தை தீவிர வலி உள்ளவர்கள் தற்காலிகமாக உட்கொள்ளலாம். நீண்ட நாட்கள் சாப்பிட்டால், பக்க விளைவுகள் அதிகம் ஏற்படும். வயிற்றுப் புண், கால்வீக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும்.* என் தாய்க்கு, 74 வயதாகிறது. எலும்புகள் வலுவின்றி உள்ளன. 'ஆஸ்டியோபோரோசிஸ்' இருப்பது கண்டறியப்பட்டு, 'ஜோலெண்ட்ரானிக் ஆசிட்' என்ற ஊசி மருந்தை ஒரு முறை கொடுக்கும்படி டாக்டர் கூறினார். ரத்தநாளத்தில் செலுத்தக்கூடிய, அதிக விலையுள்ள, வீரியமிக்க இம்மருந்தை, தள்ளாத வயதில் கொடுப்பது பாதுகாப்பானதா?ஜோலெண்ட்ரானிக் ஆசிட் என்ற ஊசி, நம் எலும்பின் அடர்த்தி குறைவதை தடுப்பதற்காக கொடுக்கப்படுகிறது. இதை செலுத்தும்போது பரிந்துரைக்கப்படும் சான்றிதழை படித்து, அதில் கூறியபடி செலுத்தப்பட வேண்டும். சரியாக செலுத்தப்பட்டால் எந்த வயதிலும் இது பாதுகாப்பான சிகிச்சை முறையே. மாற்று மருந்துகளாக, மாதம் ஒருமுறை எடுக்கும் மாத்திரைகளும் உள்ளன. டாக்டரை கலந்து ஆலோசிக்கவும்.* கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில், இடது புஜத்தில் உள்ள, 'கிளேவிக்கிள்' என்ற எலும்பு முறிந்தது. முறிந்த எலும்பை இணைய வைக்க, அறுவை சிகிச்சை செய்ய இயலுமா?கிளேவிக்கிள் என்ற எலும்பு, பொதுவாக நன்றாக இணைந்து, அனைத்து செயல்பாடுகளும் குறையில்லாமல் செய்யக் கூடிய அளவிற்கு, குணம் அடையும். குறிப்பிட்ட சில நேரங்களைத் தவிர, கிளேவிக்கிள் எலும்பு முறிவதால், பொதுவாக அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப் படுவதில்லை. உங்களுக்கும், முறிந்த எலும்பு இணைய, அறுவை சிகிச்சை அவசியம் இல்லை.டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை