"புறாக்களால் அலர்ஜி ஏற்படுமா?
புறாக்களால் மட்டும் அல்ல; வீட்டில் எந்த ஒரு செல்லப் பிராணியை வளர்த்தாலும், நுரையீரலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அலர்ஜி உள்ளவர்கள், செல்லப் பிராணிகளிடம் இருந்து, சற்று தள்ளி இருப்பது மிகவும் நல்லது.* என் குழந்தைக்கு ஓர் ஆண்டுக்கு முன், 'பிரைமரி காம்ப்ளக்ஸ்' இருந்தது. 6 மாதம் தொடர்ந்து மருந்து கொடுத்தோம். இரண்டு வாரங்களாக அதிக இருமலுடன் இருந்த அவனுடைய உடல் எடை, குறைவாக உள்ளது. டாக்டரோ, அவனுக்கு மீண்டும் பிரைமரி காம்ப்ளக்ஸ் மருந்துகள் கொடுக்க வேண்டும் என்றார். பிரைமரி காம்ப்ளக்ஸ் திரும்பவும் வரக்காரணம் என்ன?பிரைமரி காம்ப்ளக்சுக்கு ஒருமுறை, 6 மாதங்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டால், திரும்பவும் மருந்து எடுக்கத் தேவை இல்லை. உங்கள் குழந்தை உடல் எடை குறைவாக இருந்தாலும், சுறுசுறுப்பாக இருக்கிறானா அல்லது எப்போதும் உடல் சோர்வுடன் இருக்கிறானா என்பதை கண்டறியுங்கள். பல பெற்றோர், தங்கள் குழந்தை குண்டாக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருப்பதாக கருதுகின்றனர். குண்டாக இருக்கும் பல குழந்தைகள், பிற்காலத்தில் உடல் பருமனால் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். ஆகையால், உங்கள் குழந்தைக்கு திரும்பவும் பிரைமரி காம்ப்ளக்சுக்கு மருந்து கொடுக்க வேண்டாம். உடல் எடையை பற்றியும் அதிகம் கவலைப்பட வேண்டாம். உங்கள் குழந்தைக்கு, 'வைரல் இன்பெக்ஷன்' இருந்தாலும், ஆறு வாரங்கள் வரை இருமல் இருக்க வாய்ப்புள்ளது.* நான் ஒரு கல்லூரி மாணவன், 22. சில மாதங்களாக எனக்கு இருமல் இருந்தது. பரிசோதனை செய்த டாக்டர், அலர்ஜியால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றார். நான், என் வீட்டில் புறாக்கள் வளர்க்கிறேன். புறாக்களால் அலர்ஜி வருமா?கண்டிப்பாக, புறாக்களால் அலர்ஜி வர அதிக வாய்ப்பு உள்ளது. புறாக்களின் இறகுகள் மற்றும் அதன் கழிவுப் பொருட்களால் அலர்ஜி உண்டாகிறது. இதனால் புறாக்கள் வளர்ப்பவர்களின் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதை, 'பீஜியன் பிரீடர்ஸ் லங்க்ஸ்' என்பர். சில சமயங்களில் புறாக்களை அகற்றினாலும், அதனால் ஏற்பட்ட அலர்ஜியால், நீண்ட நாட்களுக்கு நுரையீரலில் பாதிப்பு காணப்படுகிறது. புறாக்களால் மட்டும் அல்ல, வீட்டில் எந்த ஒரு செல்லப் பிராணியை வளர்த்தாலும், நுரையீரலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அலர்ஜி உள்ளவர்கள், செல்லப் பிராணிகளிடம் இருந்து, சற்று தள்ளி இருப்பது மிகவும் நல்லது.* சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் என் நண்பர், உடற்பயிற்சி, ஊட்டச்சத்து எடுத்துக் கொள்கிறார். ஒரு மாதமாக இருமல் பாதிப்பு உள்ளதால், பரிசோதித்த டாக்டர், அவருக்கு 'டி.பி., இன்பெக்ஷன்' உள்ளது என்று கூறினார். அவருக்கு டி.பி., வரக் காரணம் என்ன?டி.பி., நோய் கிருமி காற்று மூலமாக பரவுகிறது. காற்றோட்டம் இல்லாத அறைகளில், டி.பி., கிருமியால் பாதிக்கப்பட்டவர் இருந்தால், அந்த அறையில் உள்ள மற்றவர்களுக்கும் டி.பி., கிருமி பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இன்று பல சாப்ட்வேர் நிறுவனங்களில், மையப்படுத்தப்பட்ட, 'ஏசி' அறையில், 50 முதல் 100 பேர் வரை பணியாற்றும் சூழல் உள்ளது. மேலும், அப்பகுதிகளில் காற்றோட்டம் சரிவர இருப்பதில்லை. இதனால் டி.பி., கிருமியால் பாதிக்கப்பட்டவர் அந்த அறையில் இருந்தால், அவர் மூலம் மற்றவர்களுக்கு, டி.பி., கிருமி பரவ வாய்ப்புள்ளது. இக்காரணங்களால் தான், உங்கள் நண்பருக்கும், டி.பி., நோய் வந்திருக்கலாம். டி.பி., நோய் பாதிக்கப்பட்டவர்கள், இருமல் வந்தால் கண்டிப்பாக வாயை ஒரு துண்டால் மூடிக் கொள்ள வேண்டும். எங்கு வேலை பார்த்தாலும், காற்றோட்டமான அறை அவசியம்.டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425 24147