"நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் பாதிக்குமா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
நான் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணிசெய்கிறேன். வீடு திரும்பிய பின்னும் சோபாவில் அமர்ந்து 3 மணிநேரம் 'டிவி' பார்ப்பேன். சமீபத்தில் முதுகுவலி, இடுப்பு வலியால் அவதிப்படுகிறேன். நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் வலி ஏற்படுவதாக நண்பர் கூறுகிறார். இதுசரியா?நாள் முழுவதும் அமர்ந்தே இருப்பவர்களை 'செடன்டரி லைப் ஸ்டைல்' என்பர். அவ்வாறு உள்ளவர்களுக்கு தசைகள் தளர்ந்து உடல்வாகு பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இனம் தெரியாத வலியும் ஏற்படலாம். முதுகு மற்றும் இடுப்பிற்கு என பரிந்துரைக்கப்படும் சில உடற்பயிற்சி முறைகள் தினசரி செய்ய வேண்டும். மேலும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்காருவோர், நம் முதுகின் அமைப்பு காப்பதற்கு என்றே சிறப்பாக செய்யப்பட்ட நாற்காலியில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும். மாலை நேரங்களில் அமர்ந்து செய்யும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை தவிர்த்து, சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் விளையாட்டு முறைகளை பழக்கமாக வைத்துக் கொண்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.* இரண்டு ஆண்டுகளாக தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்ட எனக்கு, சமீபத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்ததில் 'பாரா லேப்ரல் சிஸ்ட்' இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு சிகிச்சை உண்டா?பாரா லேப்ரல் சிஸ்ட் என்பது பந்து கிண்ணம் மூட்டான தோள்மூட்டின் கிண்ணம் பகுதி விளிம்பில் ஏற்பட்ட ஒரு நீர்க்கட்டி ஆகும். தோள்பட்டையில் அறியாத வலி இருக்கும் சிலருக்கும் இதுவும் ஒரு முக்கிய காரணம். இவ்வாறு உள்ளவர்களுக்கென ஒரே தீர்வு அந்த நீர்க்கட்டியை எடுப்பது மற்றும் அது மேலும் வராமல் தடுக்க, 'லேப்ரல் ரிப்பேர்' செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் மூட்டு நுண்துளை சிகிச்சையில் செய்வதே நல்லது.* எனது வயது 64. நான்கு ஆண்டுகளாக மூட்டுவலி பாதிப்புள்ளது. மூட்டுமாற்று சிகிச்சை செய்தால் வலிகுறையும் என டாக்டர் கூறுகிறார். உடனே செய்ய வேண்டுமா, சில காலம் தாமதமாக செய்யலாமா?மூட்டுமாற்று சிகிச்சை என்பது மூட்டு வலிக்கு நீண்ட காலதீர்வை அளிக்க விஞ்ஞான ரீதியில் உலகளவில் உறுதி செய்யப்பட்ட ஒரு சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையை நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்கள் வலியை பொறுத்ததே ஆகும். ஆனால் மூட்டு தேய்மானத்தின் தீவிரம் நாளடைவில் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதே ஒழிய, தேய்மானம் குறையாது. பொதுவாக மூட்டு தேய்மானத்தின் விளைவு மூட்டின் வடிவம் வளைய செய்யும். அவ்வாறு மூட்டு வடிவம் மிகமோசமாக மாறியபின், மூட்டு மாற்று சிகிச்சை செய்வது சாத்தியம். ஆனாலும் அது சற்று கடினமானது என்றே சொல்லலாம். மிதமான வலி இருந்தால் மட்டும் நீங்கள் சற்று தாமதிக்கலாமே ஒழிய, நீண்டகாலம் தள்ளிப் போடுவதில் நீங்கள் சிரமப்படும் நாட்களே அதிகமாகும்.டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 93442-46436