"புகைபிடிப்பதால் எலும்புக்கு பாதிப்பு வருமா
எனது வயது 32. ஆறு மாதங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில், எனது தோள்ப்பட்டையில் ஒரு எலும்பு விலகியது. மருத்துவர் அதை ஏ.சி., ஜாயின்ட் விலகி இருப்பதாகக் கூறினார். முதலில் கட்டுப்போட்டனர். இப்போது விலகிய இடத்தில் வலி உள்ளது. மேலும் தோள்ப்பட்டை வடிவம் மாறி காணப்படுகிறது. இதற்கு சிகிச்சை உள்ளதா?ஏ.சி., ஜாயின்ட் விலகி வலி இருந்தால் அதை சீரமைக்க வேண்டும். விலகிய மூட்டினை ஒன்று சேர்த்து, அதை ஒரு கம்பியால் தற்காலிகமாக 2 மாதங்களுக்கு இணைத்து வைத்திருக்க வேண்டும். இதேமாதிரியான சிகிச்சை நுண்துளை வழியாகவும் செய்ய இயலும். நவீன தொழில் நுட்ப முறையில் கம்பி இல்லாமலும் செய்ய இயலும். மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.நாற்பத்து இரண்டு வயதான எனக்கு தீவிர மூட்டுவலி உள்ளது. வயதானவர்களுக்கு வரவேண்டிய மூட்டு தேய்மானம் இளம்வயதிலேயே வந்துள்ளதாக மருத்துவர் கூறுகிறார். முழங்கால் இணைப்பு நார், விபத்தில் காயமடைந்ததே காரணம் என்கிறார். இது சரிதானா?மூட்டு இணைப்பு நார் மூட்டினை நிலையாக வைக்க உதவுகிறது. மூட்டு இணைப்பு நார், சரியாக இயங்காமல் நடக்கும்போது மூட்டினில் மிக அதிகமாக விசைகள் செல்வதால், மூட்டு எளிதாக தேய்மானம் அடையும். இளம் வயதிலேயே மூட்டு இணைப்பு நார் சீரமைக்கப்பட்டால் இதை தடுத்திருக்க முடியும். தற்போது உங்களுக்கு உள்ள நிலையில் மூட்டு தேய்மானத்தின் தீவிரத்தை பொருத்து மருந்துகள், பிசியோதெரபி, அறுவை சிகிச்சைகள் உள்ளன. மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்யவும்.எனது வயது 46. இருமுறை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனது எலும்பின் அடர்த்தி குறைவாக உள்ளதெனவும், புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடும்படி கூறுகிறார். புகைபிடிப்பதால் எலும்புக்கு பாதிப்பு வருமா?புகைபிடிப்பதால் உள்ள தீமையான விளைவுகள் பல. இதில் எலும்பின் அடர்த்தி குறைவது மிகமுக்கியமானது. எலும்பின் அடர்த்தி குறைவது, எளிதாக எலும்பு முறிவது மற்றும் முறிந்த எலும்பு தாமதமாக இணைவது என்பதையெல்லாம், புகைபிடிப்பவர்களிடம் மிக சாதாரணமாக காணப்படுகிறது. புகைபிடிப்பவர்களுக்கும், அவர்களின் அருகில் இருந்து அப்புகையை சுவாசிப்போருக்கும் (பாசிவ் ஸ்மோக்கர்ஸ்) இந்த தீமையான விளைவுகள் ஏற்படும். எனவே கண்டிப்பாக புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 93442-46436