உள்ளூர் செய்திகள்

சுற்றுலா செல்ல முதியோருக்கும் ஆசை அழைத்து செல்லத்தான் மனசு இல்லை!

பயணங்கள் என்பது முதியோர்களை பொறுத்த வரையில் ஆடம்பரமானது அல்ல; ஆரோக்கியம், மனநலத்துடன் மிகவும் தொடர்புடையது என்கிறார், உளவியல் ஆலோசகர் சுமித்தா சாலினி.முதுமையின் பெரிய சவால், தனிமையும் அதனால் ஏற்படும் வெறுமையுமே. அதை பெரும்பாலானோருக்கு கையாள தெரியாத சூழலில், மனஅழுத்தங்களுக்கு ஆளாகி, உடல் ரீதியாகவும் பாதிப்பை வரவழைத்துக்கொள்ளும் சூழல் உள்ளது.குளோபல் கோலிஷன் ஆன் ஏஜிங் (ஜி.சி.ஓ.ஏ., ) அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், முதியோர் அடிக்கடி சுற்றுலா செல்வது ஆரோக்கியத்திற்கும், மனநலத்திற்கும் முக்கியம் என்றும், பயணங்கள் மனஅழுத்தத்தை குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, உளவியல் ஆலோசகர் சுமித்தா சாலினி கூறியதாவது:முதியோர் இல்ல முதியோர் பலர், நான்கு சுவர்களுக்குள் அடைந்து இருப்பதாக உணர்வதை, ஆய்வில் அறிய முடிந்தது. வீடுகளில் உள்ள முதியோரும், வெளியிடங்களுக்கு சென்றுவருவதை விரும்புகின்றனர்.பல வீடுகளில், வீட்டார் கார்களில் சுற்றுலா செல்கின்றனர். கணவன், மனைவி, குழந்தைகளுக்கு இடம் சரியாக இருக்கும் என்பதால், வீட்டில் இருக்கும் முதியோரை கண்டுகொள்வதில்லை. சற்று கார் பெரிதாக இருந்தாலும், நண்பர்களை சேர்த்துக்கொள்வார்களே தவிர, முதியோரை தவிர்க்கவே நினைக்கின்றனர்.அவர்களின் உடல்நிலை பயணத்துக்கு ஒத்துக்கொள்ளாது என்று சாக்குபோக்கு சொல்வார்கள்.இளைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. தங்களை சார்ந்திருக்கும் முதியோருக்கு நல்ல உடை, உணவு, தங்க இடம் மட்டும் கொடுத்தால் போதாது. வெளியிடங்களுக்கும் அவ்வப்போது அழைத்து செல்ல வேண்டும்.பயணம் என்பது, முதியோரின் மனநலனை மேம்படுத்தவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவும். 50 - 60 வயது வரை பிள்ளைகளுக்காக ஓடியவர்கள், அதன் பின்னரே தங்கள் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற விரும்புகின்றனர்; ஆனால், அதற்கான வாய்ப்புகள் பலருக்கு கிடைக்காமல் போகிறது.ஒரு சில முதியோருக்கு சினிமாவுக்கு செல்வது, சில முதிய பெண்களுக்கு ஷாப்பிங் செல்வது, சிலருக்கு ஆன்மிக ரீதியாக சுற்றுலா செல்வது...இப்படி ஆளாளுக்கு ஆசைகள் வேறுபடும். அதை அறிந்து நிறைவேற்றி வையுங்கள்.அவ்வாறு, வெளியில் செல்லும் போது, அவர்களிடம் பேரன், பேத்திகளுக்கு வாங்கவும், அவர்களுக்கு பிடித்ததை வாங்கவும், பணம் கொடுக்க மறந்து விடாதீர்கள்!இவ்வாறு, அவர் கூறினார்.இளைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. தங்களை சார்ந்திருக்கும் முதியோருக்கு நல்ல உடை, உணவு, தங்க இடம் மட்டும் கொடுத்தால் போதாது. வெளியிடங்களுக்கும் அவ்வப்போது அழைத்து செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்