உள்ளூர் செய்திகள்

40 வயதானல் எல்லாரும் கோலோனோஸ்கோபி செய்து கொள்ளுங்கள்!

ஆரோக்கியமாக இருக்கிறேன்; தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்: தினசரி வேலைகளில் சுறுசுறுப்பாக இருக்கிறேன். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுகிறேன்; என் உடல் நலத்தை கவனிப்பதற்கே பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணர் இருக்கிறார். இன்னொரு விஷயம், நண்பர்களை சந்திக்கும் போது எப்போதாவது ஒயின் குடிப்பதைத் தவிர, எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சிகரெட், புகையிலை பொருட்களை மெல்லும் பழக்கமும் இல்லை. எனவே, எனக்கு எந்த உடல்நலக் கோளாறும் வராது என்று நம்பினேன். இருபது ஆண்டுகளுக்கு முன், என் 45வது வயதில், பெருங்குடல், மலக்குடல் கேன்சர் பொதுவான விஷயமாக இருந்தது. துவக்கத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. நான்காம் நிலை கேன்சராக மாறும்போது தான், அறிகுறிகள் வெளியில் தெரியும். எனவே, 40 வயதிற்கு மேல் அனைவரும், 'கோலோனோஸ்கோபி' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நீங்களும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி டாக்டர் நாகேஸ்வர ராவ் சொன்னார். அவரே பரிசோதனையும் செய்தார். பரிசோதனை முடிவுகளைப் பார்த்த போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'பாலிப்ஸ்' எனும் இரண்டு சிறு கட்டிகள், என் பெருங்குடலில் இருப்பது தெரிந்தது. பெருங்குடலில் உருவாகும் இது போன்ற கட்டிகள், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் கேன்சராக மாறும் வாய்ப்பு, 80 சதவீதம் உள்ளது. அதனால், உடனடியாக இதை அகற்றி விட வேண்டும் என்று சொல்லி, அகற்றினார்.'நான் தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறேனே... எனக்கு எதுவும் வராது' என்று நினைத்து, டாக்டர் சொன்னதை அலட்சியப்படுத்தி, ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் என் நிலை என்னவாயிருக்கும் என்பது தெரியாது. என்னை சரியாக வழி நடத்த டாக்டர்களும், பரிசோதனை செய்யும் வாய்ப்பும் இருந்ததால், கேன்சர் பாதிப்பை எளிதாக தவிர்க்க முடிந்தது.நம் சக்தி, கட்டுப்பாட்டை மீறி வரும் பிரச்னைகளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது தான். அதேநேரம், தவிர்க்க முடிகிற விஷயங்களை அலட்சியப்படுத்தாமல், அந்தந்த வயதில் அவசியமான பரிசோதனை செய்து, ஆரம்ப நிலையிலேயே பிரச்னையை சரி செய்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.- சிரஞ்சீவி, தெலுங்கு நடிகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !