உள்ளூர் செய்திகள்

வயதானவர்களின் வீடுகளில் இருக்க வேண்டிய வசதிகள்

''வயதானவர்களுக்கு வீட்டிற்குள் சில வசதிகளை ஏற்படுத்தி தருவதால், அவர்களின் பாதுகாப்பு உறுதியாவதோடு, தேவையில்லாத விபத்துகளையும் தவிர்க்க முடியும்,'' என்கிறார், மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க (காட்சியா) செயலாளர் மணிகண்டன்.வழுக்காத தரை வீடுகளில் அழகிற்காக பளபளப்பான கிரானைட், மார்பிள் அல்லது கிளாஸி டைல்ஸ் பதிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை அதிக குளிர்ச்சியை தருவதால், முதியவர்களுக்கு மூட்டு வலி, கால் வலியை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக, வழுக்காத சொரசொரப்பான 'ஆன்டி-ஸ்கிட்' டைல்ஸ் தேர்வு செய்ய வேண்டும்.கழிவறையில் கவனம் எளிதில் அமர்ந்து எழக்கூடிய வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பது அவசியம். கழிவறை சுவரில் பிடித்துக்கொண்டு எழுவதற்கும், குளிக்கும் பகுதியில் நிற்பதற்கும் ஏற்ப பாதுகாப்பு பிடிமானக் கம்பிகள் பொருத்த வேண்டும். குளியலறைக்கு வெளியே வரும்போது, ஈரத்தை உறிஞ்சும் திறன் கொண்ட தரமான மிதியடிகளை வாசலில் வைக்க வேண்டும்.எளிதான படிக்கட்டுகள் முதியவர்கள் ஏறி இறங்குவதற்கு ஏதுவாக, படிகளின் உயரம் அதிகபட்சம், 6 இன்ச்க்கு மேல் இருக்கக் கூடாது. கால் வைக்கக்கூடிய பகுதியின் அகலம் குறைந்தது 1 அடியாவது இருக்குமாறு அமைக்க வேண்டும்.காற்றோட்ட வசதி முதியோரின் அறைகள் விசாலமாகவும் (குறைந்தது 10*16 அடி), போதுமான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். வழக்கமான 4*4 அடி ஜன்னல்களுக்குப் பதிலாக 4*5, 4*6 அடி அளவில் பெரிய ஜன்னல்களை அமைக்கலாம்.கொசுக்கள் வராமல் தடுக்க நெட்லான் திரைகளும், திறந்து மூடுவதற்கு சிரமமில்லாத ஸ்லைடிங் ஜன்னல்களும் பொருத்தலாம்.கட்டிலின் உயரம் தரைமட்டத்திலிருந்து ஒன்றரை அடிக்கு மேல் இருக்க கூடாது. ​உடல் வலி ஏற்படாமல் இருக்க, மென்மையான 'போம்' மெத்தைகள் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் ஏர்/வாட்டர் பெட்கள் அமைத்துக் கொடுக்கலாம்.படுக்கை அமைப்பு படுக்கையில் படுத்தபடியே இயக்கும் வகையில், எலக்ட்ரிக்கல் சுவிட்சுகளைத் தாழ்வான உயரத்தில், படுக்கைக்கு அருகிலேயே அமைக்க வேண்டும். ​முதியவர்களால் சத்தமாகப் பேசி அழைக்க முடியாத சூழலில், படுக்கைக்கு அருகே, ஒரு பஸ்ஸர் பட்டன் அமைப்பது மிகவும் முக்கியம். இதன் சத்தம் ஹால் அல்லது சமையலறை வரை தெளிவாக கேட்கும் வகையில் இருக்க வேண்டும்.இப்படி சின்ன சின்ன வேலைப்பாடுகளில் கவனம் செலுத்தினாலே, முதியோர்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்