உள்ளூர் செய்திகள்

கர்ப்பத்தில் வளரும் கருவை பாதிக்கும் பட்டாசு சத்தம்!

தீபாவளியின் போது ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுபாடு, தாயின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், வளரும் கருவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். ஒலி மாசு தீபாவளியின் போது, பட்டாசுகளால் உண்டாகும் புகையை சுவாசிப்பது, திடீரென அதிக சத்தத்திற்கு உள்ளாவது, வயிற்றில் வளரும் கருவுக்கு மன அழுத்தத்தையும் அசவுகரியத்தையும் தரலாம். எனவே, கர்ப்பிணி பெண்கள் அதிக சத்தத்துடன், பட்டாசுகள் வெடிக்கப்படும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் அதிக சத்தத்திற்கு உள்ளாக நேரிட்டால், காதுகளைப் பாதுகாக்கும் கருவிகளைப் பயன் படுத்துவது பாதிப்பைக் குறைக்க உதவும். காற்று மாசு பட்டாசுகளிலிருந்து வெளிவரும் புகை காற்றின் தரத்தைக் கணிசமாகக் குறைப்பதோடு, சுற்றுச்சூழலில் தீங்கு விளைவிக்கும் துகள்களின் அளவையும் அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் உடலுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படுவதால், காற்றின் தரம் மோசமாக இருக்கும்போது மூச்சுத் திணறல், தலைவலி, தலைசுற்றல், குமட்டல் போன்ற அசவுகரியங்கள் ஏற்படலாம். எனவே, பட்டாசுகள் அதிகம் வெடிக்கப்படும் நேரங்களில் கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பது சிறந்தது. கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும், முடிந்தால் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தலாம். ஒருவேளை வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தரமான முகக்கவசத்தை அணிவது, கூடுதல் பாதுகாப்பை வழங்கும். கர்ப்ப காலத்தில், சமச்சீரான உணவை பராமரிப்பது மிகவும் முக்கியம். கடைகளில் வாங்கப்படும் இனிப்புகளில் சர்க்கரை, மைதா மற்றும் செயற்கை நிறமிகள், சுவையூட்டிகள் அதிகமாக இருக்கலாம். வீட்டிலேயே ஆரோக்கியமான பொருட்களைப் பயன்படுத்தி பலகாரங்களைத் தயாரிப்பதன் மூலம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்; அதே சமயம் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். தாயின் ஆரோக்கியத்திற்கும், கருவின் வளர்ச்சிக்கும் போதுமான தண்ணீர், இளநீர் மற்றும் புதிய பழச்சாறுகள் மூலம், உடலை நீரேற்றத்துடன் வைத்து இருப்பது மிகவும் முக்கியம். பட்டு, ஜார்ஜெட், பாலியெஸ்டர் ஆடைகளை அணியாமல், கர்ப்பிணி பெண்கள், இலகுவான, காற்றோட்டம் அளிக்கக் கூடிய பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. ஏனெனில், எளிதாக நடமாட முடியும்; வசதியாக இருக்கும்; அகல் விளக்குகள், பட்டாசுகளிலிருந்து வரும் தீ ஜீவாலைகளுடன் தொடர்பு கொள்ளும் அபாயத்தைக் குறைப்பது பாதுகாப்பானது. தீபாவளிக்கு முன் வீட்டை சுத்தம் செய்வது, அலங்காரம் செய்வது, குறிப்பாக பூக்களைக் கையாளுதல் போன்றவை பெரும்பாலும் துாசி, ஒவ்வாமை, சுவாச கோளாறுகளைத் துாண்டக்கூடும். முடிந்தவரை, கர்ப்பிணிகள் இவற்றை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. இரைச்சல், மாசுபாடு, காயங்கள், தேவையற்ற உடல் உழைப்பு செய்யாமல், பண்டிகை நாளை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அசாதாரண அறிகுறிகள் ஏற்படும் போதெல்லாம் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதும், கூடுதல் மன அமைதியை தரும். டாக்டர் நந்தினி எல். மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர், ரெயின்போ மருத்துவமனை, சென்னை. 89390 04553 drnandhini.l@rainbowhospitals.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

mainapproach
நவ 09, 2026 17:38

நம்மாளுங்க கேட்பானுங்களா, அவர்களுக்கு யார் செத்தாலும் பரவாயில்லை, இயற்கை எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை. அவர்களுக்குஉ அந்த வினாடி சதோஷம் வேணும். அதனாலதான் நாம் இன்னும் அடுத்தவர்களின் கண்டுபிடிப்பை கையேந்தி கொண்டு இருக்கிறோம்.


Rajasekar Jayaraman
நவ 08, 2026 10:01

மதம் சார்ந்த பதிவு இது.


Nagalakshmi G
நவ 16, 2026 17:07

God is real Life given so many Healpes for Human But Humaan not accept they going New ways so there are many Disable Dista fence geting hersel க They are so many irita tastinger இன்


மேலும் செய்திகள்