உடல் மெலிய, "உவ்வே மருத்துவம் தேவையா
உடல் மெலிய எத்தனையோ வழிகள் உள்ளன. சாப்பாட்டை தவிர்க்கலாம்; கொழுப்பு சத்துள்ள உணவை தவிர்க்கலாம்; உடற்பயிற்சி செய்யலாம்; அளவோடு சாப்பிடலாம். ஆனால் சிலர், சிறுகுடலை வெட்டி எடுத்து, பெருங்குடலுடன் இணைத்து, உணவின் சத்து உடலில் சேரவிடாமல் செய்கின்றனர். இன்னும் சிலர், ஒருபடி மேலேபோய், தோலுக்கடியில் இருக்கும் கொழுப்பை 'லெபோ சக்ஷன்' சிகிச்சையில் உறிஞ்சி எடுக்கின்றனர். இதில் தோல், வயதானவர்கள் போல தொய்ந்துவிடும். பிறகு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் தேவைப்படும்.இத்தனைக்கும் மேலாக, புதிதாக அருவருக்கத்தக்க முறையில், சிலர் உடல் மெலிய முயற்சிக்கின்றனர். குடல் புழுக்களிலேயே அருவருக்கத்தக்கது 'நாடாப்புழு'. 20 அடி முதல் 30 அடி நீளம்வரை இருக்கும். இவை நாம் சாப்பிடும் சத்தை உறிஞ்சுகிறது என்றுகூறி, இவற்றையே உயிரோடு சாப்பிடவும் துணிந்து விட்டனர். இதையடுத்து சில கம்பெனிகள் முளைத்து, நாடா புழுக்களின் முட்டைகளை உடல் மெலிய வைக்கும் 'கேப்ஸ்யூல்'களில் அடைத்து, விற்கவும் முன்வந்துள்ளன. அதையும் நம்பும் மக்கள், உடல் மெலிய வேண்டுமே என்பதற்காக, சாப்பிடத் துவங்கிவிட்டனர். இதன் விளைவு, இப்புழுக்களின் முட்டைகள், உடலின் எல்லா பாகங்களுக்கும் பரவி, உயிர்க்கொல்லியாக மாறுகின்றன. குறிப்பாக, மூளை, தசையை தாக்கி உயிரைக் கொல்கின்றன.நிறைய கம்பெனிகள், உடல் மெலியும் உணவுப் பொருட்கள் என்ற பெயரில், உடல் மெலியும் பவுடர்கள் எனக்கூறி, எவ்வித அரசு அனுமதியும் பெறாமல், மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றன. இதை உயிர்கொல்லும் கெமிக்கல் எனத் தெரியாமல் மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட பலவிதமான சரக்குகள் உண்டு. இதில் 'சிபுடிரமின்' என்ற ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இது, மூளையில் உள்ள பசியைத் தூண்டும் உணர்வை கெடுத்துவிடும். பிறகென்ன, பசியே இருக்காது. எல்லா நோயும் உங்களை சுலபமாக தொற்றும். இதனால் வரும் விளைவோ, கன்னத்தில் குழிவிழுந்து, இளம் வயதிலேயே முதியோர் தோற்றம். இந்த 'சிபுடிரமின்' உலகளவில் தடை செய்யப்பட்ட மருந்து. ஆனால் கள்ளச்சந்தையில் ஏமாறும் மக்களுக்காக, திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது. அப்படியெனில் எப்படி உடல் மெலிவது. அதற்கு, ஆரோக்கியமான வழிமுறைகளே நல்லது. இதோ சில எளிய வழிகள்: * சாப்பிடும் அளவை படிப்படியாக குறைக்க வேண்டும்.* அசைவ உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும்.* காய்கறிகளை அளவிற்கு மேல் உண்ணுதல் கூடாது.* எண்ணெய் பலகாரங்களை அளவோடு சாப்பிட வேண்டும். வடை பிடித்தமான உணவு என்றால், ஐந்து வடைகள் சாப்பிடுவதை, 2 ஆக குறைத்துக் கொள்ள வேண்டும். * உடற்பயிற்சி அவசியம். 'வீட்டில் நன்கு வேலை செய்கிறேன். எனக்கு உடற்பயிற்சி அவசியம் தேவையா' எனக் கேட்கக் கூடாது. உடல் உழைப்புவேறு; உடற்பயிற்சி வேறு. உடல் உழைப்பு உடல் மெலிய உதவாது. பெண்கள் வீட்டில் சாப்பாடு மிஞ்சுகிறதே என, மிச்சம் உள்ள உணவை வயிற்றில் கொட்டிக் கொள்ளக் கூடாது. வேறு யாருக்காவது கொடுத்துவிடலாம். பிறகென்ன, நீங்கள் மெலிந்து 'ஸ்லிம்' ஆக காட்சியளிப்பீர்கள். - டாக்டர் வி.நாகராஜன்,மதுரை. 0452-232 5123