குடல்வால்
சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் உருவாகும், வால் போன்ற பகுதிதான், குடல் வால். இங்கு, ஏற்படும் அழற்சியை தான், குடல் வால் அழற்சி (அப்பெண்டிசிடிஸ்) என, கூறுகிறோம். இது, சிறிய சிவந்த வால் பகுதி போல இருக்கும். இது, சாதாரணமாக யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இன்றைய மருத்துவ வளர்ச்சியில், இந்த அழற்சியை மிகவும் எளிதான முறையில் அகற்றிவிடலாம். தொப்புள் வலி தான், குடல் வால் அழற்சி ஏற்பட உள்ளது என்பதற்கான, முதல் அறிகுறி. தொப்புள் பகுதியிலும் வயிற்றின் கீழ் வலதுபுறத்திலும், வலி ஏற்படும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், கீழ் வயிற்று பகுதியிலோ அல்லது வேறு வயிற்று பகுதிகளிலோ வலிகள் ஏற்படலாம். தூங்க முடியாத அளவுக்கு, வயிற்று பகுதியில் வலி ஏற்படும். அது, சாதாரண வயிற்று வலி போல இருக்காது. என்ன உணவு சாப்பிட்டாலும் குமட்டல் ஏற்படுவது போல இருக்கும். அடிக்கடி வாந்தியும் வரும். இவ்வாறான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக, தகுந்த மருத்துவரிடம், பரிசோதித்து கொள்ள வேண்டும்.குடல் வால் அழற்சி ஏற்பட்டுள்ளதற்கான முக்கிய அறிகுறிகளாக, வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளையும் கருதலாம். இதில், மற்றொரு அறிகுறியாக கூறப்படுவது வாயு பிரச்னை. தற்போது, இதற்கு எளிமையான முறையில், நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம், அகற்றப்பட்டு தீர்வு காணப்படும். இதுவே, தீவிரமான நிலையில் இருந்து, அந்த குடல்வால் பகுதி வெடித்து விட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.மா. வெங்கடேசன், உடற்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்.