உள்ளூர் செய்திகள்

மூட்டு வலி போகும்

உடல் பருமன் ஒரு நோய் அல்ல என்றாலும், பல்வேறு நோய்கள் வர உடல் எடைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிகமான உடல் எடை, காலின் மூட்டு பகுதியை தாக்குகிறது. நடக்கவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், இவர்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது. எல்லா வலிகளையும் போல, மூட்டு வலி வரவே கூடாது என்பது தான் இவர்களின் கூக்குரல். அதிகளவு காபி, தேநீர் அருந்துதல், அதிகளவு எண்ணெய் உணவுகள் உட்கொள்தல், உணவில் உப்பு அதிகம் சேர்த்தல், வெள்ளைச் சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் சாப்பிடுதல், அசைவ உணவு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை அதிகளவு சேர்த்துக் கொள்வது, மூட்டு வலிக்கு காரணமாகின்றன. மன உளைச்சல், பயம், மன சோர்வுகளால் தூக்கமின்மை ஏற்பட்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் இயக்கம் சீர் குலைந்தால், மூட்டு வலி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அதிக உடல் எடையால், மூட்டு வலி வந்து அவதிப்படுவோர், இயற்கையான உணவு முறையை பின்பற்றி எடையை குறைத்து மூட்டுவலியை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, கொள்ளுப்பயறு சிறந்த இயற்கை உணவு. கொள்ளு பருப்பில் ரசம் வைத்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வாரத்தில் மூன்று முறை இதை எடுத்துக் கொள்ளலாம். நரம்பு பிடிப்பால் ஏற்படும் மூட்டு வலியை, முருங்கையும், முடக்கற்றானும் சரி செய்யும்.எண்ணெய் இல்லாத உணவுகள், எவ்வித மூட்டு வலியையும் போக்கும். வெள்ளைப்பூண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஓட ஓட விரட்டும். வஜ்ராசனம், பத்மாசனம், உட்கட்டாசனம், விருச்சிகாசனம் உட்பட ஆசனங்கள் செய்த பின், சாந்தி ஆசனம் செய்து வந்தால், மூட்டு வலி போயே போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்