உள்ளூர் செய்திகள்

வழிகாட்டுகிறார் வருணபகவான்

தண்ணீருக்காக குழாயடியில் பல மணி நேரம் காத்திருப்போர், லாரியின் பின்னால் குடங்களுடன் ஓடுவோரை பல இடங்களில் இன்றும் பார்க்கிறோம். இந்த காட்சிகளை பார்த்து மழை நீரை பாதுகாத்து அதன் மூலம் தண்ணீர் தேவைகளை நிறைவேற்றி வருகிறார் மதுரை அவனியாபுரம் பராசக்திநகரை சேர்ந்த சேகர். விமானப்படை, கனரா வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அவர் மனம் திறக்கிறார்...எனது வீட்டின் மொட்டைமாடி 700 ச.அடி. மொத்தமாக மழைத் தண்ணீரை ஒரே குழாயில் வருமாறு வடிவமைத்து அருகில் ஒரு தண்ணீர் தொட்டியும் கட்டி உள்ளேன். மழைபெய்யும் போது தண்ணீரை வாளி மூலம் பிடித்து வீட்டில் பிரத்யோகமாக வாங்கி வைத்துள்ள அனைத்து பாத்திரங்களிலும் நிரப்பி வைத்துவிடுவேன். அதிகமாக தண்ணீர் வந்தால் தொட்டியில் நிரப்புவேன். நேரம் கிடைக்கும் போது இந்த தண்ணீரை வடிகட்டி சுத்தமான இடத்தில் வைத்துவிடுவேன். தேவையான போது கொதிக்க வைத்து குடிப்பதற்கும் பயன்படுத்துவேன். 19 ஆண்டுகளாக இதே முறையை பின்பற்றுகிறேன். சேகரித்து வைத்துள்ள தண்ணீர் காலியாகும் போது வருணபகவான் வழிகாட்டி விடுவார். வீட்டிற்கு வரும் நண்பர்கள், உறவினர்கள், "இது என்ன மூலிகைத் தண்ணீரா' என கேட்டு, அருந்துவார்கள். நீங்களும் இனி தண்ணீருக்காக லாரியின் பின்னால் ஓடவேண்டாம். குழாய்களில் தண்ணீர் எப்போது வரும் என தவம் கிடக்க வேண்டாம். நீங்களும் முயற்சிக்கலாமே, என்கிறார். இது போன்று உங்கள் வீடுகளிலும் முயற்சிக்கலாமே. தண்ணீர் இல்லாத காலத்தில், இது சரியான தீர்வாக அமையும்தானே. சந்தேகம் இருந்தால் அவரிடமே 98943 00626ல் கேளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !