"எனது குழந்தை ஒல்லியாக இருக்கிறானே
என் தந்தையின் நுரையீரலில் புற்றுநோய் கட்டி உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற, 'பெட் ஸ்கேன்' (PET Scan) செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இது எதற்காக?உங்கள் தந்தைக்கு நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருந்தாலும், சில சமயங்களில் புற்றுநோய் நுரையீரலை மட்டும் பாதிக்காது. உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கக் கூடும். அதை கண்டறிய 'பெட் ஸ்கேன்' உதவியாக உள்ளது. இந்த ஸ்கேன் செய்வதற்கு முன், ஒருவித 'டை'யை உடலுக்குள் செலுத்துவார்கள். இந்த 'டை'யை புற்றுநோய் செல்கள் உறிஞ்சிக் கொள்ளும். அதனால் உடலில் எங்கெல்லாம் புற்றுநோய் கட்டிகள் உள்ளனவோ, அங்கெல்லாம் 'டை' யின் வண்ணத்தை கொண்டு பாதிக்கப்பட்ட, பகுதியை கண்டறிய முடியும். மேலும், புற்றுநோய் கட்டியின் தன்மையையும் அதன் தீவிரத்தையும் கண்டறிய முடியும். புற்றுநோய்க்கான வைத்திய முறைகளான, ஹீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி முடிந்தவுடன், நோயின் தன்மை குறைந்துள்ளதா என்பதை கண்டறியவும் உதவியாக இருக்கிறது. சி.டி.ஸ்கேனில், இது இயலாது. அதனால் புற்றுநோயாளிகளுக்கு 'பெட் ஸ்கேன்' மிகவும் உதவியாக உள்ளது. எனக்கு மூச்சுத் திணறல் இருந்தது. இதற்காக, ஓராண்டாக இன்ஹேலர் பயன்படுத்தி வருகிறேன். ஆனாலும், என் நுரையீரல் திறன் 60 சதவீதமாகவே உள்ளது? என டாக்டர் கூறுகிறார். நுரையீரல் திறனை அதிகரிக்க நான் என்ன செய்ய வேண்டும்?மூச்சுத் திணறலுக்கு இன்ஹேலர் நல்ல சாதனம். இதனால் மூச்சுத் திணறலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், இன்ஹேலரால் நுரையீரல் திறனும் அதிகரிக்கும். நுரையீரல் திறன் நன்கு அதிகரிக்க, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் ஊஉ ங1 எனப்படும் உங்கள் நுரையீரலின் திறன் நன்கு அதிகரிக்கும். ஆகையால் தினமும், உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்ய பழகுங்கள்.எனது 5 வயது குழந்தைக்கு, கடந்த ஆண்டு, பிரைமரி காம்ப்ளக்ஸ் இருந்தது. அதற்கு 6 மாதம் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டது. தற்போது குழந்தை நன்கு சாப்பிட்டாலும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, சற்று ஒல்லியாக இருக்கிறது. எனது குழந்தையும் குண்டாக, பசியை தூண்டும் டானிக் கொடுக்கலாமா?உங்கள் குழந்தையை, மற்ற குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். உங்கள் குழந்தையின் உடல் எடை, அதன் உயரத்திற்கு ஏற்ப உள்ளதா என்று கண்டறியுங்கள். மேலும் அது சுறுசுறுப்பாக உள்ளதா எனவும், படிப்பில் நல்ல கவனத்துடன் உள்ளதா? எனவும் கவனித்து வாருங்கள். குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருந்தால், அதை, 'சைல்டுஹூட் ஒபிசிட்டி' என்பர். 'சைல்டுஹூட் ஒபிசிட்டி' யால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், பிற்காலத்தில் 'அடல்ட் ஒபிசிட்டி' யால் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு உணவை திணிக்காதீர்கள். உடற்பயிற்சிகளை கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருந்தால் போதுமானது. குண்டாக இருக்கத் தேவையில்லை.- டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425-24147