டாக்டரை கேளுங்கள்
மகிஷாதேவி, மதுரை: என் வயது 24, வேலை காரணமாக உணவை நேரத்திற்கு சாப்பிடாமல் அடிக்கடி தவிர்க்கிறேன். இதனால் வயிற்றுவலியுடன் அல்சர் இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். தொண்டையில் புண் வருகிறது. அல்சர் காரணமாக தொண்டை புண் ஏற்படுமா?அல்சருக்கும் தொண்டை புண்ணிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இரவில் தாமதமாக அதிக உணவு சாப்பிட்டு உடனடியாக துாங்கச் செல்லும் போது செரிமானத்தின் போது வயிற்றில் அமிலம் சுரந்து அது உணவுக்குழாய் மூலம் தொண்டைக்கு வந்து சேரும். அமிலம் இரைப்பையில் தான் இருக்க வேண்டும். அது தொண்டைக்கு வந்தால் அரிக்க ஆரம்பித்து புண் உருவாகும். தொண்டையில் தொற்று என ஆன்டிபயாடிக், வலி நிவாரணி மாத்திரை பயன்படுத்தும் போது மீண்டும் அல்சர் அதிகரிக்கும்.இரைப்பையில் இருந்து அமிலம் சுரந்து உணவுக்குழாய் மூலம் தொண்டையில் மட்டுமல்லாமல் மூச்சுக்குழாய்க்கும் தெளிக்கப்படும். அது நுரையீரலுக்கு சென்று வறட்டு இருமல் ஏற்படும். சிலருக்கு குரலில் கூட மாற்றம் ஏற்படும். இந்த பிரச்னைகளை தவிர்க்க வேண்டுமெனில் மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிக்குள் இரவு உணவை மிதமான அளவு சாப்பிடுங்கள். இரவில் சாப்பிட்டதற்கும் துாங்குவதற்குமான இடைவெளி நேரம் 2 முதல் 3 மணி நேரம் இருக்க வேண்டும்.-- டாக்டர் சரவணமுத்துகாது, மூக்கு, தொண்டை நிபுணர் மதுரைபாலசுப்பிரமணிஒட்டன்சத்திரம்: குறை தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடுமா?ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடுவதற்கு உணவு மட்டும் காரணம் என கூற முடியாது. ஒரு சில நோய்களும் குறிப்பாக குறை தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் கொழுப்புச் சத்து கூடும். குறை தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு தைராய்டை துாண்டும் ஹார்மோன் (டி.எஸ்.எச்) அளவு ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.கல்லீரலில் கெட்ட கொலஸ்ட்ராலை பிரித்து பித்த நீரில் வெளியேற்றும் தன்மையை இந்த நோய் குறைத்து விடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அதிகரிக்கிறது. தைராய்டு பரிசோதனை செய்யும் போது லிப்பிட் பரிசோதனை சேர்த்து செய்வதன் மூலம் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு கூடுதலாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். குறை தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை மட்டும் குறைக்கும் மாத்திரைகளை எடுத்து கொள்வதுடன், குறை தைராய்டுக்கான மாத்திரைகளை காலையில் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.- டாக்டர் ஏ.ஆசைத்தம்பி, பொதுநல சிறப்பு மருத்துவர், ஒட்டன்சத்திரம்எஸ்.குணசுந்தரி, பெரியகுளம்: எனது 9 வயது அக்கா மகளுக்கு கண்ணில் துாசி விழுந்தது போல் வலி ஏற்பட்டது. இதனால் கண்விழி படலத்தில் லேசான சிவப்பு நிறமாக இருந்தது. அவர் கையால் அழுத்தி கண்ணை தேய்த்ததில் விழி படலம் முழுவதுமாக சிவந்துள்ளது. கண்ணில் தாய்ப்பால், விளக்கெண்ணெய் ஊற்றலாமா. இப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?தொடர் மழை பருவநிலை மாற்றத்தால் 'மெட்ராஜ் ஐ' வந்துள்ளது. இது சகஜமான ஒன்று. பயப்படவேண்டியதில்லை. 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை டாக்டர் ஆலோசனைப்படி சொட்டு மருந்தும், கண்ணில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக மருந்து கடைகளில் மருந்து வாங்கக்கூடாது. தாய்ப்பால், விளக்கெண்ணெய் கண்ணில் ஊற்றக்கூடாது. அது பக்கவிளைவை ஏற்படுத்தும்.டாக்டர் ஆர்.சரயு வெங்கடலட்சுமி, கண் அறுவை சிகிச்சை நிபுணர், மாவட்ட அரசு மருத்துவமனை பெரியகுளம்என். ஷர்மிளா, ராமநாதபுரம்: காலில் வீக்கம், மூச்சுத் திணறல், படபடப்பு அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்ன?உடலில் இரும்புச் சத்து குறைந்து ரத்த சோகை ஏற்பட்டால் இது போன்ற பிரச்னைகள் ஏற்படும். மாதவிடாய் பிரச்னைகள் இருப்பவர்கள், வயிற்றில் பூச்சி இருக்கும் குழந்தைகளுக்கு இது போன்ற இரும்பு சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.உடல் வெளிறுதல், அடிக்கடி படபடப்பு, சோர்வு, மூச்சுத் திணறல் இருந்தால் சிகிச்சை பெற வேண்டும். குடல், இரைப்பை பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் ரத்த சோகை ஏற்படும்.இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் புற்று நோய், காசநோய்கள் ஏற்படும். இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்பட்டவர்கள் உணவில் கீரை வகைகள், ஆட்டு ஈரல், பீன்ஸ், வெண்டை, வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவைகளை சேர்த்துக்கொண்டால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.-டி.முகமது ஜாபர் சாதிக், பொதுநல, சர்க்கரை நோய் தொற்று நோய் நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்அ.சண்முகம், சிவகங்கை: வறட்டு இருமல் வருவது எதனால், எவ்வாறு சரி செய்வது?வறட்டு இருமல் ஒரு அறிகுறி. இது தனிப்பட்ட நோய் அல்ல. ஒவ்வாமை, உணவு மற்றும் காற்று மாசு, சைனஸ் எனப்படும் மூக்கு சம்பந்தப்பட்ட பிரச்னை, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று, மருந்துகளின் பக்க விளைவு காரணமாக ஏற்படும். பொதுவாக வறட்டு இருமல் அதிகமாக இருந்தால் அவை எதனால் வருகிறது என்று தெரிந்துகொள்ள டாக்டரை அணுக வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்நீரில் உப்பு சேர்த்து கொப்பளித்தல் வேண்டும். அதிக காரம், புளிப்பு, அதிக உணவு உண்ணக்கூடாது. சாப்பிட்ட உடன் துாங்கக் கூடாது.- டாக்டர் கிருஷ்ணராஜன், உதவி பேராசிரியர், பொது மருத்துவம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கைசலீம், அருப்புக்கோட்டை: என் மகனுக்கு 10 வயதாகிறது. அவனுக்கு இடது மூளை - வலது மூளைக்கு என பயிற்சி அளிப்பதால் ஏதேனும் பயன் உண்டா?அடிப்படையில் உடலின் இடது பக்கத்தை வலது மூளையும், வலது பக்கத்தை இடது மூளையும் தான் கட்டுப்படுத்துகிறது. இடது பக்க மூளை மொழி, பேசுவதும், வலது பக்க மூளை பார்ப்பது, இடைவெளி நுண்ணறிவு போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். எல்லோருக்கும் இந்த இரண்டுமே செயல்படும். மூளையின் பின்புறமான அசிப்டல் லோப் மூலம் நிறம், வடிவம் கண்டறிய முடியும். டெம்போரல் லோப் மூலம் குறுகிய கால நினைவு, பேசும் போது வார்த்தைகளை நினைவில் வைப்பது, வாசனை நினைவு செய்ய முடியும்.இது எல்லா மனிதர்களிடமும் உள்ளது. இதை எந்தளவு திறன்பட செய்கின்றனர் என்பது அவரவர் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை பொறுத்தது. இடது கையால் எழுதுவதால் எந்த பயனுமில்லையா என்று கேட்டால் அவ்வாறு கூற முடியாது. இடது கையால் எழுதுவது போன்ற சிறு விஷயங்கள் மூளைக்கு ஷாக் கொடுக்கும். எப்போதும் செய்யும் பழக்கத்தை மாற்றி செய்வதை நியூரோபிக் ஆக்டிவிட்டிஸ் என்போம். இதன் மூலம் மூளைக்கு ஆக்சிஜன் அதிகமாக போகும். இதனால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். வலது, இடது பக்க மூளையை பயிற்சி அளிப்பது என்பதே தவறான கருத்து.ஆனால் நம்மால் நியூரோபிக்ஸ் ஆக்டிவிட்டிஸ் மூலம் மூளையை நன்றாக பார்த்து கொள்ளலாம். செருப்பு போட்டு நடந்தால் பின்னர் செருப்பு இல்லாமல் நடப்பது, மண்ணில் விளையாடுவது ஆகியவை மூளைக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகப்படுத்தும்.- ஆர்.ஸ்வர்ணகீர்த்திகா, கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், விருதுநகர்