உள்ளூர் செய்திகள்

டாக்டரை கேளுங்கள்!

சீத்தாலட்சுமி, மதுரை: எனக்கு வயது 40, மூட்டுவலியால் அவதிப்படுகிறேன். எலும்பின் அடர்த்தி குறைவாக உள்ளதென டாக்டர் தெரிவித்தார். மாத்திரை பரிந்துரைத்துள்ளார். மூட்டு வலி வராமல் இருக்கவும் எலும்பை பலப்படுத்தவும் வழி உள்ளதாஇளம் வயதில் இருந்தே பால், பால்சார்ந்த பொருட்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். அடர் பச்சைநிற காய்கறிகள், கீரைகளை சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள புரதச்சத்து மூட்டுகளில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதால் அங்குள்ள குருத்தெலும்பு தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கப்படுகிறது. உடல் எடை சரியாக இருந்தால் மூட்டுவலியை தவிர்க்க முடியும். முழங்கால் மூட்டுக்கு வலிமை தரும் யோகாசன பயிற்சிகள் உள்ளன. அவற்றை முறைப்படி கற்றுக்கொண்டு பயிற்சி செய்யலாம்.தர்பூசணியில் கால்சியம் நிறைவாக உள்ளது. பட்டாணி கடலை, பொரிகடலை, எள்ளுருண்டை, முந்திரி, பாதாம், வாதுமை ஆகியவற்றை மாலைநேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். எலும்புகள் வலிமை பெறுவதற்கு கால்சியம், கொலாஜன் பாஸ்பரஸ் சத்துகள் அவசியம். தினமும் சராசரியாக 1200 மி.கி., கால்சியம் சத்து தேவைப்படும். பால் சாப்பிடாதவர்கள் தயிர், மோர், பாலாடை, வெண்ணெய் சாப்பிடலாம். கெளுத்தி, நெத்திலி, வஞ்சரம், மத்தி மீன்களை சாப்பிடலாம். முள்ளங்கி கீரை, பசலை கீரை, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லியில் கால்சியம் அதிகம் உள்ளது. கால்சியம் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிட்டாலும் அவை குடலில் கிரகிக்கப்படுவதற்கு விட்டமின் டி சத்து தேவை. தினமும் சிறிதுநேரம் உடலில் சூரியஒளி படும் படி நிற்பதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் விட்டமின் டி தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது.- டாக்டர் கணேசன், பொதுமருத்துவ நிபுணர், ராஜபாளையம்ரேவதி, குச்சனுார்: எனது மகளுக்கு வயிற்றின் இடது பகுதியில் கட்டி உள்ளது. இது புற்றுநோயாக இருக்குமா. புற்று நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்.புற்று நோய் மரபு வழியும் ஏற்படுகிறது. புற்று நோயை பொறுத்த வரை உடம்பின் உள் பகுதியில் கட்டியாகவும், வெளிப்பகுதியில் புண்ணாகவும் தோன்றும். புற்றுநோய் என்பதை உறுதிப்படுத்த 'பயாப்சி ' எடுத்து பரிசோதிக்க வேண்டும். ஹீமோதெரபி,ரேடியோ தெரபி மூலம் சிறிய கட்டிகளை சரி செய்து விடலாம். ஆனால் பெரிய கட்டிகளை கரைக்க முடியாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் வருகிறது. புற்று நோயில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலையிலேயே டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை பெற்றால் எளிதாக குணப்படுத்தி விடலாம். பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட காய்கறிகளை தவிர்த்து, மாடி தோட்டம் அமைத்து நாமே உற்பத்தி செய்து காய்கறியை பயன்படுத்தலாம். குறிப்பாக பாக்கெட் உணவுகளை எடுத்து கொள்ளக்கூடாது. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். - டாக்டர் டி. பாரதி, புற்றுநோய் சிறப்பு மருத்துவர், கம்பம்அ.சந்தோஷ், சிவகங்கை: ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறதுரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணி, பூச்சிகள், உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும் போது அவர்களுக்கு ஸ்க்ரப் டைப்ஸ் நோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்படுவோருக்கு காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, தடிப்பு, உடல் அரிப்பு ஏற்படும். இவ்வாறு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கல்லீரல், சிறுநீரகங்களில் பாதிப்பை உருவாக்கும். மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிகளவில் நோய் பாதிப்பு ஏற்படும். காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் 5 முதல் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.- டாக்டர் கிருத்திகா, பொது மருத்துவம், உதவி பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.சிவசங்கர், சிவகாசி: எனது குழந்தைக்கு ஐந்து வயது ஆகிறது. அடிக்கடி சளி பிடித்து விடுகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்.காலநிலை மாற்றம் எப்போது ஏற்பட்டாலும் சளி பிடிப்பது இயல்புதான். பொதுவாக குளிர்காலத்தில் தாகம் எடுக்காததால் தண்ணீர் அதிகமாக குடிப்பதில்லை. நீர்ச்சத்து குறைவால் சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது. கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடிக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் ஆடுதொடா டானிக், இருமல், சளிக்கும் பால சஞ்சீவி மாத்திரை குழந்தைகளுக்கு கொடுக்கப்படும். வீட்டிலேயே இதற்கான தடுப்பு மருந்தாக கிராம்பு, சித்தரத்தை, ஏலக்காய், கற்பூரவள்ளி இலை, துளசி, துாதுவளை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய பின்னர் குடிக்க வேண்டும். இது சளி பிடிக்காமல் தடுப்பதற்கு உதவும்.- டாக்டர் மணிமேகலை, சித்த மருத்துவர், அரசு மருத்துவமனை, சிவகாசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்