உள்ளூர் செய்திகள்

டாக்டரை கேளுங்கள்...

கார்த்திகேயன், மதுரை: இதயத்தில் 'ஸ்டென்ட்' பொருத்தியிருப்பதை நம்மால் உணர முடியுமா. இதற்கு காலாவதி தேதி உள்ளதா. உடற்பயிற்சியின் போது 'ஸ்டென்ட்' நகர வாய்ப்புள்ளதா?ஒருவரின் இதயத்தில் 'ஸ்டென்ட்' பொருத்தியிருந்தாலும் அதை அவரால் உணர முடியாது. 'ஸ்டென்ட்' கரைந்து விடாமல் தமனியுடன் ஐக்கியமாகிவிடும் என்பதால் நகராது. ஒரு சிலருக்கே கரையும் 'ஸ்டென்ட்' பொருத்தப்படுகிறது. இதை பொருத்திய பின் முன்னெச்சரிக்கை தேவையில்லை என்றாலும் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்தம் கெட்டியாகாமல் இருக்கத் தட்டணுக்களின் செயல்பாடுகளைக் குறைக்கும் 'ஆன்ட்டி பிளேட்லெட்ஸ்' மருந்துகளை மறக்கும் பட்சத்தில் 'ஸ்டென்ட்'டின் உள்ளேயே ரத்தக்கட்டி உருவாகி உயிருக்கு ஆபத்தாகும். ரத்தக்குழாயை நன்றாக விரிவடையச் செய்வதே 'ஸ்டென்ட்' வேலை. வேறு பிரச்னை இல்லை. அதில் மறுபடியும் அடைப்பு வருவதும் வராததும் ஒவ்வொருவரின் உடம்பிலுள்ள பிற பிரச்னைகளை கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே அமையும்.- டாக்டர் பி.ஆர்.ஜெ., கண்ணன், இதயநோய் சிறப்பு நிபுணர், மதுரைவள்ளி, நத்தம்: எனக்கு வயது 26 ஆகிறது. கண்ணை சுற்றி கருவளையம் உள்ளது. எப்படி சரிசெய்வது? கண்ணுக்கு சரியான ஓய்வு கொடுக்காமல் கம்ப்யூட்டர் திரை, அலைபேசியை பார்ப்பது, போதுமான துாக்கமின்மை, வேறு ஏதாவது உள்நோய்கள் இருப்பது, பிறவியிலேயே எலும்புகள் கண்ணைச் சுற்றி உள்வாங்கியிருப்பது, அலர்ஜி, தோல் சுருக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகளை கூறலாம். சிலருக்கு பரம்பரையாகவே கண்ணைச் சுற்றி கருவளையம் இருக்கும். உங்களுக்கு எந்த பிரச்னையால் கருவளையம் ஏற்பட்டுள்ளது என்பதை பரிசோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும். இடையில் வந்த கருவளையம் என்றால் தோல் நோயாக இருக்கும். அதற்குரிய சிகிச்சை பெறவேண்டும். சுருக்கம் வராமல் இருக்க தோலுக்கு அடியில் 'பில்லர்ஸ்' பொருத்தும் நவீன வசதியும் உள்ளது. பழங்கள், காய்கறி, கீரை, உலர் பருப்பு என சரிவிகித உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான துாக்கம் அவசியம். வெயிலில் அலைவதை குறைக்க வேண்டும்.- டாக்டர் ரவி, ஓய்வு பெற்ற அரசு பொதுநல மருத்துவர், கோபால்பட்டிமீனலோஷினி, குமுளி: திருமணம் முடிந்த 12 மாதங்களில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் ஒன்றரை ஆண்டுகளாக வழங்கினேன். தற்போது தாய்ப்பால் வழங்குவதை நிறுத்தலாமா. அவ்வாறு நிறுத்துவதற்கான முறையான ஆலோசனை கூறுங்கள்?குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 2 வயது வரை குழந்தை தாய்ப்பால் பருகுவதால் மூளை வளர்ச்சியில் 80 சதவீதம் பூர்த்தி செய்கிறது. மனித உடலுறுப்புகளின் பரிணாம வளர்ச்சிக்கான அடிப்படை ஆதாரம் இவை. அதனால்தான் இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம், பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் 2 வயது வரை தாய்ப்பால் வழங்க அறிவுறுத்துகின்றனர். மீதியுள்ள 20 சதவீத மூளை வளர்ச்சியை ஊட்டச்சத்து உணவு முறைகளால் குழந்தை தாமாகவே பெற்றுவிடும்.குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போதே பிற இணை உணவு வழங்கும் போது தாய்ப்பால் பருகும் அளவு, 2 ஆண்டுகள் முடிந்த 2 மாதங்களில் படிப்படியாக பால் சுரக்கும் அளவு குறையும். அப்போதுதான் நிறுத்த வேண்டும். சிலர் 2 ஆண்டுகளுக்கு முன்பே தவிர்ப்பது குழந்தைகளுக்கான ஆரோக்கிய குறைபாட்டை தாயே ஏற்படுத்துவதற்கு சமமாகும். இதனை ஒருபோதும் செய்யாதீர்கள்.- டாக்டர் ஆர்.செல்வக்குமார், குழந்தைகள் நல சிகிச்சைத்துறை, அரசு மருத்துவக் கல்லுாரி, தேனிச.இனியவேல், சிவகங்கை: மழைக்காலத்தில் உடலை எவ்வாறு பராமரிப்பது?குளிர்ச்சியை தாங்குவதற்காக உடலின் உட்புற வெப்பம் தோலில் பரவி பயன்பட்டு விடுவதால் உடலின் உட்புற வெப்பம் குறையும். அதன் விளைவாக பசி குறைந்து உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாக நேரும். இக்காலங்களில் எளிதில் ஜீரணம் ஆகும் உணவு, புளிப்பு ,உப்பு சுவை நிறைந்த உணவு, வெந்நீர், தேன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உலர்ந்த ஆடைகளை அணிய வேண்டும். சுக்கு, திப்பிலி, மிளகு வேர், சித்திரமூல மூலிகைகளை சேர்த்து பொடி செய்து சிறிதளவு தேன் அல்லது மோரில் கலந்து சாப்பிடலாம். அடிக்கடி இருமல், சளி உள்ளவர்கள் தாளி சாதி சூரணம் என்ற மருந்தினை மாதம் 7 நாட்கள் தேனில் கலந்து உட்கொள்ளலாம். சிட்டிகை அளவு சீரகம் 10 மிளகு ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடிநீராக பயன்படுத்தலாம்.- டாக்டர் சரவணன், உதவி சித்த மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலைகி.ராசய்யா, சேத்துார்: இதய நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும். அதன் காரணிகள் என்ன?எண்பது சதவிகித இதய நோய்கள் தடுக்க கூடியவையே. இவை இரண்டு வகையாக ஏற்படுகின்றன. ஒன்று எடை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, நீரிழிவு நோய், புகை பிடித்தல், சோம்பேறித்தனமான கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் ஆகியவை. இரண்டாவது காரணம் வயது, பாலினம், குடும்ப வரலாறு, மரபியல் ஆகியவை. 30--40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் 10 வருட இதய நோய்க்கான அபாயத்தை மதிப்பிட வேண்டும். ஸ்கோர், பிரிவெண்ட், வூ போன்ற விளக்க படங்கள், ஆன்லைன் கால்குலேட்டர்களை பயன்படுத்தலாம்.ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து அடிப்படை கல்வியுடன் குழந்தை பருவத்திலிருந்தே இது குறித்து அறிவுறுத்த வேண்டும்.- டாக்டர் ஞானகுரு, இதய நோய் சிகிச்சை நிபுணர், ராஜபாளையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்