உள்ளூர் செய்திகள்

டாக்டரை கேளுங்கள்...

மதுமிதா, மதுரை: எனது 7 வயது பெண் குழந்தை சோர்வாக இருக்கிறாள். முகம் வெளிறி காணப்படுகிறது. ரத்தசோகையாக இருக்கலாம் என்கின்றனர் உறவினர்கள். இந்த வயதில் ரத்தசோகை ஏற்படுமா?ரத்த சிகப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து (ஹீமோகுளோபின்) அளவு குறைவதால் ரத்தசோகை (அனீமியா) ஏற்படுகிறது. ரத்தசோகையால் குழந்தையின் உடல், மன நலனில் பாதிப்பு ஏற்படும். பசியின்மை, அதீத சோர்வு, மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல் நோய்வாய்ப்படுதல், உடல் எடை குறைவு, ஊட்டச்சத்து பற்றாக்குறை, படிப்பில் கவனமின்மை, மறதி, படிக்கும் திறனில் பாதிப்பு ஏற்படும்.குழந்தை பிறந்த 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பிறகு திட உணவுகள் ஆரம்பிக்கும்போது தாய்ப்பாலுடன் பசும்பால், பாக்கெட் பால் அதிகளவு கொடுக்கும் போது இரும்புச்சத்து தேவையை பூர்த்திசெய்யாமல் விடுகின்றனர் பெண்கள். பசும்பால், பாக்கெட் பாலை ஒரு வயது வரை தவிர்த்து தாய்ப்பாலுடன் வீட்டில் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். 5 வயது வரை அரைலிட்டருக்கு மிகாமல் பசும்பால் கொடுக்கலாம். கீரை, பயறு, உளுந்து, சோயா, வெல்லம், கடலை, முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றில் இரும்புச்சத்து உள்ளதால் டாக்டர் பரிந்துரைபடி இந்த உணவுகளை கொடுக்கலாம்.டாக்டர் ஆலோசனைப்படி ஆண்டிற்கு இருமுறை பூச்சிமருந்து, இரும்புச்சத்து மருந்து கொடுக்கலாம். இரும்புச்சத்து மருந்துகளை உணவின் இடையில் கொடுத்தால் விரைவாக வேலை செய்யும். இந்த டானிக் பற்களில் பட்டால் கறை ஏற்படலாம் என்பதால் வாய் கொப்பளிக்க பழக்க வேண்டும். இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தாலும் இரும்புச்சத்து மருந்தினை கொடுக்கலாம்.- டாக்டர் முருகன் ஜெயராமன், குழந்தை மருத்துவ நிபுணர், மதுரைமாலதி, பழநி: ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய பயிற்சிகள் உள்ளதா?மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதற்கு எளிய பயிற்சிகள் உள்ளன. இடது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கையையும், வலது கை பழக்கம் உள்ளவர்கள் இடது கை பயன்படுத்த பழக வேண்டும். இதனால் மூளையில் இடது பாகம், வலது பாகம் ஒருங்கிணைந்து செயல்பட துவங்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது பாக மூளை செயல்படும். இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது பாகம் வேலை செயல்படும். இதனை மாற்றி பழக்கம் ஏற்படுத்தும் போது ௨ பாக மூளை பகுதிகளும் செயல்படும். குழந்தைகள் அதிக ஞாபக சக்தியை பெறுவர். முதியவர்களுக்கும் அல்சீமர் எனும் மறதி நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும். சில நேரங்களில் அமைதியாக அமர்ந்து ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்தால் மூளைக்கு அதிகளவு ஆக்சிஜன் சென்று புத்துணர்ச்சி ஏற்படும். அலைபேசியை அதிக அளவு பார்க்கும் பழக்கம் இருந்தால் தவிர்த்துவிட்டு புத்தகங்கள் படிக்க வேண்டும்.- டாக்டர் சங்கீதா, பொது மருத்துவர், பழநிஎஸ்.சாந்தி, பெரியகுளம்: பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோயிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?தவறான பழக்கவழக்கங்களினால் வரும் புற்றுநோய்க்கு மாறுபட்டு, பெண்மையின் ஹார்மோன் அதிக சுரப்பினால் மார்பக புற்றுநோய் வருவதற்கு சாத்தியம் அதிகம். குடும்பத்தில் முன்னோர் யாருக்கேனும் இருக்கும்பட்சத்தில் 20 வயதிலும், இயல்பாக 35 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.மார்பகங்களில் கட்டிகள், வீக்கம், தோல் நிறம் மாறுதல், காம்புகளில் ரத்தம் வடிதல் போன்றவை இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். கட்டிகள் இருந்து வலி இல்லை என்றாலும் அஜாக்கிரதையாக இருக்க கூடாது. வெட்கத்தால் வெளியில் சொல்லாமல் இருந்தால் நோய் அனைத்து இடங்களுக்கும் பரவி விடும். தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டது. மெமோகிராம் பரிசோதனை, ஹீமோ தெரபி, ரேடியோ தெரபி, அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பது எளிது. இதில் சில வகைகளை தவிர 100க்கு 94 சதவீதம் குணமாக்கலாம்.- டாக்டர் பாரதி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்எஸ்.ராதிகா, ராமநாதபுரம்: எனக்கு குழந்தை பிறந்து 5 மாதம் ஆகிறது. தாய்ப்பாலுக்கு பதில் உணவு கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது. தாய்ப்பால் நிறுத்தியதால் அவ்வாறு ஏற்படுகிறதா. எப்போது முதல் உணவு கொடுக்க வேண்டும்?குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும். 6 முதல் 2 வயது வரை தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகள் ஒவ்வொன்றாக கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்தி விட்டு கூழ், சோறு கொடுக்கும் போது வாந்தி போன்ற ஒவ்வாமை ஏற்படும். தாய்ப் பாலுடன் சேர்த்து இணை உணவாக இட்லி, சோறு, பழங்கள், முட்டையின் மஞ்சள் கரு உள்ளிட்டவற்றை கொடுத்தால் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படாது. தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் அரிதாக ஏற்படக்கூடியது. அப்போது பால் பவுடர், பசும்பால் கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். முதல் ஒரு மாதத்திற்கு 500 மி.லி., பசும்பாலில் 250 மி.லி., தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். பின் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கொடுத்தால் குழந்தைகளுக்கு சரியான அளவில் ஊட்டச்சத்து சென்றடையும்.- ஆர்.மலையரசு, குழந்தைகள் நல மருத்துவ நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம் ஆர். தேஜஸ்வினி, சிவகங்கை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தற்காத்து கொள்ள என்ன செய்யலாம்?தற்போது வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுக்காவிட்டால் புளு காய்ச்சலாக மாறும். காய்ச்சல் வந்த உடன் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிடில் காய்ச்சல், உடல் சோர்வு, இருமல், சளி அதிகரிக்கும். பத்து நாட்கள் கூட இதன் பாதிப்பு இருக்கும். சர்க்கரை, இதய நோய், கிட்னி பாதிப்பிற்கு சிகிச்சை எடுப்போருக்கு காய்ச்சலின் வீரியம் அதிகரிக்கும். லேசான காய்ச்சல் வந்தவுடன் டாக்டர்களிடம் உரிய சிகிச்சை எடுத்து விட வேண்டும். காய்ச்சல் வந்தவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணியவும். நன்கு கொதிக்க வைத்த நீரை பருக வேண்டும். நீர் சத்துக்கள் அதிகம் உள்ள குளிர்ச்சியில்லாத சாறுகளை அருந்த வேண்டும். காய்ச்சலுடன் பள்ளி, கல்லுாரிக்கு சென்றால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும். இதனை அறிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.- டி.சேதுபதி, பொது மற்றும் சர்க்கரை நோய் நிபுணர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கைகணேசன், அருப்புக்கோட்டை: எலும்பு முறிவுக்கு நாட்டு வைத்தியம், முட்டை பத்து போடலாமா?விபத்துக்களில் எலும்பு முறிந்தால், முதலில் அவர் சுய நினைவில் இருக்கிறாரா என பரிசோதனை செய்ய வேண்டும். பின்னர் எலும்பு முறிவு அடைந்த பகுதியை அசையாமல் கட்டி முதலுதவி செய்ய வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு டாக்டரின் ஆலோசனைபடி எக்ஸ்ரே எடுத்து தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும். வெளி காயம் ரத்தக் கசிவு ஏற்பட்டால் டாக்டர் அணுகி அவருடைய ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும். நாட்டு வைத்தியம் முட்டை பத்து போன்ற சிகிச்சைகளில் ஈடுபடக் கூடாது .இதனால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.- டாக்டர் அருணாச்சலம், எலும்பு முறிவு சிறப்பு நிபுணர், அருப்புக்கோட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்