உள்ளூர் செய்திகள்

டாக்டரை கேளுங்கள்...

மாதவன், மதுரை: நான் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இனி ரத்தக்குழாய் அடைப்பு வராது என்று கூறுவது சரியா. இதயத்தில் ஒன்றோ, இரண்டோ அடைப்புகள் இருந்தால் 'ஆஞ்சியோபிளாஸ்டி' என்றும் மூன்று அல்லது மேற்பட்ட அடைப்புகள் இருந்தால் 'பைபாஸ்' சிகிச்சை செய்ய வேண்டும் என்பது உண்மையா?பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த இடத்திலும், வேறு புதிய இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் அடைப்பு ஏற்படலாம். ரத்தக்குழாய் அடைப்புகளின் தன்மையைப் பொறுத்து முடிவுகள் மாறுபடும். ஒரு அடைப்பு உள்ளவருக்கு சில நேரம் பைபாஸ் அறுவை சிகிச்சையும், பல அடைப்புகள் இருந்தாலும் நான்கைந்து 'ஸ்டென்ட்' பொருத்தியும் சரி செய்யும் வாய்ப்புகள் உண்டு.- டாக்டர் பி.ஆர்.ஜெ., கண்ணன் இதயநோய் சிறப்பு நிபுணர், மதுரைஎம்.பார்த்திபன், ஜங்கால்பட்டி: சியாட்டிகா என்றால் என்ன. இதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன?நம் உடலின் இடுப்பு பகுதியில் உள்ள பெரிய நரம்பான சியாட்டிக் நரம்பில் ஏற்படும் அழுத்தம், எரிச்சல் ஆகியவற்றால் ஏற்படும் ஒருவித நரம்பு வலி இது. கீழ் முதுகு வலி, கால் வலி, காலில் கூச்ச உணர்வு , மரத்துப்போதல் பாதிக்கப்பட்ட காலில் தசை பலவீனம், இருமல் , தும்மலின் போது வலி ஏற்படுதல் அறிகுறியாகும் .முதுகெலும்பு இடையில் உள்ள வட்டு (டிஸ்க்) வெளியேறி நரம்பை அழுத்துதல், முதுகெலும்பு சுருக்கம், முதுகு எலும்பில் ஏற்படும் சிறிய வளர்ச்சி, காயம், முதுமை போன்றவை இதன் பாதிப்புகள். உடற்பயிற்சி, இயன்முறை சிகிச்சை, நரம்பு கடுமையாக பாதிக்கப்பட்டால் அறுவை சிகிச்சை முறை தேவைப்படும்.- டாக்டர் எஸ்.லோகநாதன், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை வேடசந்துார்.கே. ஜமுனா, கம்பம்: ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது மகளுக்கு கண்கள் சிவந்து காணப்படுகிறது. இதனை குணப்படுத்தவும், கண் பராமரிக்க ஆலோசனை கூறுங்கள்?ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்று வீசும் காலங்களில் கண்களில் தொற்று ஏற்படும். தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு கண்வலி ஏற்பட்டு கண்கள் சிவப்பு நிறமாக மாறி உள்ளது. இதற்கு அச்சப்பட வேண்டாம். கைகளால் கண்களை கசக்க கூடாது. கண்களையும், கைகளையும் அடிக்கடி கழுவ வேண்டும். அலைபேசி, டிவி பார்ப்பதை குறைத்து கொள்ள வேண்டும். கணினியில் பணிபுரிபவர்கள் 40 நிமிடங்களுக்கு ஒரு முறை 10 நிமிடங்கள் பிரேக் எடுத்து கொள்ள வேண்டும். படிக்கும் போது குறைந்தது ஒரு அடி தூரம் தள்ளி வைத்து படிக்க வேண்டும். பயன்படுத்தும் பெட்சீட், டவல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நல்ல தூக்கம், சுகாதாரமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்பட்டால் ஓய்வு கொடுக்க வேண்டும். கண் சிவந்திருந்தால் வைரஸ் பாதிப்பா அல்லது அலர்ஜியா என்பதை கண் டாக்டரிடம் காண்பித்து மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம்.- டாக்டர் ஆர். மகேஸ்வரி, தலைமை மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை சின்னமனுார்த.சிவசங்கரி, ராமநாதபுரம்: நான் கருவுற்று 7 மாதங்கள் ஆகிறது. சமீப காலமாக பல் வலி அதிகரித்துள்ளது. இதற்கு மருந்து எடுப்பதால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?கர்ப்ப காலத்தில் பல் வலி ஏற்பட்டால் அவற்றிற்கு தீர்வு காண்பது கடினம். பல் வலிக்கான மருந்து எடுக்கும் பட்சத்தில் குழந்தைக்கும் அதன் பாதிப்பு ஏற்படும். கருவுற்றதில் இருந்து 4 மாதத்திற்குள் பல் வலி வந்தால் மருந்து எடுக்கலாம். அதற்கு மேல் மருந்து எடுக்கக்கூடாது. பல் வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் உப்புநீர், குளோரெக்சிடின் போன்றவை மூலம் வாய்க் கொப்பளிப்பதால் வலியை கட்டுக்குள் வைக்க முடியும். பெண்களுக்கு 18 வயதில் கடவாய் பல் முளைக்கும். அப்போது அந்த பல் நேராக முளைத்தால் எந்த பிரச்னையும் இல்லை. அதே நேரத்தில் சிலருக்கு கோணலாக முளைக்கும். அதை கவனிக்காமல் விடும் போது பின்னாட்களில் வலி ஏற்படும். இளம் வயது பெண்கள் தங்களின் பற்களை அவ்வப்போது பரிசோதனை செய்வதன் மூலம் கருவுற்ற சமயத்தில் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.- டாக்டர் ஆர்.ஷாஜகான், பல் மருத்துவ நிபுணர், ராமநாதபுரம்எஸ். சுபாஷினி, சிவகங்கை: வயது 20க்குள் கர்ப்பம் அடையும் பெண்களுக்கு பிரசவத்தின் போது எவ்விதமான பிரச்னை ஏற்படும்?பொதுவாக 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும். இதனால் பிரசவ நேரங்களில் ரத்த போக்கு அதிகரிப்பதோடு, மூச்சு திணறலும் ஏற்பட்டு பிரசவத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி விடும். குழந்தையும் பாதிப்பை சந்திக்கும். இதை தவிர்க்க வயது 21 பூர்த்தியான பின் தான் திருமணம் முடிக்க வேண்டும் . அப்போது தான் கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை, ரத்த போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படாது. கர்ப்பம் உறுதியான முதல் மாதத்தில் இருந்தே புரதசத்து நிறைந்த பழங்கள், முட்டை வெள்ளை கரு, முளைகட்டிய பயிர்களை தான் அதிகம் சாப்பிட வேண்டும். தற்போது பனிக்காலமாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு லேசான காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் உடனே டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிடில் மூச்சு திணறல் ஏற்படும்.- டாக்டர் எம்.சிந்துஜா, மகப்பேறு மருத்துவர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கைசுந்தரம், சிவகாசி: எனக்கு 35 வயது ஆகிறது. லோடுமேன் வேலை செய்து வருகிறேன். அடி வயிறு வீக்கமாக உள்ளது. அடிக்கடி வலி ஏற்படுகின்றது. எவ்வாறு சரி செய்யலாம்?அடிவயிறு வீக்கமாக இருப்பதால் குடல் இறக்கமாக இருக்கலாம். அதிக எடையை துாக்குவதால் குடல் இறக்கம் ஏற்படும். அதிக எடையை துாக்கக்கூடாது. வேறு வழி இன்றி துாக்குவதாக இருந்தால் கண்டிப்பாக பெல்ட் அணிய வேண்டும். மருந்து மாத்திரையில் இது சரி ஆகாது. பரிசோதனை செய்து குடல் இறக்கமாக உறுதி செய்தால் கண்டிப்பாக லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதனால் முழுமையாக சரியாகும்.- டாக்டர் பாரத், அறுவை சிகிச்சை நிபுணர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, சிவகாசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !