உள்ளூர் செய்திகள்

டாக்டரைக் கேளுங்கள்

மலர்விழி, மதுரை: ஹோமியோபதியில் புற்றுநோய் சிகிச்சை உண்டா?பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நோயை எதிர்த்துப் போராடவும் குணப்படுத்தவும் உதவும் ஒரு மாற்று மருத்துவ அணுகுமுறையே ஹோமியோபதி. நோயாளிகளின் ஒட்டுமொத்த உயிர் சக்தியை அதிகரிப்பதன் மூலமும் நோய்களை எதிர்த்துப் போராட உடலை வலுப்படுத்துவதன் மூலமும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகும். ஹோமியோபதியிலும் இதே நோக்கத்துடன் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் புற்றுநோயின் நிலையை பொறுத்து மருந்துகளும் சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகின்றன.ஹோமியோபதி புற்றுநோய் சிகிச்சையானது வழக்கமான சிகிச்சைகளின் கொடூரமான பக்க விளைவுகள் இருக்காது.- டாக்டர் மதுமிதா, ஹோமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை.சித்ரா, பழநி: குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கில் கூடுதல் கவனம் தேவை. குழந்தைகள் தரையில் கிடக்கும் பொருட்களை எடுத்து வாயில் வைப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களை கொடுப்பதாலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது.நீர்ச்சத்து குறையாமல், தோல் வறட்சியாகாமல், குழந்தை சோர்ந்து விடாமல் பார்த்து கொள்வது அவசியம். இளநீர், ஜூஸ், உப்புக்கரைசல் போன்றவற்றை வழங்க வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.- டாக்டர் சங்கீதா, பழநி.குணசேகரன், தேனி: எனக்கு 58 வயதாகிறது. பல ஆண்டுகளாக புகைப்பிடித்தேன். இரு மாதங்களாக புகைப்பிடிப்பதை நிறுத்தி உள்ளேன். ஆனால் தொடர்ந்து இருமல் வருகிறது. இதனை எப்படி நிறுத்துவது. மீண்டும் புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை எவ்வாறு தவிர்க்கலாம்?பீடி, சிகரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கும். புகைப்பதை நிறுத்திய பின் சி.டி.,ஸ்கேன் அல்லது எக்ஸ் ரே மூலம் எவ்வளவு சதவீதம் நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் சி.டி.,ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து பாருங்கள் நுரையீரல் பாதிப்பில் இருந்து குணமடைந்தது தெரியும். புகை பழக்கத்தால் நுரையீரல் பாதித்து இருமல் தொடர்ந்து வரும்.தினமும் துாங்கி எழுந்ததும் உடனே புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் முழுமையாக புகைப்பிடிப்பதை நிறுத்துவது சிரமம். ஆனால், துாங்கி எழுந்து 2, 3 மணிநேரத்திற்கு பிறகு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த இயலும். புகைக்கும் பழக்கத்தை நிறுத்தியவர்கள், மீண்டும் புகைக்க தோன்றினால் டாக்டர்கள் பரிந்துரையில் நிக்கோட்டின் கம்ஸ் சில நாட்கள் பயன்படுத்தி பிறகு முழுமையாக புகைப்பதை தவிர்க்கலாம்.- டாக்டர் எஸ்.நிரஞ்சன் பிரபாகர், நுரையீரல் சிறப்பு நிபுணர், தேனி.விஜயலெட்சுமி, ராமநாதபுரம்: எனக்கு 35 வயது. இரண்டு முறை கர்ப்பம் தரித்து ஆரம்ப நிலையிலேயே கருச்சிதைவு ஏற்பட்டது. இதற்கு காரணம் என்னவாக இருக்கும். மீண்டும் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க என்ன சிகிச்சை தேவை?பெண்களுக்கு பி.சி.ஓ.எஸ்., (கருப்பை நீர்க்கட்டிகள்), ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படலாம். கருமுட்டை சரியாக வளராததால் கரு உருவாகாமல் போகலாம். சில நேரங்களில் கரு உருவானாலும் அது சரியாக வளராமல் ஆரம்ப நிலையிலேயே கருச்சிதைவு ஏற்படலாம். கருமுட்டை நன்றாக இருந்தாலும், கரு ஒட்டி வளர வேண்டிய கருப்பை பகுதியில் குறைபாடு இருந்தால் கர்ப்பம் தங்காமல் இருக்கலாம். இது போன்ற நிலைகளில் கருவுறுவதில் தாமதம் ஏற்படும். எனவே, கர்ப்பம் தாமதமாகும் பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து உண்மையான காரணத்தை கண்டறிவது முக்கியம். காரணம் தெரிந்த பிறகே அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை அளிக்க முடியும். சித்த மருத்துவத்தில் ஹார்மோன் சமநிலையின்மை, மாதவிடாய் கோளாறு போன்றவற்றிற்கு அமுக்கரா, சதாவரி உள்ளிட்டவை வழங்கப்படும்.பெண்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்து, மன அழுத்தத்தை குறைத்து போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.- டாக்டர் சுஜாதா, சித்த மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்.ச.அருண்குமார், சிவகங்கை: மூக்கு ஒவ்வாமையை எவ்வாறு சரிசெய்வது?தும்மல், மூக்கில் அரிப்பு, நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறி இருந்தால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. வயல்கள் மற்றும் சாலைகளில் இருந்து பறக்கும் துாசி இந்த ஒவ்வாமை பிரச்னையை மேலும் அதிகரிக்கும். ஒவ்வாமை நீண்ட நாட்கள் நீடித்தால் சைனஸ் அழற்சி, தலைவலி பிரச்னைகள் ஏற்படலாம். அதிக வெப்பம் காரணமாக மூக்கின் உள்பகுதி வறண்டு மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவதும் கோடை காலத்தில் காணப்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைவதால் தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, தொண்டை எரிச்சல், வறட்டு இருமல் போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும்.போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் செல்லும்போது குடை அல்லது தொப்பி பயன்படுத்த வேண்டும். துாசி அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குளிர்சாதன அறைகளில் இருப்பவர்கள் இடையிடையே தண்ணீர் குடித்து உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும்.- டாக்டர் திவாகர், உதவி பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.சுந்தரம், சிவகாசி: எனக்கு வயது 38. எனது கடைவாய் பல்லில் சில நாட்களாக வலி ஏற்பட்டுள்ள நிலையில் மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லை. தற்போது பல் சிறிது ஆடுகிறது. இதனை அகற்ற வேண்டுமா?வெறும் வலி என்றால் மாத்திரை எடுத்துக் கொண்டாலே போதுமானது. பல் ஆட்டம் கண்டுள்ள நிலையில் தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருக்கும். இதன் நோய் தன்மை அருகில் உள்ள பற்களுக்கும் பரவும். பாதிக்கப்பட்ட பல்லை உடனடியாக அகற்றுவது நல்லது.- டாக்டர் விஜய், பல் மருத்துவர், சிவகாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !