டாக்டரைக் கேளுங்கள்
மணவாளன், மதுரை: எனக்கு வயது 68. சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். இரண்டும் நல்ல கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்றாலும் சில சமயங்களில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது மயக்கம் வருகிறது. இது ஏன், இதை எப்படித் தவிர்ப்பது?உங்கள் பிரச்னைக்கு 'நிலை மயக்கம்' என்று பெயர். முதுமை காரணமாக ரத்தக்குழாய்களின் உட்சுவர் தடித்து சுருங்கி விரியும் தன்மையை இழந்து விடும். உடலின் கீழ் பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும். குறிப்பாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போது, காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, சாப்பிட்டு முடித்தவுடன், சிறுநீர், மலம் கழித்ததும் என பல சூழல்களில் மயக்கம் வருவது இதனால்தான்.இதைத் தவிர்க்க, கட்டிலின் தலைப்பகுதியை அரையடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப்பக்கவாட்டில் திருப்பிக் கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். ஒரே வேளையில் வயிறுமுட்டச் சாப்பிடுவதைவிட அரை வயிற்றுக்கு அடிக்கடி சாப்பிட வேண்டும். சிறுநீர், மலம் கழிக்கும்போது முக்கக் கூடாது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் மீளுறைகளை (எலாஸ்டிக் ஸ்டாக்கிங்ஸ்) அணிந்து கொள்ளலாம்.- டாக்டர் கு.கணேசன், பொது மருத்துவ நிபுணர், ராஜபாளையம்.காளியப்பன், வடமதுரை: எனக்கு 10 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கும் நிலையில் சில மாதங்களாக கால் பாதங்களில் எரிச்சல் உள்ளது. கால்கள் பராமரிப்பில் எத்தகைய கவனம் தேவை?சர்க்கரை நோயாளிகளுக்கு கால் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். சர்க்கரை நோயாளிகள் 4ல் ஒருவருக்கு கால் பாதிப்பு வருவது இயல்பு. நீண்ட காலமாக ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாததால் நரம்புகள் பாதிக்கப்பட்டு கால் பாதத்தில் எரிச்சல், முள் குத்துவது போன்ற உணர்வு, உணர்ச்சி குறைவு, காயம் ஆறாமை போன்றவை ஏற்படலாம்.இதனால் காலில் சிறிய கல், முள், செருப்பு உராய்வு, வெட்டு போன்றவை ஏற்பட்டாலும் சிலருக்கு வலி தெரியாமல் போகலாம். ரத்தக்குழாய்கள் பாதித்து ரத்த ஓட்டம் குறைந்திருந்தால் சிறிய காயம் கூட விரைவில் ஆறாமல் இருக்கும். காலின் வடிவமைப்பு மாறுவதால் கால் ஆணி, தடிப்பு என ஆரம்பித்து கவனிக்காமல் விட்டால் பின்னர் புண்ணாக மாறி தொற்று பரவும். சில நேரங்களில் விரல் அல்லது கால் பகுதியை அகற்ற வேண்டிய நிலையும் வரலாம்.இதை தடுக்க தினமும் கால்களை கவனிக்கும் பழக்கம் அவசியம். பாதத்தின் அடிப்பகுதி, விரல் இடை, குதிகால் ஆகிய இடங்களில் பிளவு, சிவப்பு, வீக்கம், காயம், புண் உள்ளதா என்று பார்க்க வேண்டும். கால்களை தினமும் வெதுவெதுப்பான நீரில் கழுவி நன்றாக துடைக்க வேண்டும். விரல் இடையில் ஈரப்பதம் இருக்கக்கூடாது. செருப்பு இல்லாமல் நடக்கக்கூடாது. மென்மையான, சரியான அளவிலான காலணி அணிய வேண்டும். நகங்களை நேராக வெட்ட வேண்டும்; ஆழமாக வெட்டக்கூடாது. கால் எரிச்சல், உணர்ச்சி குறைவு, புண், கருமை, வீக்கம் இருந்தால் உடனே டாக்டரை சந்திக்க வேண்டும். முக்கியமாக ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.- டாக்டர் ஜே.சி.சேகர், பொது மருத்துவம், வடமதுரைஎஸ்.ராதா, தேனி: எனது 3 வயது குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் சரியாக சாப்பிடுவது இல்லை. எதனால் இப் பாதிப்பு ஏற்படுகிறது?மூன்று வயது குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றுகளால் அடிக்கடி காய்ச்சல் வரும். இந்த வயதில் குழந்தைகளுக்கு சிறிய தொற்றுகள் அதிகமாக வருகிறது. அதனால் பலமுறை காய்ச்சல் வருவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், காய்ச்சலுடன் சேர்த்து குழந்தை சாப்பிடாமல் இருப்பது, உடல் எடை குறைதல், சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் சத்துக்குறைபாடு, செரிமான பிரச்னை காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு பழம், காய்கறி, புரதம் நிறைந்த உணவு வகைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தினமும் குறைந்தது 1 லிட்டர் வரை தண்ணீர் , பால் உள்ளிட்டவை கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக குழந்தை நல மருத்துவரை அணுகி தேவைப்பட்டால் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.- டாக்டர் செல்வகுமார், குழந்தைகள் நல மருத்துவத் துறை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேனிஜான்சிராணி, ராமநாதபுரம்: என் குழந்தைக்கு ஏழு வயதாகிறது. பற்களின் இடுக்குகளில் கறை போன்று உள்ளது. இதை சரி செய்வதற்கான வழிகள் என்ன?உணவு, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடும் போது அவை பற்களின் இடைவெளியில் தங்கி விடும். இதை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் கறை உருவாகி விடும். கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால் கேவிட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. சில குழந்தைகளுக்கு பற்கள் நெருக்கமாக இருப்பதால் உணவு எளிதில் சிக்கிக்கொள்ளும். பல் துலக்கிய பிறகும் கறை நீங்காமல் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.குழந்தைகளின் பற்களை பராமரிப்பதில் பெற்றோரின் பங்கு அவசியம். குழந்தைகளுக்கு தினமும் காலை, இரவு பல் துலக்குவதை பழக்கப்படுத்த வேண்டும். அதே போல் உணவு சாப்பிட்ட பின் தண்ணீரால் வாயை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். சிறிய கறை தானே என்று சாதாரணமாக விட்டால் பற்சொத்தை ஏற்பட வாய்ப்பு உள்ளது.- டாக்டர் ரமீஷ், பல் சிகிச்சை நிபுணர், ராமநாதபுரம்சரவணன், சிங்கம்புணரி: இரண்டு வயது குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. எவ்வாறு பராமரிக்க வேண்டும்?குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் முதலில் பதட்டம் அடைவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் ஒரு நோய் அல்ல. வைரஸ் தொற்றுகளால் காய்ச்சல் ஏற்படுகிறது. சளி, இருமல், தொண்டை அல்லது காது தொற்று போன்றவையும் காய்ச்சல் வருவதற்கான காரணமாக இருக்கலாம்.குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால், தண்ணீர், வயதுக்கு ஏற்ற திரவ உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும். குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலோ, தாய்ப்பால் குடிக்க மறுத்தாலோ, அடிக்கடி வாந்தி எடுத்தாலோ உடனடியாக அருகில் உள்ள குழந்தை மருத்துவரை அணுக வேண்டும். அவரின் ஆலோசனைபடி குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டும். வயதுக்கு ஏற்ற தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.- டாக்டர் மொய்னுதீன் அஹமத், குழந்தை நல மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலைகிருஷ்ணமூர்த்தி அருப்புக்கோட்டை: நான் 3 முறை பல் சொத்தை காரணமாக பற்களை அகற்றி உள்ளேன். இந்த முறை ஒரு பல்லை அகற்றிய போது பல நாட்கள் வலி தொடர்ந்து உள்ளது. காரணம் என்ன. பின் விளைவுகள் ஏதாவது ஏற்படுமா?ஒரு நோயாளிக்கு பல்வேறு காரணங்களால் பல் வலி வரலாம். பல் அகற்றும் போது முழு பல்லாக இருந்து உடையாமல் அகற்றப் பட்டால் பல் எடுத்தபின் வலி குறையும். பல் சொத்தை வெகு நாட்களாக இருந்து சிதிலமடைந்த பற்களை அகற்றும் போது தொற்று எலும்பு வரை பரவி இருக்கும் காரணத்தினால் வலி அதிகமாக இருக்கும். பல் எடுத்த பின் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தொற்று மருந்து, வலி மருந்து ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது படிப்படியாக வலி குறையும்.சில நேரங்களில் எலும்பினுள் புதைந்த பல்லையோ பல் வேரையோ எடுக்க பயன்படுத்தும் முறையினால் பல் எடுத்த பின் வீக்கம் வந்து பின் குணமடையும். இதனால் பயப்படத் தேவையில்லை. இவை அனைத்தும் பல் எடுப்பதற்கு முன் இருந்த நிலை, பல் எடுத்த முறை சார்ந்த காரணங்கள். பல்லை எடுத்த பின்பு அந்தப் பகுதியை நாக்கால் தடவுவது, கையை வைத்து பார்ப்பது ஆகியவற்றை செய்யக்கூடாது. குளிர்பானங்கள், குடிநீர் ஆகியவற்றை உறிந்து குடிக்க கூடாது. இவ்வாறு செய்தால் அந்தப் பகுதியில் தொற்று ஏற்பட்டு பல் வலியை விட மிகுந்த வேதனையை உண்டாக்கும். இந்த நிலை முழுவதுமாக குணமடைய 2 வாரங்கள் தேவைப்படும்.- டாக்டர் மணியமுது, பல் சிறப்பு மருத்துவர், அருப்புக்கோட்டை