உள்ளூர் செய்திகள்

டாக்டரைக் கேளுங்கள்

முக்தீஸ்வரன், மதுரை: நான் எப்போதும் வெயிலில் பணிபுரியும் மருத்துவ பிரதிநிதி. எவ்வாறு முன்னெச்ச ரிக்கையாக உடல்நலனை காப்பது?வெயில் காலங்களில் வெளிப்புறங்களில் பயணம் செய்யும் போது சராசரியாக வெளியேறும் வியர்வையை விட மூன்று முதல் நான்கு மடங்கு வியர்வை வெளியேறும். உடலின் மையப்பகுதி சூடாகும் போது உடலைக் குளிர்விக்கும் பொருட்டு வியர்வை வெளியேறுகிறது. இதற்காக உடல் முழுவதும் நமது சருமத்தில் வியர்வை சுரப்பிகள் உள்ளன. வியர்வையில் நீர் மட்டும் வெளியாவதில்லை. அதனுடன் சோடியம், பொட்டாசியம் போன்ற முக்கிய தாது உப்புகளும் வெளியேறுகின்றன. தொடர்ந்து அதிக அளவு வியர்வை வெளியேறும் போது ரத்தத்தின் மொத்த நீர்ச்சத்து அளவு குறையும்.இதனால் ரத்த நாளங்களுக்குள்ளேயே ரத்த உறைதல் நிகழ்வு துாண்டப்படலாம். அதீத உடல் உழைப்பு, வெயில் காலங்களில் அதீத வியர்வை ஏற்படும் போது பொட்டாசியம் அளவு குறைந்து 'ஹைப்போ கலீமியா' எனும் நிலையில் இதயம் தறிகெட்டுத் துடிக்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக இதய செயல் முடக்க நிலை ஏற்படலாம்.நமது ரத்தத்தில் ஏற்கனவே சோடியம் குறைவாக இருக்கும் நேரத்தில் மிக அதிகளவு தண்ணீரை ஒரே நேரத்தில் குடித்தால் ரத்தத்தின் சோடியம் அளவு இன்னும் அபாய அளவில் குறைந்து விடும். இதன் விளைவாக வலிப்பு, மூளையில் வீக்கம், கோமா மற்றும் மரணம் வரை ஏற்படலாம். ஒரே நேரத்தில் அதிகமான அளவு நீரை அருந்தக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நீரை அருந்த வேண்டும். வெயில் உச்சத்தில் இருக்கும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.- டாக்டர் அ.ப. பரூக் அப்துல்லா, பொது மருத்துவ நிபுணர், மதுரை.சினேகா, திண்டுக்கல்: எனது கணவருக்கு 46 வயது. அவரது பணி டூவீலரை அடிப்படையாக கொண்டது. வேலை முடித்து வீடு திரும்ப தினசரி இரவு 10 மணிக்கு மேல் ஆகும். அவர் தனியறையில் இருக்கும்போது வித்தியாசமான ஒலி எழுப்புகிறார். சின்ன விஷயங்களுக்கு கூட குழந்தைகளிடம் கோபப் படுகிறார். இதுகுறித்து கேட்டால், தான் இயல்பாகவே இருப்பதாக கூறுகிறார். இது மனநோயின் பாதிப்பா. இதற்கு தீர்வு என்ன?மன நோயை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பார்வையில் உருவம் தெரிதல், மாறுபட்ட எண்ணங்கள் தோன்றுதல், பூச்சிகள் ஊர்வது போன்ற உணர்வு அறிதல் என உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை தானே உணர்ந்து, தனக்கு ஏதோ பிரச்னை ஏற்படுகிறது அல்லது பாதிப்பிற்குள் சிக்கி இருக்கிறோம் என்பதை சுய சிந்தனையில் அறிந்து கொண்டு, அதற்கான தீர்வை டாக்டரிடம் தேட முயற்சி எடுப்பது ஒரு வகை.மற்றொரு வகை, தனக்குள் ஏற்பட்டுள்ள பாதிப்பை அறிந்து கொள்ள முயற்சி எடுக்காமல் அல்லது அது பற்றி பெரிதும் அக்கறை கொள்ளாமல் தான் இயல்பாகவே இருப்பதாக நினைத்து கொள்பவர்கள். உங்களது கணவர் இரண்டாவது வகையை சேர்ந்தவராக இருக்கலாம். அவர் எந்த மாதிரியான நிலையில் இருக்கிறார். அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரம் என்ன என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு மருத்துவம் மேற்கொள்வது அவசியம். அதுவே நல்லது. அருகில் இருக்கும் மனநல மருத்துவரிடம் ஆலோசிப்பது சிறந்தது.- டாக்டர் பாலகுரு, மனநல சிறப்பு மருத்துவர், திண்டுக்கல்.ஆர். தனலட்சுமி, ஆண்டிபட்டி: எனது அம்மா கர்ப்ப வாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். நானும் எனது மகளும் கர்ப்பவாய் புற்றுநோயில் இருந்து எங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது. ஆலோசனை தாருங்கள்?இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 99 சதவீதம் 'ஹியூமன் பாப்பிலோமா' என்னும் வைரஸ் தொற்றின் மூலம் ஏற்படக் கூடியது. இந்த புற்றுநோயினை தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம் தடுக்க முடியும். 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிறந்த வயது. 15 முதல் 26 வயது வரையுள்ள பெண்களும் போட்டுக் கொள்ளலாம். 27 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.இந்திய அரசு மூலம் 14, 15 வயது நிரம்பிய பெண்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். தேசிய குழந்தைகள் நலத்திட்ட பெண்கள் மருத்துவக்குழு உதவியுடன் தேவையானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.- டாக்டர் லிசாபாண்டியன், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், டி.சுப்புலாபுரம்.சஞ்சய் ராஜா, ஆர்.எஸ்.மங்கலம்: மழைக்கால வைரஸ் காய்ச்சலை கண்டறிவது, தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?மழை நீர் மற்றும் கொசுக்கடியால் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரவுகிறது. வைரஸ் காய்ச்சலை பொறுத்த வரை முதல் மூன்று நாட்களில் அதிக காய்ச்சல், சில மணி நேரம் இடைவெளியில் விட்டு விட்டு வரக்கூடும்.அப்போது தொடைக்கு மேல் வலி, இடுப்பு வலி ஏற்படும். நான்கு முதல் ஐந்தாம் நாளில் உடல் முழுவதும், கண்களைச் சுற்றிலும் வலி ஏற்படும். இதைத் தலைவலி என மக்கள் கூறுவர். ஆனால் சற்று காய்ச்சல் குறைந்து காணப்படும். பசி ஏற்பட்டு, உணவு சாப்பிட முடியாததால் நான்காம் நாளில் வலி அதிகரிக்கிறது. இந்த நாட்களில் கண்டிப்பாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.தொடர்ந்து ஆறாம் நாளுக்கு மேல் மீண்டும் காய்ச்சல் அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு, ஈறுகளில் ரத்தக் கசிவு, வயிறு வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அது டெங்கு காய்ச்சலாக இருக்கக்கூடும். இது போன்ற அறிகுறி இருந்தால் டாக்டரை அணுக வேண்டும். நீர் ஆகா ரங்களாக உப்பு கரைசல், இளநீர், பழச்சாறு, பால், தயிர் உள்ளிட்டவைகளை அதிகம் பருக வேண்டும். நீர்ச்சத்து குறைவின்றி பார்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.- டாக்டர் அ.ராமநாதன், பொதுமருத்துவம், உதவிப் பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.கார்த்திக்,சிவகங்கை: பருவ கால காய்ச்சலில் இருந்து குழந்தைகள் மற்றும் பெரியோர்களை எவ்வாறு பாதுகாப்பது?பருவகாலக் காய்ச்சலுக்கான முக்கியக் காரணங்களே வைரஸ் தொற்று தான். இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் நன்னீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு மற்றும் சிக்கன்குனியா, பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற உணவு மூலம் டைபாய்டு மற்றும் வயிற்றுபோக்குடன் காய்ச்சல் உருவாகிறது. குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலை திடீரென அதிகமானால், சளி, விடாத இருமல், மூக்கடைப்பு, உடல் வலி, தலைவலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். அவரின் ஆலோசனைப்படி மருந்து கொடுக்க வேண்டும்.சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த குடிநீரையே குடிக்க வேண்டும். சாலை ஓரங்களில் விற்கப்படும் திறந்தவெளி உணவு மற்றும் குளிர்ச்சியான பானங்களை வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். எளிதில் செரிமானமாகக்கூடிய, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடைகளில் சுயமாக மாத்திரை, மருந்து வாங்குவதை தவிர்த்து டாக்டரின் ஆலோசனையுடன் மருந்து எடுத்துக்கொள்வது பாதுகாப்பிற்கு உகந்தது.- டாக்டர் ராஜா, குழந்தைகள் நல மருத்துவர், அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.சீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்துார்: எனக்கு 54 வயதாகிறது. தினமும் வாக்கிங் செல்கிறேன். எந்த சிரமமும் இல்லை. ஆனால் மலைக்கோவிலுக்கு படியேறும் போது மூச்சு வாங்குகிறது. இளப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்?ரத்த அழுத்தம், சர்க்கரை சத்து, இதயம், நுரையீரல் செயல்பாடுகள், ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் எடை உயரத்திற்கு தகுந்த சரியான அளவில் இருக்க வேண்டும். பரிசோதனைகள் சரியான அளவில் இருந்தால் அச்சப்படத் தேவையில்லை. சிலருக்கு இயல்பாகவே மலையேறும் போது மூச்சு வாங்கும். இருந்தபோதிலும் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சரியான முறையில் இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை துாங்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். டீ, காபி ஆகியவற்றை ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.- டாக்டர் ஜி. ராஜகோபாலன், ஸ்ரீவில்லிபுத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்