அரிசி சாதம் சாப்பிடலாமா?
மனித உடல் கடந்த இரண்டரை லட்சம் ஆண்டுகளாக தொடர்ந்து பல விதங்களிலும் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தனை லட்சம் ஆண்டுகளாக மாற்றம் அடைந்துள்ள மனித உடலின் தன்மை, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு, அதிக உழைப்பை செய்யும் விதமாக அமைந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நாம் சாப்பிடும் உணவின் அளவு அதிகமாகி விட்டது. பழைய காலத்தில் சாப்பிட்டது போன்று இரண்டு வேளை சாப்பிட வேண்டும் என்று தான் ஆயுர்வேதமும் சொல்கிறது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்த பின் மூன்று வேளை சாப்பிட ஆரம்பித்து, இப்போது ஆறு, ஏழு வேளை சாப்பிடுகிறோம். என்ன சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை விட, எத்தனை முறை சாப்பிட்டால் எடை குறையும் என்பது மிகவும் முக்கியம். நம் மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர் சிதை மாற்றம், சூரியனுடன் தொடர்புடையது. 'பயாலஜிக்கல் கிளாக்' எனப்படும் உயிரி கடிகாரம் நம்முள் இயங்குகிறது. அதன்படி, ஒரு நாளில், காலை 10:00 -- 2:00 மணிக்குள் ஒரு முறை பசி வரும். மாலை 4:00 -- 6:00 மணிக்குள் மிதமான பசி உணர்வு இருக்கும். இந்த சமயத்தில் நாம் சாப்பிட வேண்டும். ஆனால், நாம் காலையில் துவங்கி, இரவு வரை அட்டவணை போட்டு, தேவைக்கு அதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். உடல் பருமனுக்கு இது தான் முதல் காரணம். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு முன், அடுத்த உணவு சாப்பிட்டால், நஞ்சை உருவாக்கி, உடல் திசுக்களில் சேர்ந்து, சர்க்கரை கோளாறு, உடல் பருமன் உட்பட பல நோய்களை உண்டாக்கும். சமையல் செய்தபடியே வீட்டை சுத்தம் செய்ய முடியாது. அது போன்று நோய் தொற்று ஏற்பட்டால், அதை சரி செய்வதற்காக, இயல்பாகவே பசி உணர்வு போய்விடும். சாப்பிடாமல் இருந்தால், வயிறு காலியாகி, நச்சுக்களை வெளியேற்றி நோய் வராமல் தடுக்கும். பசி பசி இல்லாவிட்டால் காலை உணவை தவிர்த்து விட்டு, 10:00 -- 2:00 மணிக்குள், எந்த நேரத்தில் நன்றாகப் பசிக்கிறதோ அந்த சமயத்தில் சாப்பிடலாம். காலை உணவைத் தவிர்ப்பதால் அசிடிட்டி, வாயு தொல்லை போன்ற எந்த கோளாறுகளும் வராது. பசி, அசிடிட்டி, காலி வயிறு என்ற மூன்று விஷயங்களை பிரித்துப் பார்க்க தெரிய வேண்டும். ரத்த சர்க்கரையில் குளுக்கோஸ் அளவு சீரற்று இருந்தால் தான் பசிக்கும். பசி வந்தால் உணவு சாப்பிட வேண்டும். அசிடிட்டி என்பது மருந்து சாப்பிட்டு சரி செய்ய வேண்டிய நோய். வயிறு காலியாக இருப்பது, நாம் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான நிலை. உணவு ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, கைக்குத்தல் அரிசி, பழைய அரிசி, பாரம்பரிய அரிசியை வேக வைத்து வடித்து சாப்பிட வேண்டும் என்று சொல்கிறது. அதிலும் நாம் வாழும் பகுதியில் விளைந்த அரிசியாக இருக்க வேண்டும். அதை விட்டு, எங்கேயோ தாய்லாந்தில் விளைந்த அரிசி சாப்பிட்டால், நம் மரபணுவிற்கு அது தெரியாது என்பதால் முழுமையாக ஏற்பது கடினமாகலாம். அரிசி, பருப்பு, நெய், ரசம், மோர் என்று இனிப்பு துவங்கி, துவர்ப்பில் முடியும் அறுசுவைகளும் நிறைந்த தென் மாநில உணவுகள் தான் ஆரோக்கியமானவை. அதையும் பசிக்கு எற்ப அளவுடன சாப்பிட வேண்டும். டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர், ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை 86101 77899sreehareeyam.co.in