சிகிச்சையால் முடியாதது எதுவுமில்லை
இரண்டு வாரங்களில், குழந்தையின் விரல்கள் அசைய ஆரம்பித்தன. சிறிது சிறிதாக, கை முழுவதும் அசைக்க ஆரம்பித்தான். கையைத் தூக்கி விட்டால், தோள் பட்டை, கை பகுதிகளின் பலத்தால், கை நிற்க ஆரம்பித்தது. குழந்தை அருண், ஜூன் 2010ல் பிறந்தான். பிறந்த குழந்தையின் இடது கை, செயலிழந்து கிடந்தது. குழந்தையின் தந்தை, ஒரு கடைநிலை ஊழியர். குழந்தையின் கையை உடனடியாகச் சரிசெய்ய, பெற்றோர் அவனை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும், ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு, பிறந்த ஒரு வாரத்திலேயே எடுத்துச் சென்றனர். அங்கே அருணுக்கு, சில உடற்பயிற்சிகள் செய்யப்பட்டன. இவ்வாறு, உடற்பயிற்சிகள் செய்வதால், மூன்று மாதங்களுக்குள் முன்னேற்றம் காணலாம் என, அங்குள்ள டாக்டர்கள் உறுதி அளித்தனர்.
மூன்று மாதங்கள் உடற்பயிற்சி செய்தும், குழந்தையின் கை செயலிழந்தே இருந்தது. இந்தச் செயலற்ற கைக்கு, இனி அறுவை சிகிச்சை செய்வது தான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு, டாக்டர்கள் வந்தனர். ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தையின் கை மீண்டும் செயல் பெறுமா என்ற கேள்விக்கு, டாக்டர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. நான்கு மாதங்களுக்குப் பிறகும், குழந்தையிடம் எந்த வித மாற்றமும் இல்லாமல் போகவே, குழந்தையை ஆயுர்வேத மருத்துவமனைக்குக் கூட்டி வந்தனர்.
இங்கு, அருணுக்கு ஆயுர்வேத சிகிச்சை துவங்கியது. அவனது இடது தோள், கை பிறவியிலிருந்தே இயக்கமற்று இருந்தது. தோள்பட்டையும், கையும் சேரும் மூட்டுப் பகுதி பள்ளமாக இருந்தது. ஆயுர்வேத முறைப்படி, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் நோய்களுக்கு, தாய்க்கும், குழந்தைக்கும் மருந்துகள் அளிக்கப்படும். தாய்ப்பாலின் வழியாக, குழந்தைக்கும் மருந்தின் பயன் போய் சேரும் என்ற கருத்தின் அடிப்படையில், அருணின் தாய்க்கும், அருணுக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டன. சிகிச்சை துவங்கிய ஒரு வாரத்தில், தோள் பட்டையிலுள்ள பள்ளம் நீங்கி, அங்கே சதை வளர்ந்தது.
அருணின் தாயும், பாட்டியும் அக்குழந்தையை தினசரி ஆயுர்வேத மருத்துவ மையத்திற்குக் கொண்டு வருவர். அங்கே, குழந்தையின் பாதிக்கப்பட்ட தோள்பட்டை, கை பகுதிகளில், மருந்துத் தைலம், மருந்து சூரணங்கள் இவற்றைத் தேய்த்து, மென்மையாக மருந்துகளால் ஒத்தடம் செய்து, சிகிச்சை அளிக்கப்படும். இரண்டு வாரங்களில், குழந்தையின் விரல்கள் அசைய ஆரம்பித்தன. சிறிது சிறிதாக, கை முழுவதும் அசைக்க ஆரம்பித்தான். கையைத் தூக்கி விட்டால், தோள் பட்டை கை பகுதிகளின் பலத்தால், கை நிற்க ஆரம்பித்தது. இதற்கு முன், கையைத் தூக்கினால், அது உடனே கீழே விழுந்து விடும். படிப்படியாக, கை, தோள் பகுதிகளில் சதை வளர்ந்தது. நான்கு வாரங்களில், அருணுக்கு முழுமையாகக் கையின் அசைவுகள் வந்துவிட்டன. விரல்களும் பொருட்களைக் கெட்டியாகப் பிடித்தன. அவன் கையின் மணிக்கட்டு, சிறிது பலமின்றி காணப்பட்டது. அந்தப் பகுதியில் உளுந்து, மாமிசம், தயிர் அஸ்வகந்தா (அமுக்கரம்) இவற்றை ஒன்று சேர்த்து, பற்றுப் போட்டு ஆமணக்கு இலைகள் வைத்துக் கட்டப்பட்டன. ஒன்றரை மாதங்களில் குழந்தையின் கை, முழுமையாகச் சரியாகி விட்டது.
டாக்டர் பி.எல்.டி., கிரிஜா,சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்sanjeevanifoundation@gmail.com