கேள்வி பதில்
ண என் வயது, 35. பல .ஆண்டுகளாகவே தொடர்ந்து வாயுத் தொல்லை, அல்சர், அமிலச் சுரப்பு என்று, மாற்றி மாற்றி ஏதாவது ஒரு வயிற்றுப் பிரச்னை உருவாகியபடி இருக்கிறது. எப்போதும் கையில் ஆன்டாசிட் மாத்திரைகளை மறக்காமல் வைத்திருக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னையில் இருந்து விடுபட வழி சொல்லுங்களேன்...அய்யப்பன், மானாமதுரை.உங்களுக்கு இருக்கும் இந்த பிரச்னை, பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. நெஞ்சுவலி என்று வருபவர்களில், 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு, பிரச்னை வயிற்றில் இருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு முக்கிய காரணம், நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம். காலையில் எழுந்ததிலிருந்து, பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓடும் நாம், சாப்பிடுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவதில்லை. ஒரு வேலை செய்ய நேரமில்லை என்றால், உணவு நேரத்தையும் சேர்த்து, அந்த வேலையை முடிப்பதற்கு எடுத்துக் கொள்கிறோம்.நம்மிடம் இருக்கும் இன்னொரு கெட்ட பழக்கம், காலை உணவைத் தவிர்ப்பது. இரவில், 10:00 மணிக்குள் பெரும்பாலும் இரவு உணவை சாப்பிட்டு விடுகிறோம். அதன்பின் காலை உணவிற்கு, 10:00 மணி நேர இடைவெளி உள்ளது. இந்த நேரத்தில் நல்ல ஊட்டச்சத்துடன் கூடிய உணவை நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவசியம் சாப்பிட வேண்டும். ஆனால் அவசர கோலத்தில் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல், நான்கு வாய் அள்ளிப் போட்டு கிளம்பி விடுகிறோம். அதன்பின் மதிய உணவுக்கு முழு சாப்பாடு, மாலையில் சிற்றுண்டி, இடையில் சில முறை காபி, டீ, இரவு உணவு என்று, இடைவெளியே கொடுக்காமல் சாப்பிடுகிறோம். ஒன்று, பல மணி நேரம் தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பது அல்லது சிறிய இடைவெளியில் தொடர்ந்து சாப்பிடுவது என்று இருப்பது, வயிற்றுக்கு நல்லதில்லை. உப்பு, மசாலா, எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுதான் நாக்கிற்கு ருசியைத் தரும்; ஆனால் வயிற்றுக்கு நல்லதல்ல. அசைவ உணவுகளை சாப்பிடும்போதும், மசாலா சேர்க்காமல் வேக வைத்த சிக்கன், மீன் சாப்பிடலாம். உணவிற்கென்று நேரம் ஒதுக்கி ஒவ்வொரு வாய் உணவையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்; அதற்காகத் தான் பற்கள் இருக்கிறது. மெல்லும்போது சுரக்கும் ஜீரண அமிலம் நல்ல செரிமானத்திற்கு உதவும். அப்படி இல்லாத பட்சத்தில் பற்களின் வேலையையும் வயிறே செய்ய வேண்டியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வரை இரைப்பை, ஜீரண மண்டலம் தொடர்பான புற்றுநோயால், 40 முதல் 50 சதவீதம் ஜப்பானியர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். உணவில் அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்த பின், அங்கு புற்றுநோயின் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து, உங்கள் உணவை பச்சை, மஞ்சள், சிவப்பு என்று வண்ணங்களாக மாற்றுங்கள். மிகச் சிறந்த உணவாக இயற்கை நமக்கு அளித்ததே காய்கறி, பழங்கள்தான். அதை அதிகமாக சாப்பிட பழகுங்கள். வயிற்றுப் பிரச்னை வராது. டாக்டர் ஆர்.சுரேந்திரன், குடல், இரைப்பை சிறப்பு மருத்துவர்.