கேள்வி - பதில்
எனக்கு, அடிக்கடி காய்ச்சல் வருகிறது. உடலின் உஷ்ணம் அதிகமானவுடன், 'பாரசிட்டமால்' மாத்திரை வாங்கி சாப்பிடுவேன்; ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சல் அடிக்கடி வருவது ஏதாவது நோயின் அறிகுறியா?எஸ்.ரவிகுமார், மானாமதுரைஉடலின் வெப்பம் சராசரி வெப்பநிலையான, 98.4 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகமாகும் நிலையே காய்ச்சல். பெரும்பாலானோர் நினைப்பது போல காய்ச்சல் என்பது நோயல்ல. உடலில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படும் போது, 'வேண்டாத விருந்தாளி உடம்பிற்குள் வந்துவிட்டது' என்பதை அறிவிக்கும் அறிகுறியே காய்ச்சல். பெரியவர்களுக்கு, 103 டிகிரி பாரன்ஹீட் வரை காய்ச்சல் இருந்தாலும் பிரச்னை இல்லை. குழந்தைகளைப் பொறுத்தவரை, தீவிரத் தொற்று ஏற்பட்டால் மட்டுமே இந்த அளவிற்கு உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.ஜலதோஷம், அதிகப்படியான வெயில், உடலில் நீர்ச்சத்து குறைவது, கட்டிகள், அதிகப்படியான வேலை, நிமோனியா, ஆர்தரடீஸ், தீவிர ரத்த அழுத்தத்திற்கு பயன்படும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள், சைனஸ், சிறுநீரகத் தொற்று, ரத்தம் உறைவது போன்ற பல காரணங்களால் உடல் உஷ்ணம் அதிகரிக்கலாம். பருவநிலை மாறும் போது நீரின் மூலம் பாக்டீரியா, வைரஸ் தொற்று பரவுவது அதிகமாக இருக்கும். தொற்றின் பாதிப்பாலும் காய்ச்சல் வரலாம்.உங்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது என்றால், உடனடியாக ஒரு பொதுநல மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. காய்ச்சலுக்கான காரணத்தை பரிசோதித்து, அதற்கேற்ப சிகிச்சை செய்து கெள்வதே பாதுகாப்பானது.டாக்டர் கே.பரணீதரன்பொதுநல மருத்துவர், குளோபல் மருத்துவமனை என் வயது, 40. முதல் பிரசவம் முடிந்து, 10 ஆண்டுகள் ஆகிறது. என் அடிவயிறு பெருத்து தொப்பை உள்ளது. டாக்டரிடம் ஆலோசித்த போது, 'ஹெர்னியா' பிரச்னை இருப்பதாக கூறினார். படுக்கும் போது, வயிறு நன்கு தரையில் அழுத்தி இருக்கும்படி படுக்கச் சொன்னார். இது போன்ற பயிற்சிகளால், அறுவை சிகிச்சை இல்லாமல் ஹெர்னியாவை சரி செய்ய முடியுமா?எஸ்.சந்திரா, வேலூர்வயிறு, கருக்குழாய் பகுதிகளில் உள்ள தசைகள் பலமிழப்பது உள்ளிட்ட பல காரணங்களால், ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் வருகிறது. வயிறு வீக்கம், வலி, வயிற்றுப் பகுதியில் வேறு தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால் பிரச்னையில்லை. உங்கள் டாக்டர் சொன்னது போல குப்புறப்படுப்பதால், ஹெர்னியாவை சரி செய்து விட முடியாது. நீண்ட நாள் மலச்சிக்கல், தொடர்ந்து இருமல், சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருந்தாலும் ஹெர்னியா வரலாம். இது தசைகளில் ஏற்படும் பிரச்னை என்பதால் மருந்தினால் சரி செய்ய இயலாது. ஹெர்னியாவால் உடல் தொந்தரவுகள் அதிகமாகும் போது அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்; மற்றபடிகுப்புறப்படுப்பது போன்ற முறைகளை செய்ய வேண்டாம்.டாக்டர் அமுதா ஹரிமகப்பேறு மருத்துவர், சென்னை