உள்ளூர் செய்திகள்

உறவு மேலாண்மை: நீ இல்லையென்றால்

வயது, பதவி, பாலியல் வேறுபாடு என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல், வேலை செய்யும் இடத்தில், ஒருவரை மனதளவில் சார்ந்து வாழ்வது என்ற, 'டிரண்ட்' சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், உளவியல் ஆலோசனைக்காக என்னிடம் வந்தார், ௫௦ வயது மதிக்கத்தக்க ஒரு ஆண். விஷயம் இதுதான். ஒரு தனியார் நிறுவனத்தில், அவர் உயரதிகாரியாக இருக்கிறார். அவரின் கீழ் வேலை செய்யும் பெண், ஒருவர் மேல் அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. அந்தப் பெண்ணிற்கு, ௨௫ வயது. தன்னுடைய உயரதிகாரியே, தன் மேல் தனி கரிசனத்துடன் இருப்பது, அந்தப் பெண்ணிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் நட்போடு அவரும் பழகினார். ஒரு கட்டத்தில், அந்தப் பெண் இல்லாமல், அவரால் இருக்கவே முடியாது என்ற அளவிற்கு மனதளவில், அந்த உயரதிகாரி சார்ந்தே செயல்பட ஆரம்பித்தார். குறிப்பிட்ட நபர் இல்லாமல், என்னால் இருக்கவே முடியாது என்பதற்கு, 'டிபென்டன்சி டிஸ்சாடர்' என்று பெயர். ஒரு கட்டத்தில், அந்தப் பெண்ணிற்கு வீட்டில் வரன் பார்த்து திருமணம் முடிவானது. எல்லாமே சுமுகமாக இருந்தபோது, மாப்பிள்ளை வீட்டில், 'இந்தப் பெண் வேண்டாம்' என்று சொல்லி விட்டனர். என்ன காரணம் என்று விசாரித்த போது, 'பெண்ணின் நடத்தை சரியில்லை' என்று, மாப்பிள்ளை வீட்டில் யாரோ சொன்னதாக தெரிந்தது. யார் இதைச் செய்திருப்பர் என்று விசாரணையில் இறங்கியது, பெண்ணின் குடும்பம். கடைசியில், இந்த உயரதிகாரி தான் காரணம் என்று தெரிய வர அதிர்ந்து விட்டனர்.இப்படி ஒரு காரியத்தை செய்தவரின் மேல், அந்த பெண்ணிற்கு கோபம், ஆத்திரம். அவரோடு பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தி விட்டார். இந்த நிலையில் தான் அவர் என்னைத் தேடி வந்தார். 'மேடம், நான் செய்தது தவறு தான். திருமணம் முடிவான நாளிலிருந்து, எப்போதும் அந்தப் பையனோடு போனில் பேசுகிறாள். என் மீது உள்ள அன்பு குறைந்து விட்டது. அவள் நட்பு இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. அதனால்தான் இப்படி ஒரு காரியத்தைச் செய்தேன். ஆனாலும் இப்போது கல்யாணத்தை நிறுத்தி விட்டோமே என்று, குற்ற உணர்ச்சியாக இருக்கிறது' என்று அழுதார்.அந்த பெண்ணையும் வரவழைத்தேன். இருவரிடமும் பேசி நிலைமையை புரிய வைத்தேன். 'இனி நீ அந்த அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டாம்' என்று சொன்னேன். இதுபோன்ற சிக்கல்களை எல்லாம், ஒரே நாளில் தீர்த்து விட முடியும். புரிய வைப்பதும், விஷயத்தை எப்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம் என்ற கம்யூனிகேஷனும் முக்கியம். 'டிபன்டன்சி டிஸ்சாடர்' பிரச்னையில் இருப்போருக்கு, ஒரே மாதிரியான ஆலோசனை பலன் தராது. அவரவரின் மனநிலைக்கு தகுந்தவாறு பிரச்னையை கையாள வேண்டும். இவர் பரவாயில்லை கல்யாணத்தை மட்டும் நிறுத்தினார். சிலர், 'எனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்று உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய காரியங்களில் இறங்கி விடுவதைப் பார்க்கிறோம். அலுவலகங்கள், வெளியிடங்களில் ஏற்படும் நட்பில், உறவுகளில் கவனம் தேவை.டாக்டர் அபிலாஷா, உளவியல் நிபுணர்99620 44569


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !