உள்ளூர் செய்திகள்

உறவு மேலாண்மை: முகநூலில் வந்த இரண்டாவது காதல்!

சமூக வலைதளங்கள் வந்தபின், நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் தொடர்பு கொள்ள முடியும் என்பதோடு, நம்முடைய பழைய நண்பர்களைத் தேடி, அவர்களோடு நட்பைப் புதுப்பித்துக் கொள்வதும் சுலபமாகி விட்டது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த, தன் கல்லுாரி நண்பரை முகநுாலில் தேடிப் பிடித்து, நட்பைப் புதுப்பித்துக் கொண்டார், ஒரு இளம் பெண். சில தகவல் பரிமாற்றங்கள், 'சாட்டிங்' அவர்களிடையே மீண்டும் காதலாக மாற, அவரை என்னிடம் அழைத்து வந்தார் அவரின் கணவர்.ஸ்வேதாவிற்கு திருமணம் ஆகி, சில மாதங்கள் ஆகியிருந்தது. கணவன், மனைவி இருவருமே மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணி செய்கின்றனர். தகவல் பரிமாற்றம், நட்பு, காதல் என்று அனைத்திற்கும், சமூக வலைதளங்களையே சார்ந்திருக்கும் தற்போதைய தலைமுறை பெண் ஸ்வேதா. 'ஆன் சைட்' விசிட்டிற்கு, கணவர் சில வாரங்கள் அமெரிக்கா சென்றபோது, அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த ஸ்வேதா, சற்று வெறுமையை உணர்ந்தார். வழக்கம் போல முகநுாலில் நண்பர்களுடன் சாட்டிங் செய்ய, புதிதாக ஒரு நபர், 'சாட்டிங்'கில் வந்தார். அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்ட விதமே அதிரடியாக இருந்தது. 'சாட்டிங்'கில் பயன்படுத்திய சில வார்த்தைகள், தன்னுடைய பிரத்யேக பழக்கங்கள் சிலதை நினைவுபடுத்தவே, ஸ்வேதா வியந்து போனார். சட்டென்று, 'அட, இது நம்ம காலேஜ் மேட் ஸ்ரீதர்' என்று நினைவிற்கு வர, உற்சாகமானார் ஸ்வேதா. இருவரும், பல மணி நேரம் பழைய கதைகளை பேசினர். தினமும் குறிப்பிட்ட நேரத்தில், 'சாட்டிங்'கில் வந்தார். ஏற்கனவே கல்லுாரி நாட்களில், அவர் மேல் லேசான ஈர்ப்பு இருந்தது ஸ்வேதாவிற்கு. இப்போது அந்த உணர்வு சற்று அதிகமாக, தன் பொறுப்பு, திருமண வாழ்க்கை என்று அனைத்தையும் மறந்து, 20 வயதில் இருந்த அதே மனநிலைக்கு சென்று விட்டார்.'ஆன் சைட்' முடித்து, கணவர் திரும்பி வந்த பின், மனைவியிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதை கவனித்தார். எப்போதும் ஒரு பரபரப்பு. எந்த நேரமும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' என்று, கவனம் முழுவதும் இருந்தது. 'நான் இல்லாத நாட்களில் என்ன நடந்திருக்கும்?' என்று கணவர் யோசித்து, ஸ்வேதாவிற்கே தெரியாமல் கண்காணிக்க, விஷயம் இதுதான் என்று புரிந்தது.கணவன், மனைவி இருவரும் என்னிடம் வந்தபோது, பிரச்னையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல், என்னிடம் தெளிவாக சொன்னது, ஸ்வேதாவின் கணவர் தான். எனக்கு பெரிய ஆச்சரியமே, அந்தப் பையனின் நிதானமான அணுகுமுறை. தன் மனைவி பெரிதாக தவறு ஒன்றும் செய்துவிடவில்லை; ஆனால், பழைய ஈர்ப்பை தனக்குள் ஏற்பட்ட காதல் என நம்பி, கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறார் என்று, சரியான கோணத்தில் புரிந்து கொண்டிருந்தார். ஸ்வேதாவிடம் தனியாகப் பேசினேன். 'உன்னுடைய நல்ல நேரம், விஷயத்தை உள்ளது உள்ளபடியே, உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் புரிந்து கொள்ளும் கணவன் அமைந்தது. வீணாக உன் வாழ்க்கையை சிக்கல் ஆக்கிக் கொள்ளாதே' என்று, கவுன்சிலிங் கொடுத்தபோது, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் வரும் விளைவுகளை சொன்னேன். பகிர்ந்து கொள்ள ஒரு இடம் கிடைத்துவிட்டது என்பதற்காக, நம்மைப் பற்றிய அனைத்து விபரங்களையும், பொது தளத்தில் சொல்வதில் ஏற்படும் விளைவுகள், பல நேரங்களில் ஆபத்தானவை.டாக்டர் லதா கிரீஷ்மனநல மருத்துவர்,98400 54859


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !