உப்பும் சர்க்கரையும் உயிருக்கு ஆபத்து!
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்த தின்பண்டங்கள், பீட்சா, பர்கர் போன்ற அனைத்து துரித உணவுகளிலும், தேவைக்கு அதிகமான உப்பு, செரிவூட்டப்பட்ட, கரையாத கொழுப்பு, சர்க்கரை இருப்பதை, கடந்த ஆறு ஆண்டுகளாக செய்த ஆய்வில் உறுதி செய்துள்ளோம்.பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் இருப்பது, 2012ம் ஆண்டிலேயே உறதியானது. 10 ஆண்டுகளாக, இந்தியாவில் விற்கப்படும், 33 முன்னணி நிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை, தொடர்ந்து ஆய்வு செய்தோம். இதில், சிப்ஸ் மற்றும் அதைப் போன்று மொறுமொறுப்பாக உள்ள தின் பண்டங்களில், அதிக அளவில் உப்பு உள்ளது. 'இன்ஸ்டன்ட்' நுாடுல்ஸ் மற்றும் சூப் வகைகளில், மிக அதிக அளவில் உப்பு சேர்க்கப்பட்டுள்ளது.உப்பு, கொழுப்பு நிறைந்த துரித உணவுகள், குறைந்த விலையில், எளிதாக கிடைக்கின்றன என்று தினமும் சாப்பிட்டு, 40 வயதிற்குள், ரத்தத்தில் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, உடல் பருமன், இதய நோய்கள் அதிகரித்து உள்ளன.நாற்பது வயதிற்குள்ளேயே இது போன்ற உடல் கோளாறுகள் ஏற்படும் போது, அடுத்த 30 ஆண்டுகள் இவற்றுடனேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும்; இது, அத்தனை எளிதான விஷயம் இல்லை. உணவுப் பழக்கத்தால், ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, கொழுப்பு அதிகரிப்பது, கடந்த ஆண்டுகளில், 10 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதிலும், இந்தப் பிரச்னைகளால் அதிக அளவில் இளம் வயதினரே பாதிக்கப்படுகின்றனர். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, கேட்கும் நேரங்களில் எல்லாம் சிப்ஸ், பிஸ்கட், கேக் என்று பெற்றோர் வாங்கித் தருகின்றனர். இதன் விளைவு, 10 வயதிலேயே குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டது.கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள் ஆரோக்கியமானது என்று விளம்பரங்களில் சிபாரிசு செய்யும், 30 கிராம் சிப்ஸ்சில், குறைந்தது, 1 கிராம் உப்பு உள்ளது. ஆரோக்கியம் இல்லாததை ஆரோக்கியம் என்று விளம்பரம் செய்கின்றனர். இது போன்ற பொருட்களை வாங்குவதற்கு முன், அதில் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து விபரங்களை படித்தாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், 30 கிராம் சிப்ஸ் பாக்கெட்டை, 20 ரூபாய்க்கு விற்கின்றனர். ஆனால், அதில் இருப்பது, 30 கிராம் இல்லை; 52 கிராம். குறைவாக சாப்பிடுவதாக நினைத்து, அதிகமாக சாப்பிடுகிறோம்.அடிக்கடி சிப்ஸ் சாப்பிடுவது, பசை அதிகம் உள்ள உணவு என்பதால், பற்களில் ஒட்டிக் கொள்ளும்; பாதிப்பை ஏற்படுத்தும். சிப்ஸ் மட்டுமல்ல, இந்திய நிறுவனங்கள் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனையாகும், மிக்சர், காராபூந்தி, முறுக்கு, சேவு போன்ற அனைத்து வகைகளிலும் அதிக உப்பு, கொழுப்பு அல்லது இரண்டும் உள்ளன.'மீடியம்' அளவில் 'ஆர்டர்' செய்யும் ஒரு பீட்சாவில், ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான உப்பில், 99.9 சதவீதமும், 72.8 சதவீதம் கொழுப்பும் உள்ளன. 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், ஒரு வாரத்தில் குறைந்தது, மூன்று அல்லது நான்கு முறை, இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ் சாப்பிடுகின்றனர். 70 கிராம் பாக்கெட்டில் மட்டும் குறைந்தது, 2.7 கிராம் உப்பு உள்ளது.-அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், புதுடில்லி* உலக சுகாதார மையம், இந்திய மருத்துவக் கவுன்சில் உட்பட தேசிய, சர்வதேச அமைப்புகள், ஒரு நபர் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அளவை பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, உப்பு - 5 கிராம், கொழுப்பு - 60 கிராம், கார்போஹைட்ரேட் - 500 கிராம், 'டிரான்ஸ் பேட்' எனப்படும் கரையாத கொழுப்பு - 2.2 கிராம் எடுத்துக் கொண்டால் போதுமானது. இந்த அளவைக் காட்டிலும் கூடுதலாக சாப்பிடுவது, உடல் பருமன் உட்பட நோய்களையே உண்டாக்கும்.இத்துடன், புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் அடங்கிய சமச்சீரான உணவு, ஆரோக்கியமான நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு, 2 ஆயிரம் கலோரி போதுமானது.