தும்மலை கட்டுப்படுத்தும் உப்பு, நெய் சாதம்!
நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், தொற்று ஏற்படாமல் எப்படி தடுக்குமோ, அது போல, ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி வராமலும் தடுக்கும்.துாசு பட்டால் வரும் ஒவ்வாமையால், அடுக்கு தும்மல், மூக்கு அரிப்பு, மூக்கில் இருந்து நீர் வடிவது, கண்ணில் நீர் வடிவது, தலை வலி, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, செயல் திறன் குறைவது போன்ற பல பிரச்னைகள் வரும். 'ஏசி'யில் இருந்தால், குளித்தவுடன் மின் விசிறியின் கீழ் அமர்ந்தாலோ, முகத்தில் தண்ணீர் விட்டு கழுவினால், வண்டியில் சென்றால், துாசி பட்டாலோ ஒவ்வாமையை துாண்டி, அதன் வெளிப்பாடாக தும்மல் போன்ற அறிகுறிகள் வந்து விடும்.இதற்கு மூலக் காரணம், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியில் இருக்கும் சில குறைகள். இந்தக் குறைகளை சரி செய்யும் விதமாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வாமை என்பது நோய் தொற்று போல பரவுவது இல்லை; ஆனால், பரம்பரையாக வரக் கூடியது.மருந்து ஒன்று தான் இதற்கு தீர்வு என்று சொல்ல முடியாது; சரியான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தால் சரி செய்ய முடியும்.பூவின் மகரந்த துகள்கள், துாசு, மெல்லிய துகள்கள், சில வகையான வேதிப் பொருட்களின் வாசம், சமையலறை புகை, பெயின்ட் வாசனை மூக்கில் படுவதால் ஒவ்வாமை வரும். மழை, வெயில், குளிர் என்று மாறி மாறி ஏற்படும் சீதோஷ்ணத்தால் சளி, காய்ச்சலில் ஏற்படும் அறிகுறிகளை ஒத்தே இதுவும் இருக்கும்.அறிகுறிகள் அதிகமாக இருந்தால் அதிக சூடு, குளிர்ச்சி, வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, மிதமான சூட்டில் சாப்பிட வேண்டும்; வெதுவெதுப்பான நீரையே குடிக்க வேண்டும். உடனடி நிவாரணத்திற்கு, பாலில் சுக்கு பொடி சேர்த்து குடிக்கலாம். சாதத்தில் சிறிது உப்பு, நெய் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இதைச் செய்தால், ஒவ்வாமையின் தீவிரத்தை படிப்படியாக குறைக்கும்.தொடர்ந்து 'நேசல் ஸ்பிரே' பயன்படுத்தினால, வெளிப்புறக் காரணிகளால் ஒவ்வாமை வருவது போய், நேசல் ஸ்பிரே பயன்படுத்துவதே ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஒவ்வாமை இருப்பவர்கள் தற்காலிக தீர்வைத் தேடாமல், நிரந்தர தீர்வுக்கு செல்ல வேண்டும்.டாக்டர் எம்.ஹரிகிருஷ்ணன்,ஆயுர்வேத மருத்துவர், சென்னை.போன்: 80159 58409