உள்ளூர் செய்திகள்

காக்க... காக்க... இருதயம் காக்க...

எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. இதற்காக Betaloc, Ecosprin, Lasilactone  மாத்திரைகளை எடுத்து வருகிறேன். கடந்த ஒரு மாதமாக எனது இரு மார்பகங்களும் வீங்கிக் கொண்டு வலி ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?-எஸ்.ராஜநாயகம், மதுரைஆண்களுக்கு மார்பகங்களில் வீக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஹார்மோன் கோளாறுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள் முக்கிய காரணங்களாக உள்ளன. நீங்கள் எடுக்கும் மாத்திரைகளில்  Lasilactone   மாத்திரையில் இப்படி மார்பகம் வீங்கும் தன்மை உள்ளது. எனவே நீங்கள் உடனடியாக அதை நிறுத்தி விட்டு, உங்கள் டாக்டரை அணுகி, அந்த மாத்திரைக்குப் பதில் வேறு மாத்திரையை எடுப்பது நல்லது. இம்மாத்திரையை நிறுத்தினாலும், மார்பகம் பழைய நிலையை அடைய சில மாதங்கள் ஆகும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டேன். தற்போது நடக்கும்போது நெஞ்சில் வலி ஏற்படுகிறது. ஹீமோகுளோபின் (Hb) அளவு 7 ஆக உள்ளது. எனக்கு மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் கூறுகிறார். நான் என்ன செய்வது?-எஸ்.மோகன், திண்டுக்கல்முதலில் ஹீமோகுளோபின் அளவு 7 என்பது மிகவும் குறைவான அளவாகும். இதற்கு நீங்கள் உங்களுக்கு எதனால் இந்த ரத்தசோகை ஏற்பட்டது என அறிந்து முதலில் அதை சரிசெய்ய வேண்டும். இருதயத்தை பொறுத்தவரை உங்களுக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்த்தாக வேண்டும். அதில் இருதயத்தில் உள்ள ரத்தநாளத்தில் அடைப்பு கூடி உள்ளதா என்பதையும், புதிதாக பொருத்தப்பட்ட ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் கண்டறியலாம். தற்போது இதற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் சிகிச்சை மூலம், அறுவை சிகிச்சை இன்றி எளிதில் சரிசெய்யலாம்.

* ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு ஸ்டென்ட் (Stent)  சிகிச்சையை ஒரு மாதம் முன்பு செய்து கொண்டேன். நான் எப்போது அலுவலக பணிகளை துவக்கலாம்; இருசக்கர வாகனங்களை ஓட்டலாம்?-செந்தாமரை, கோவைஉங்களுக்கு மாரடைப்பு இல்லாமல் ரத்தக்குழாய் அடைப்புக்கு ஸ்டென்ட் வைக்கப்பட்டு இருந்தால், இரு வாரங்களில் மீண்டும் பரிசோதனை செய்து, டாக்டர் அனுமதியுடன் பணிகளை துவக்கலாம்.இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை மூன்று மாதங்களுக்கு பிறகு, டிரெட் மில் பரிசோதனை, எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனைகளை செய்து பார்த்து, அவற்றின் முடிவுகள் நார்மல் ஆக இருந்தால், 'செல்ப் ஸ்டார்ட்டர்' உள்ள இருசக்கர வாகனங்களை உபயோகிக்கலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள் விமான பயணம் மேற்கொள்ளலாமா?-வி.ராகவன், தேனிபைபாஸ் சர்ஜரி செய்தவர்கள் இருவாரங்களுக்கு விமான பயணத்தை தவிர்ப்பது நல்லது. அதன் பிறகு இருதய டாக்டர் அனுமதியுடன் விமான பயணம் மேற்கொள்ளலாம். பொதுவாகக் கூற வேண்டும் என்றால் நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகம் உள்ள இருதய நோயாளிகள் விமான பயணத்தை தவிர்ப்பதே நல்லது. மற்ற இருதய நோயாளிகளான -மாரடைப்பு வந்தவர்கள், ஸ்டென்ட் சிகிச்சை செய்தவர்கள், வால்வு கோளாறு உள்ளவர்கள் இருதய டாக்டரின் அனுமதியுடன் விமான பயணம் மேற்கொள்ளலாம்.டாக்டர் விவேக்போஸ், மதுரை

இருதய நோய் தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி இருதயம் காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை-16


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !