உள்ளூர் செய்திகள்

சில சந்தேகங்கள்... சில பதில்கள்!

மூக்கில் ரத்தக் கசிவு ஏற்படுவது ஏன்?

ஆர்.குமாரி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு: என் மகள் (25 வயது), கடந்த 11 ஆண்டுகளாக, வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்கிறாள். நாளுக்கு நாள், அவள் தலைமுடி கொட்டுகிறது. இதற்கு என்ன தீர்வு?மூளையில் மின் அலைகளின் தாறுமாறான செயல்பாட்டால், வலிப்பு உண்டாகிறது. "எலக்ட்ரோஎன்செபலோகிராம்' (இஇஜி) எடுக்கும்போது, இந்த மின் அலைகளின் சிக்னல்களை அறிந்து கொள்ளலாம். மூளையில் கட்டி ஏதும் உள்ளதா என்பதை சி.டி., - எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். ரத்தத்தில் மாறுபாடு ஏதும் உள்ளதா என்பதை, அதற்கான பரிசோதனை செய்து அறியலாம்.ரத்தத்தில் உள்ள மாறுபாட்டை மருந்து மூலம் சரி செய்யலாம். துரதிருஷ்டவசமாக, பெரும்பாலானோருக்கு ஏற்படும் வலிப்பு, சரி செய்யக் கூடிய காரணங்களாக அமைவதில்லை. மருந்துகளால் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். மருந்துகள் சாப்பிடும் போது, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வலிப்பு ஏற்படவில்லை எனில், மருந்தின் அளவைக் குறைக்கலாம். சிலருக்கு, அவர் உடலின் தன்மையைப் பொறுத்து, மருந்தை முற்றிலும் நிறுத்தி விடலாம். இந்த மருந்துகள் சாப்பிட்டால், தலைமுடி கொட்டாது. ஹார்மோன் மாற்றங்கள். அதிக ரசாயனம் கலந்த ஷாம்பூ பயன்படுத்துவது, உடலில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, துத்தநாகக் குறைபாடு ஏற்பட்டால் தலைமுடி கொட்டும்.

ஹேமமாலினி, அண்ணாநகர், சென்னை: குதிகால் வலி எதனால் ஏற்படுகிறது? இதற்கு தீர்வு உண்டா? வலி தாங்க முடியவில்லை. உடல் எடை அதிகரிப்பு, அளவுக்கு அதிகமாக வேலை செய்தல், கால்களுக்குத் தகாத செருப்பு அணிதல் ஆகியவற்றால், குதிகால் வலி ஏற்படும். கால் எலும்பில், அதிகப்படியாக துருத்தியபடி இன்னும் எலும்பு வளர்ந்து, அதைச் சுற்றியுள்ள சதை வீங்கினாலும் வலி ஏற்படும்.வெறுங்காலுடன் மார்பிள், கிரானைட் போடப்பட்ட தரையில் நின்றால், இந்த வலி இன்னும் அதிகரிக்கும். ஐஸ் கட்டி மற்றும் சுடு நீரை மாற்றி மாற்றி வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி சிறிது குறையும். "மைக்ரோசெல்லுலர்' ரப்பரால் ஆன காலணியை எப்போதும் அணிந்திருப்பது நல்லது. வெறுங்காலுடன் தரையில் நிற்க வேண்டாம். "பிசியோதெரபி' செய்து கொண்டாலும் வலி குறையும். பாரசிட்டமால் மருந்து சாப்பிடலாம். ஆனால், நெடுநாட்களுக்கு இது போன்ற, "பெயின்கில்லர்'களை சாப்பிடக்கூடாது. ஓய்வு எடுக்கும்போது கடும் வலி தொடர்ந் தாலோ, குதிகால் நிறம் இழந்தாலோ, உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும்.

கீதா, கூடலூர், நீலகிரி: என் மகனுக்கு எட்டு வயதாகிறது. அவனுக்கு, மூக்கில் அடிக்கடி ரத்தம் வருகிறது. ரத்தப் பரிசோதனை செய்ததில், பிரச்னை ஏதும் இல்லை என்று மருத்துவர் கூறி விட்டார். மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டாலும், ரத்தம் வடிவது நிற்கவில்லை. என்ன சிகிச்சை உள்ளது?மூக்கிற்கு சாதாரணமாகவே அதிக ரத்தம் செல்லும். இங்கு வரும் ரத்தம், வெளித்தோலுக்கு அடியிலேயே ஓடுகிறது. அந்த வெளித்தோலே மிகவும் மெலிதாக இருக்கும். இதனால் தான் பலருக்கும் மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறது. மூக்கில் காயம் ஏற்பட்டாலோ, மூக்கை கிள்ளினாலோ, வெயில் அதிகரித்தாலோ, மூக்கில் ரத்தம் வடியும்.ரத்தக் கசிவை நிறுத்த, முதுகை நேராக நிமிர்த்தி அமர்ந்து, முன்பக்கமாகச் சாய்ந்து, மூக்கை அழுத்திப் பிடிக்க வேண்டும். படுக்கக் கூடாது; படுத்தால் ரத்தக் கசிவு அதிகரிக்கும். மூக்கின் வெளிப்பக்கத்தில் ஐஸ் கட்டியை வைக்கவும். "ஆக்சிமெடாசோலைன்' அடங்கிய, "ஆட்ரிவின்/ நேசோவியான்' சொட்டு மருந்துகளை மூக்கில் ஊற்றவும். 20 நிமிடங்களுக்கும் மேலாக ரத்தக் கசிவு தொடர்ந்தாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ, டாக்டரை உடனடியாக அணுகவும். மிகச் சிலருக்கே, அதிக ரத்த அழுத்தம் அல்லது மூக்கில் கட்டி ஆகியவற்றால் ரத்தக் கசிவு ஏற்படும். தொடர்ந்து கசிவு ஏற்பட்டால், மூக்குத் தோலுக்கு சுடு சிகிச்சை (காடரைசேஷன்) செய்ய வேண்டி வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !