உள்ளூர் செய்திகள்

கனவு தவிர்... நிஜமாய் நில்!: கோல்டு, டைமண்டு, பிளாட்டினத்தில் உடல் பரிசோதனை!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்தி விடலாம்; மீண்டும் வராமல் தடுக்கவும் முடியும். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், முற்றிய நிலையில், அதாவது, 2 -3வது நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர்.பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில், அரசு பன்நோக்கு மருத்துவமனையில், குறைந்த கட்டணத்தில், 'அம்மா முழு உடல் பரிசோதனை' துவக்கப்பட்டு உள்ளது.கர்ப்பப்பை வாய் பரிசோதனைக்கான, 'பேப் ஸ்மியர்' பரிசோதனைக்கு மட்டும், தனியார் பரிசோதனை மையங்களில், 2,000 - 3,000 ரூபாய் வரை கட்டணமாக உள்ளது. ஆனால், இங்கு, அம்மா கோல்டு, டைமண்டு, பிளாட்டினம் ஆகிய மூன்று வகையில் பரிசோதனைகள் உள்ளன. முதல் வகையான, 'அம்மா கோல்டு' வகையில், முழுமையான ரத்த, சிறுநீரக, கல்லீரல், இதய செயல்பாடு உட்பட, அனைத்து பரிசோதனைகளுடன் சேர்த்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும், 1,000 ரூபாய்க்கு செய்யப்படுகிறது.'டைமண்டு' பரிசோதனையில், 2,000 ரூபாய் கட்டணத்தில், முதல் வகையில் செய்யப்படும் பரிசோதனைகளுடன் சேர்த்து, புற்றுநோய், தைராய்டு போன்றவையும் செய்யப்படுகிறது. 3,000 ரூபாய்க்கு செய்யப்படும், 'பிளாட்டினம்' பரிசோதனையில், முதல் இரண்டு வகையில் செய்யப்படும் பரிசோதனைகளுடன் சேர்த்து, வைட்டமின் டி, மார்பகப் புற்றுநோயை கண்டறியும், 'மேமோகிராம்' பரிசோதனையும் செய்யப்படுகிறது.'மெனோபாஸ்' வயதை எட்டிய பெண்களுக்கே, கால்ஷியம் குறைபாடால் ஏற்படும், எலும்பு தொடர்பான பிரச்னைகள் வரும் என்பது பொதுவான விஷயம். ஆனால், தற்போதுள்ள வாழ்க்கை முறை மாற்றத்தால், இளம் வயதிலேயே, வைட்டமின் டி குறைபாடு உள்ளது. இது, மிகப் பொதுவான விஷயமாகி விட்டது என்பது கவலையான விஷயம். நீரிழிவு பிரச்னை இருப்பவர்களுக்கும், வைட்டமின் டி குறைபாடு வரலாம்.ஞாயிறு தவிர மற்ற நாட்களில், தினமும், 50 பேருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த வசதி உள்ளது. விரைவில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், முழு உடல் பரிசோதனை வசதியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.www.tngmssh.msc.com044 25666111, 7338835555டாக்டர் ஆனந்த குமார்தொடர்பு அதிகாரி, அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை.nodalofficer2071@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !