உள்ளூர் செய்திகள்

டாட்டூ போடுவதால் பரவும் வைரஸ்!

உடல் பருமன், கல்லீரலில் கொழுப்பு படிவது, சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு 'ஹெப்படைடிஸ் வைரஸ்' பாதிப்பு ஏற்பட்டால், அதன் விளைவுகள் தீவிரமாக இருக்கலாம். ஹெப்படைடிஸ் வைரசில் 'ஏ - ஈ' வரை பல வகைகள் உள்ளன; தற்போது 'ஜி' என்று புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வகை, இது வரையிலும் மனிதர்களிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.ஏ, ஈ ஆகிய இரு வகை வைரஸ் பாதிப்புகளையும் உணவு, குடிநீர், சுற்றுச்சூழல் இவற்றை சுத்தமாக வைத்து, சுகாதாரமான பழக்கங்களை கடைப்பிடிப்பதன் வாயிலாக எளிதாக தவிர்க்க முடியும். காரணம், ஏ, ஈ ஆகியவை சுகாதாரமற்ற உணவு, நீர், மாசுபட்ட இடங்கள், மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இருந்து பரவுகிறது; நம் நாட்டில் இந்த பாதிப்பு பொதுவான விஷயம்.பி, சி, டி போன்றவை பாதுகாப்பில்லாமல் ரத்தம் ஏற்றுவது, ஒருவர் பயன்படுத்திய ஊசியை பலரும் உபயோகிப்பது, பொது இடங்களில் உடலில் 'டாட்டூ' போடுவதன் வாயிலாக பரவும். கர்ப்பிணிக்கு, ஹெப்படைடிஸ் பாதிப்பு இருந்தால், கருவில் உள்ள குழந்தைக்கும் வரலாம். கர்ப்பம் உறுதியானதும் இதற்கான பரிசோதனை செய்து, அதில் தொற்று இருப்பது கண்டறியப் பட்டால், எளிதாக குணப்படுத்த இயலும்.ஹெப்படைடிஸ் ஏ தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தில் உள்ளது. குழந்தைக்கு 1 வயதாகும் போது முதல் ஊசியும், அடுத்த ஆறு மாதங்கள் கழித்து இரண்டாவது 'டோஸ்' ஊசியும் போட வேண்டும். பி வைரசிற்கு மூன்று டோஸ் தேவைப்படும். பிறந்தவுடன் முதல் மாதம், ஆறு மாதம் கழித்து என்று போட வேண்டும். 95 சதவீதம் பாதுகாப்பு தருவதோடு, சி வைரசிற்கும் சேர்த்தே பாதுகாப்பு தரும்.வரும், 2024ம் ஆண்டிற்குள் இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என, உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. சிலருக்கு இந்த வகையில் எது பாதித்தாலும், அறிகுறிகள் வெளியில் தெரியாமல் இருக்கலாம். காலையில் எழுந்திருக்கும் போது, காரணமே இல்லாமல் அலுப்பாக இருக்கும். பசி இருக்காது; வாந்தி வரும் உணர்வு இருக்கும். தீவிர அறிகுறியாக இருந்தால் சிறுநீர் மஞ்சளாக, தோல் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் மாறும். காய்ச்சல் இருக்கலாம்; பரிசோதனை செய்து உறுதிப்படுத்துவது நல்லது. கவனிக்காமல் விட்டால், கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு.இதற்கான ரத்தப் பரிசோதனை, அனைவரும் செய்யக் கூடிய வகையில் எல்லா இடத்திலும் கிடைக்கிறது. கல்லீரலில் கொழுப்பு படியும் 'பேட்டி லிவர்' அதிக கொழுப்பு உடலில் சேருவது, சர்க்கரை கோளாறு, அதிக உடல் எடையால் கல்லீரல் பாதிப்பு வரலாம். இவர்களுக்கு வைரஸ் தொற்றும் ஏற்பட்டால், பாதிப்பு அதிகம் இருக்கும்.டாக்டர் கே.வினோதினி நுண்ணுயிரியல் மூத்த ஆலோசகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்