இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள், தேர்வு நாட்களில், இரவு, பகலாக கண் விழித்து படிக்காத, கல்லூரி மாணவர்களே இல்லை எனச் சொல்லலாம். எப்படியாவது, தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமென்ற கட்டாயத்தில், நாட்கணக்கில், இரவு கண்விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்குகிறார், சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆர்.எம்.ஓ., ஆனந்த் பிரதாப்.ஒரு மனிதனுக்கு, இரவில், 6:00 முதல் 8:00 மணி நேரம் வரை, தூக்கம் அவசியம். இந்த தொடர் தூக்கம் தடைபடும்போது, அது, மறுநாள் காலை, உடல் சோர்வு, தெளிவற்ற பேச்சு, கவனக்குறைவு என, பல வகையில் வெளிப்படுகிறது. தேர்வுக்காக, இரவு நேரத்தில், விடிய விடிய படிக்கும் மாணவர்கள், மறுநாள் தேர்வின்போது, குழப்பமான மனநிலை, ஞாபக மறதி, கவனமின்மை போன்றவற்றுக்கு ஆளாகி, தேர்வை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் போகிறது.மேலும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையிலும், காலை, 5:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், படிக்கும் பாடங்கள் தான் நினைவில் நிற்கும் என்பதால், இரவு முழுக்க கண்விழித்து படிக்கும் மாணவர்களுக்கு, தேர்வில், பெரிதாக பலன் ஏதும் கிடைப்பதில்லை.இரவில் படிக்கும்போது, உறக்கம் வராமல் இருக்க, அவ்வப்போது, டீ, காபி குடிக்கும் பழக்கம், பல மாணவர்களுக்கு உள்ளது. இதனால், அவர்களின் உறக்க சுழற்சி முறை தடைபட்டு, நாளடைவில் அவர்களுக்கு, நிரந்தர தூக்கமின்மை, மனநலப் பிரச்னை ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, தேர்வு நேரத்தில் மாணவர்கள், இரவில் படிப்பதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாதபட்சத்தில், கண்களை குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டு, அதிகபட்சம், 11:00 மணி வரை படிக்கலாம். இதனால், மூளை சூடாவதை தவிர்க்கலாம். தேர்வு விடுமுறை நாட்களில், காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையும், மனதை ஒருமுகப்படுத்தி படித்தாலே, தேர்வில் வெற்றிப் பெறலாம். இந்நாட்களில், மதியம், 2:00 மணி முதல் 4:00 மணி வரை ஓய்வும், 4:00 மணி முதல் 5:00 மணி வரை, உடற்பயிற்சியும் அவசியம்.இவற்றுக்கு மேலாக, கல்லூரி திறந்த நாள் முதல், தினமும், குறைந்தபட்சம், இரண்டு மணி நேரம் படிக்கும் பழக்கத்தை, மாணவர்கள் கடைபிடித்தால், தேர்வு நேரத்தில், இரவு கண்விழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது.