"எந்த குரூப் ரத்தம் இருந்தால் மாரடைப்பு வரும்
எம். விஜயசங்கர், மதுரை: சாக்லேட் உண்பதால் இருதயத்திற்கு பாதிப்பு வருமா?சாக்லேட் உண்பதால் இருதயத்திற்கு பல வழிகளில் நன்மை உள்ளதாக தெரியவந்துள்ளது. 'DARK CHOCALATE' உண்பதால் ரத்தஅழுத்தத்தின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு வரும் தன்மை குறைக்கப்படுகிறது. இதற்கு சாக்லேட்டில் உள்ள Flavenols என்ற பொருள் உதவுகிறது. ஆனால் சாக்லேட் உண்பதால் எடை கூடி, அதனால் வரும் பாதிப்புகளும் உள்ளன. எனவே சாக்லேட்டை அளவோடு உண்டால், அது மிகச்சிறந்த இருதய டானிக்காக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி, நினைவாற்றல் சக்தியையும் அது அதிகரிக்கிறது.எஸ். சீத்தாராமன், கொடைக்கானல்: எனது வயது 49. நான்கு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. நடக்கும்போது முதுகில் வலி ஏற்படுகிறது. வலி மாத்திரைகள் எடுத்தபின்னும், குறையவில்லை. நான் என்ன செய்வது?நடக்கும்போது முதுகில் வலி ஏற்பட்டால் அது இருதய நோயாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நடக்கும்போது இடது, வலது அல்லது நடுநெஞ்சிலோ, கழுத்து, தோள்ப்பட்டை, தாடை, இடது, வலது கைகள், மேல்வயிற்றில் அல்லது முதுகில் வலி ஏற்பட்டால் அது இருதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே நீங்கள் உங்கள் டாக்டரை அணுகி எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இதில் கோளாறு இருந்தால் அவசியம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை தேவைப்படும். பரிசோதனை முடிவுக்கு ஏற்ப சிகிச்சை முறை அமையும்.ஆர்.கே. பரந்தாமன், காரைக்குடி: ஒருவரின் ரத்த குரூப்புக்கும், இருதய நோய்க்கும் சம்பந்தம் உள்ளதா?மனித ரத்தம் நான்கு வகைகளாக (குரூப்) உள்ளன. A, B, AB, O என அவை பிரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர இவை அனைத்தும் பாசிட்டிவ், நெகட்டிவ்களாக உள்ளன. மாரடைப்பை பொறுத்தவரை ரத்தப் பிரிவுகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின்படி, 'O' குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வரும் தன்மை, பிறரைவிட 6 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிகிறது. இதற்கு காரணமாக A, B, AB குரூப்களில் ரத்தத்தில் உள்ள FACTOR VIIIன் அளவு 'O' குரூப்பைவிட 25 சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே பொதுவாக கூறவேண்டும் என்றால் மற்ற குரூப்களுக்கு உள்ளதைவிட, 'O' குரூப் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும் தன்மை 6 சதவீதம் குறைவாகவே உள்ளது.கே. நந்தகுமார், விருதுநகர்: எனது பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. எனவே எனக்கு சர்க்கரை நோய் வருவதை தடுக்க முடியுமா?பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால் வாரிசுகளுக்கு வரும் தன்மை பலமடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் சரியான உணவுப் பழக்கம், தினமும் நடைப்பயிற்சி, அரிசி உணவை குறைத்துக் கொள்வது, சர்க்கரையை அறவே தவிர்ப்பது, ரெகுலராக உடற் பரிசோதனை செய்வது மூலம் சர்க்கரை நோய் வருவதை தடுக்க முடியாவிட்டாலும், கண்டிப்பாக தள்ளிப் போட முடியும்.- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.