மகிழ்ச்சிக்கு இருக்கு வழி
மகிழ்ச்சி, என்ன விலைக்கு கிடைக்கும்; மகிழ்ச்சியை தன் பக்கம் வைத்துக் கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி இது. இதைக் கொண்டாட, பல வழிகள் இருக்கின்றன. மனைவி, குழந்தைகள், நல்ல நண்பர்களை நேசியுங்கள். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறை, அன்பு வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.பிரச்னை வரக்கூடாது என்று நினைக்க கூடாது. பிரச்னை வந்தால், அதை தாங்கும் வலிமை வளரவேண்டும் என்று நினைக்க வேண்டும். சமாளிக்கும் திறனை வளர்த்தால், எவ்வித பிரச்னை வந்தாலும், தூசியாய் பறந்து போகும். நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, மனம் குதூகலிக்கும். அடிக்கடி கவலைப்படுவதால், நமக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த காலத்தை நினைத்து, நிகழ்காலத்தை வீணாக்கி விட வேண்டாம். மகிழ்ச்சிக்கு பெரிதும் கைகொடுப்பது, நகைச்சுவை உணர்வு. சிரிப்பு, மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய பரிசு; அதை பயன்படுத்த வேண்டும்.கோபம் என்பது, அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்து கொள்ளும் சுய தண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? அவர்களை மன்னித்து பாருங்கள். மறப்போம், மன்னிப்போம் என்ற கூற்றை, எப்போதும் வைத்திருங்கள்.ஒருவர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்றால், நன்றி சொல்ல மறக்காதீர்கள். உறவின் பலத்தை, இது அதிகரிக்கும். குறிப்பிட்ட செயலை, முயன்றாவது முடிக்க கற்றுக் கொண்டால், உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள தியானம் முக்கியம். தியானம் செய்தவர்களின் மூளையில், தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல், 20 சதவீதம் அதிகரிக்கிறதாம்.