அல்ட்ரா சவுண்டு சிகிச்சை - நன்மைகளும் - வதந்திகளும்!
எக்ஸ் ரே, சிடி ஸ்கேன்களில் உபயோகிக்கும் அணுக்களில் இருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த அயனியாக்கும் கதிர்வீச்சை அல்ட்ரா சவுண்டில் பயன்படுத்துவதில்லை. திசுக்கள், செல்களில் எவ்வித பாதிப்பையும் எற்படுத்தாத, இதைவிட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை பயன்படுத்துகிறோம். இது கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வளர்ச்சியை கண்காணிப்பதற்கு உதவுகிறது. கதிர் வீச்சினால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. கருவில் உள்ள குழந்தை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு பொதுவாக இம்முறை பயன்பட்டாலும், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், தசைகள், தசைநாற்கள், மூட்டுகள், ரத்த நாளங்கள் என்று உள் உறுப்புகளை பரிசோதித்து நோய்களை கண்டறிய உதவுகிறது . இதில், 2டி, 3டி, 4டி டைனமிக் இமேஜிங், ரத்த ஓட்டத்தை அறிய டாப்ளர், எலாஸ்டோகிராபி என்று பல வகைகள் உள்ளன. அனுபவம் மிக்க வல்லுநர் கையாளும் போது, முடிவுகள் துல்லியமாக இருக்கும். பரிசோதனையின் போது எவ்வித வலியோ, அசவுகரியமோ இருக்காது. 2டி, 3டி அல்ட்ராசவுண்ட் இரண்டிலும் ஒரே மாதிரியான ஒலி அலைகள் உள்ளன. முப்பரிமாண முறையில் 3டி முடிவுகள் இருக்கும். அல்ட்ரா சவுண்டு சிகிச்சை தசைகள், தசைநார்கள், மூட்டுகளில் வலி, வீக்கத்தை குறைக்க அல்ட்ரா சவுண்டு ஒலி அலைகளைப் பயன்படுத்தலாம். இந்த சிகிச்சை திசுக்களைத் துாண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. காயமடைந்த பகுதிகளுக்கு ஊட்டச்சத்து, ஆக்சிஜனை கொண்டு செல்வதை அதிகரிப்பதால், திசுக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு வருகிறது. பிசியோதெரபி சிகிச்சையில் இதை அதிக அளவில் பயன்படுத்துவர். கருப்பை தசை நார்க்கட்டி, திசுக்கட்டிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து, சுருக்கி, அறுவை சிகிச்சை இல்லாமல், நீக்க முடிகிறது. இடுப்பில் உள்ள நரம்புகள் வீங்கி, தடிப்பதால் இடுப்பு பகுதியில் ஏற்படும் வலியை போக்க அல்ட்ராசவுண்ட் சிகிச்சை உதவுகிறது. இது தவிர, பிரசவத்திற்கு பிந்தைய ரத்தப் போக்கு, கருப்பை நீக்குதல், பெலோபியன் குழாய் அடைப்பு, கருப்பையின் உட்புற திசு, தசை அடுக்கில் வளர்வதால் அதிக ரத்தப்போக்கு, வலி போன்ற பிரச்னைகளுக்கும் இமேஜ்-கைடட் எம்போலைசேஷன் சிகிச்சை உதவும். நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப அல்ட்ரா சவுண்டு சிகிச்சைகள் இருக்கும். டாக்டர் டி. விஸ்வந்த், உள் நோக்கு கதிரியக்க மருத்துவ ஆலோசகர்,கிளெனீகல்ஸ் மருத்துவமனை, சென்னை. 72990 45880 info.chn@gleneagleshospitals.co.in