தற்கொலை எண்ணம் ஏற்பட வளர்ப்பும் முக்கிய காரணம்
உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை கவுன்சிலிங், மருந்து மற்றும் தெரபிக்களால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிறார், இ.எஸ்.ஐ., மருத்துவமனை மனநல இணை பேராசிரியர் டாக்டர் கண்ணன். மன அழுத்தத்திற்கும் மனச்சோர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?மன அழுத்தம் என்பது வெளிப்புற சூழல் காரணமாக ஏற்படும் தற்காலிக எதிர்வினை. தேர்வு, வேலைப்பளு, குடும்ப பிரச்னை போன்ற சூழல்களின் போது கோபம், பதட்டம் ஏற்படும். அச்சூழல் மாறியதும் மனநிலை மாறிவிடும்.மனச்சோர்வு என்பது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் நிகழ்வது. எந்த வேலையிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, துாக்கம் கெடுவது, காரணமின்றி கவலைப்படுவது, தற்கொலை எண்ணங்கள், தனிமை போன்றவற்றால், வழக்கமான வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏற்பட்டால், மனச்சோர்வு இருப்பதாக உறுதி செய்யலாம்.மகிழ்ச்சி ரசாயனங்களான செரட்டோனின், டோபமைன் குறைவாக சுரக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் ரசாயனத்தை, அட்ரீனல் சுரப்பி அதிகமாக சுரக்கும் போது, துாக்கம் கெடுவது, ரத்த அழுத்தம் உயர்வது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மனச்சோர்வு பாதிப்புக்கு, தெரபி, மருந்துகள், கவுன்சிலிங் ஆகிய மூன்றும் அவசியம். மருத்துவ ரீதியாகதான் பாதிப்பில் இருந்து மீட்க முடியும்.இளைஞர்கள் மத்தியில் தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? எப்படி தடுப்பது?குழந்தைகளாக இருக்கும் போதே, அவர்களின் ஆளுமைப்பண்பில் உள்ள மாற்றங்களை கவனிக்க வேண்டும். மனச்சோர்வு காரணமாக ஏற்படுகிறதா அல்லது அவர்களின் பரம்பரையில் யாருக்கேனும் இந்த பாதிப்பு இருந்ததா, பெற்றோர் வளர்ப்பு முறை ஆகியவற்றை கவனிக்க வேண்டும். உளவியல் ரீதியான பிரச்னைக்கு தீர்வு, நபருக்கு நபர் மாறுபடும்.பிறந்தது முதல் வளரும் சூழல், குணநலன், ஆளுமைப்பண்பு, சமூக அமைப்பு, வீட்டில் பிறர் நடந்து கொள்ளும் முறை, முந்தைய காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்கள் என பல விஷயங்களை ஆய்வு செய்த பிறகே சிகிச்சை அளிக்க முடியும்.பல பெற்றோர், குழந்தைகள் அடம்பிடித்தால் உடனே செய்து தருகின்றனர். இப்படி பழக்குவதால், ஒரு கட்டத்தில் சக்திக்கு மீறியதை கேட்கும் போது, அதை செய்ய முடியாத சூழலில் தற்கொலை செய்வதாக பயமுறுத்துவதும் நடக்கிறது.உளவியல் சிகிச்சையில் இருப்பவரை எப்படி நடத்த வேண்டும்?குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். சிலர் முறையாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மருந்துகளை சரியாக கொடுப்பது அவசியம். அவர்களுக்கு ஏற்படும் அனைத்து மாற்றங்களையும், மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம். அதற்கேற்ப மருந்துகள் மாற்றி வழங்கும் போது, இப்பாதிப்பில் இருந்து எளிதில் மீட்க முடியும்.- டாக்டர் பி.கண்ணன், இணை பேராசிரியர், இ.எஸ்.ஐ. மருத்துவமனை.dlo.bkannan@gmail.com