உள்ளூர் செய்திகள்

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...

தோலில் ஏற்படும் வெண் புள்ளிகளை 'விட்டிலிகோ' என்று சொல்லுவோம். அதீத மன அழுத்தம், சுற்றுப்புற மாசு, சாப்பிடும் உணவில் உள்ள நச்சுகள், துாக்கமின்மை, அளவுக்கு அதிகமாக துாங்குவது என்று ஏதோ ஒரு புறக்காரணி, காரணம் இல்லாமல், நம் நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டலாம். இதனால் ஏற்படும் குழப்பத்தில் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்கள், அன்னிய கிருமி என்று தவறாக நினைத்து, நம் செல்களை அழிக்கும்.'ஆட்டோ இம்யூன் டிசார்டர்' என்று சொல்லப்படும் இச்செயல் உடலில் எந்தப் பகுதியை பாதிக்கிறதோ, அதற்கேற்ப பிரச்னைகள் வரும். அதில் ஒன்று தான் விட்டிலிகோ. இதில் நோய் எதிர்ப்பு செல்கள், தோலுக்கு நிறம் கொடுக்கும் 'மெலனோசைட்ஸ்' என்ற நிறமியை முழுமையாக சிதைத்து விடும். எந்த இடத்தில் நிறமி தாக்குதலுக்கு உள்ளாகிறதோ, அந்த இடம் வெள்ளையாகி விடும்.இரண்டு வயது குழந்தை முதல், 90 வயது தாத்தா வரை யாரை வேண்டுமானாலும் இது பாதிக்கலாம். சிலருக்கு ஒரு இடத்தில் மட்டும் வந்து, வேறு எங்கும் பரவாமல் அப்படியே இருக்கும். சிலருக்கு உடல் முழுதும் பரவும். பாதிப்பு ஏற்பட்டதும் சிகிச்சை எடுத்தால், மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுக்கலாம்.விட்டிலிகோவால் பாதிக்கப் பட்டவர்கள் சமுதாயத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, இளம் வயதினருக்கு இப்பிரச்னை வந்தால், திருமணம் நடப்பது சிரமம். இயல்பாக இல்லாதவர்களை ஒதுக்கி வைக்கும் மனநிலை இருப்பது ஒரு புறம் என்றால், பெரும்பாலும் இவர்களுடன் நெருங்கி பழகினால், எங்கே நோய் நமக்கும் தொற்றிக் கொள்ளுமோ என்ற அச்சம் இருக்கிறது. இதற்கு காரணம், பலரும் இதை தொழு நோயுடன் சேர்த்து குழப்பிக் கொள்கின்றனர். வெண் குஷ்டம் என்று சொல்வதுண்டு. தொழு நோய் என்பது பாக்டீரியா தொற்றால், தோலில் வரக்கூடிய தொற்று வியாதி; விட்டிலிகோ நோய் எதிர்ப்பு செல்களின் தவறான புரிதலால் ஏற்படும் கோளாறு. இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கிரீம் உட்பட வெளியில் பூசும் மருந்துகள், பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிவாரணம் தரும். மற்ற இடத்தில் பரவுவதை தடுக்காது. எனவே, மாத்திரைகள் சாப்பிடுவதே நல்லது. ஐந்து ஆண்டுகள் சிகிச்சை எடுத்தும் எந்த பலனும் இல்லாவிட்டால், நன்றாக இருக்கும் தோலை எடுத்து பாதித்த இடத்தில் 'ஸ்கின் கிராப்டிங்' செய்யலாம். 'காரணமே தெரியாமல் எனக்கு பிரச்னை வந்து விட்டது. இதனால், மனதளவில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்று தன்னம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. எப்போது பிரச்னை என்று தோன்றுகிறதோ, அப்போது மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.டாக்டர் கதீஜா நசிகா, தோல் மருத்துவர், ரேலா மருத்துவமனை, சென்னை044 - 6666 7777 www.relainstitute.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்