உள்ளூர் செய்திகள்

டிவி பார்ப்பதால் ரத்த சர்க்கரை உயரும்!

நீண்ட நேரம் 'டிவி' பார்ப்பது, மணிக்கணக்கில் மொபைல் பயன்படுத்துவது, கம்ப்யூட்டரில் தொடர்ச்சியாக வேலை செய்வது, 'டைப் - 2' சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கிறது என்பது, நாங்கள் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வு முறை இந்த ஆய்வில், 'டைப் - 2' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட, 217 பேர் கலந்து கொண்டனர். இவர்களின் தினசரி 'டிவி' நேரம், துாக்க பழக்கம், மொபைல் பயன்பாடு, ரத்த சர்க்கரை அளவு, ஆகியவை குறித்து கேட்டபின், இத்தனை நாட்களாக இருந்த 'டிவி' பார்க்கும் நேரம் மற்றும் மொபைல் பயன்பாட்டை எந்த அளவு முடியுமோ அவ்வளவு நேரம் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை தரப்பட்டது. இதை எப்படி செயல்படுத்துவது என்று எங்களுடன் உளவியல் நிபுணர்களும் ஆலோசனை தந்தனர். 'டிவி' பார்க்கும் நேரத்தை மட்டும், ஒரு நாளைக்கு 30 -- 45 நிமிடங்களாகக் குறைத்தோம். மொபைல் உபயோகிக்கும் நேரத்தையும், முடிந்த அளவு குறைக்கச் சொன்னோம். மூன்று மாதங்களுக்குப் பின், இவர்களின் ரத்த சர்க்கரை அளவை முந்தைய முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். ரத்த சர்க்கரை அளவு, கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. ஏன் முக்கியம்? நீண்ட நேரம் 'டிவி' பார்ப்பதால், உடல் செயல்பாடு குறைகிறது; அதிக உணவு மற்றும் மோசமான துாக்கம், மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இதனால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் போகிறது. குறிப்பாக உறங்கச் செல்லும் முன், 'டிவி' பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, இயல்பாகவே ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது என்பதை ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது. பொது மக்களுக்கான செய்தி காலை எழுந்ததும் முதல் ஒரு மணி நேரம், இரவில் துாங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக டிவி, கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கம்ப்யூட்டர் முன் இருக்கும் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 வினாடிகள், 20 அடி துாரத்தைப் பார்ப்பது, நேரத்தை கடிகாரத்தில் பார்ப்பது; ஸ்க்ரோலிங் செய்வதற்கு பதிலாக நடைபயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது, இரவு உணவை டிவி பார்க்காமல் குடும்பத்தினருடன் சாப்பிடுவது, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். கண்களுக்கும், ரத்த சர்க்கரைக்கும் மன அழுத்தத்திலிருந்து மட்டுமல்ல, மொபைல், கம்ப்யூட்டர் திரையில் இருந்தும் ஓய்வு அவசியம். டாக்டர் அஸ்வின் கருப்பன், பொது மற்றும் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், கிளினிக்கல்ஸ் மருத்துவமனை, சென்னை. 79967 89196info@gleneagleshospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !