இதயத்தை சுற்றி நீர்... இது என்ன வியாதி?
ஆர். பரமசிவம், மதுரை: எனக்கு இரு மாதங்களாக மூச்சுத் திணறல் உள்ளது. எக்கோ பரிசோதனை செய்து பார்த்ததில், இதயத்தை சுற்றி நீர் உள்ளதாக வந்துள்ளது. இது என்ன வியாதி?இதயத்தை சுற்றி 'Pericardium'' என்ற உறை போன்ற ஒரு அமைப்பு உள்ளது. இது இதயத்திற்கு பல்வேறு வழிகளில் பயன்படுகிறது. ஒருசில வியாதிகளின் போது இந்த உறையில் நீர் தேங்கும் தன்மை உள்ளது. நமது நாட்டில் இந்த நீர் தேங்குவதற்கான முக்கிய காரணம், Tuberculosis' ' தான்.இதுதவிர இன்னும் சில காரணங்களாலும் குறிப்பாக புற்றுநோய், உடலில் நீர் தேக்கம் போன்றவற்றாலும் இதுபோன்று இதயத்தைச் சுற்றி நீர் தேங்கலாம். எனவே இதயத்தைச் சுற்றி எதனால் நீர் தேங்கி உள்ளது என்று கண்டறிய வேண்டும். அதற்கு அந்த நீரை எடுத்து பரிசோதனை செய்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். இன்னும் சிலருக்கு அதிகளவு நீர் தேங்கி இதயத்தையே செயலிழக்கச் செய்யும் நிலையும் ஏற்படலாம். இதை 'Tamponade' என்பர். இது ஒரு மருத்துவ நெருக்கடியான நிலையாகும். இதற்கு ஒரு ஊசியோ அல்லது குழாயோ செலுத்தி, இந்த நீரை உடனடியாக அகற்ற வேண்டும். எனவே எதனால் இந்தளவு நீர் உள்ளது என்பதை பொறுத்தே இவ்வியாதிக்கான சிகிச்சை அமையும்.கே.நடராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர்: எனக்கு வயது 30. கடந்த இரு ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதற்கு இரண்டு வகை மாத்திரைகளை எடுத்து வருகிறேன். தற்போது எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. நான் திருமணம் செய்து கொள்ளலாமா? மருந்துகள் எனது திருமண வாழ்வை பாதிக்குமா?சிறிய வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது மிகக்கொடூரமானது. இதற்கு உணவுக் கட்டுப்பாடு, மனதை லேசாக வைத்து கொள்வது, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். மருந்துகளை வேளை தவறாமல் எடுப்பது முக்கியம். இந்த வயதில் இருந்தே உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், பிற்காலத்தில் கொடூர பாதிப்பை, குறிப்பாக மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக கோளாறுகள் போன்ற வியாதிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இருந்தாலும் இவ்வியாதியை கண்டு அச்சப்படத் தேவையில்லை.தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். தற்போது ரத்த அழுத்தத்திற்கு பக்கவிளைவுகள் இல்லாத நல்ல மருந்துகள் வந்துள்ளன. இதை எடுத்துக் கொண்டு வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக் கொண்டால், பாதிப்பு இன்றி திருமண வாழ்வை மேற்கொள்ளலாம்.பி.கண்ணபிரான், கோவை: எனக்கு மூன்று மாதங்களாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனது இதய டாக்டர், 'Nitrate, Aspirin, Clopilet, Nicorandil, Atorva Statin, Metaprolol'ஆகிய மாத்திரைகளை தந்துள்ளார். இந்த மாத்திரைகளை எடுத்தவுடன், எனக்கு நெஞ்சுவலி குறைந்துவிட்டது.ஆனால் தீவிர தலைவலி ஏற்பட்டுள்ளது. இதற்காக டாக்டரிடம் சென்றபோது, Nitrate மாத்திரையால் ஏற்பட்டுள்ளது என்று கூறி, அதை நிறுத்தும்படி கூறினார். அந்த மாத்திரையை நிறுத்திய பின்பும் தலைவலி உள்ளது. இதனால் அனைத்து மாத்திரைகளையும் நிறுத்திவிட்டேன். இது சரியா?முதலில் உங்கள் டாக்டருடைய ஆலோசனை இன்றி அனைத்து இதய மாத்திரைகளையும் நிறுத்தியது மிகப்பெரிய தவறு. இதனால் இதயத்திற்கு பல வகைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் கூறிய மாத்திரையில் Nicorandil என்ற மாத்திரையாலும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதையும், Nitrate மாத்திரையையும் நிறுத்திவிட்டு மற்ற மாத்திரைகளை எடுத்தால் தலைவலி ஏற்படாது. எனவே நீங்கள் இந்த இரண்டு மாத்திரைகளை தவிர மற்ற அனைத்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.எஸ்.ராஜேந்திரன், சிவகங்கை: 45 வயதான எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரையை ரத்தத்தில் மிகவும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். அவ்வப்போது புகை பிடிக்கும் பழக்கமும் உள்ளது. இதனால் பாதிப்பு வருமா?தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, மாரடைப்புக்கு மிக முக்கிய காரணம் புகை பிடிக்கும் பழக்கமே. இந்த பழக்கத்தால் 20, 30 வயதுகளிலேயே மாரடைப்பு வரும் தன்மை பல மடங்கு அதிகம். ஆகவே புகை பழக்கத்தை நிறுத்துவதே உங்கள் இதயத்திற்கு நீங்கள் செய்யும் முதற்படியான உதவியாகும்.என்ன தான் ரத்தத்தில் கொழுப்பின் அளவையும், சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், எத்தனை தான் நடைப்பயிற்சி மேற்கொண்டாலும், புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், அனைத்து கட்டுப்பாடுகளும் பலனின்றி போய்விடும். நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினர், நண்பர்களிடம் இப்பழக்கம் இருந்தால், அதை நிறுத்த செய்வதே உங்கள் கடமை.- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.