கர்ப்பிணியை பாதுகாப்பாக உணரச் செய்யும் வழிமுறைகள்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.தந்தையாக மாறுவதில் நிறைய பொறுப்புகள், சவால்கள் உள்ளன. கர்ப்பம் என்பது பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தமான காலம். கர்ப்ப காலத்தில் பல்வேறு உணர்ச்சிகள் வரலாம். இயல்பாகவே மன, உடல் ரீதியாக பலவீனமாக இருக்கும் போது, கூடுதல் அழுத்தத்தை சேர்க்காமல், அனைத்து விதங்களிலும் அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பது அவசியம்.ஒவ்வொரு முறை பரிசோதனைக்கு செல்லும் போதும், கர்ப்பிணிக்கு கவலை அதீதமாக இருக்கும். எனவே, மனைவியுடன் கணவர் செல்வது அவசியம். இது, மன, உடல் ரீதியாக பாதுகாப்பைத் தரும். முடிந்தவரை கர்ப்பிணி மனைவியுடன் நேரத்தை செலவிடுவது இருவருக்கும் பிணைப்பை அதிகரிக்கும்.கருத்தரித்த ஒரு மாதத்திற்குப் பின், 70 - 80 சதவீதம் பெண்களுக்கு காலையில் குமட்டல் வருவது இயல்பு.சில பெண்களுக்கு இது 12 - 14 வாரங்கள் வரை நீடிக்கலாம். இந்த சமயத்தில், குமட்டல், வாந்தி, தலைவலி, இருக்கும். இந்த நேரத்தில் ஆறுதலாக அருகில் இருப்பது அவசியம். நன்றாக ஓய்வெடுக்கலாம். வெளியே செல்ல விரும்பினால் காற்றோட்டமாக அழைத்துச் செல்லலாம். பிரச்னை அதிகமானால் உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை விரும்புகின்றனர். எனவே, பழங்கள், காய்கறிகள் நிறைய தருவதோடு, மனைவிக்கு விருப்பமான உணவுகளை சமைத்து தர வேண்டும். குழந்தையின் நலனுக்காக இதில் சமரசம் செய்ய வேண்டும். முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்த்து, நல்ல ஓய்வு, துாக்கத்திற்கு போதுமான நேரத்தை கொடுப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் தினமும் மிதமான உடற்பயிற்சி அவசியம். எனவே, மாலையில், வசதியான உடைகள், காலணிகள் அணிந்து நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, மனைவியுடன் சேர்ந்து நடப்பது மகிழ்ச்சியைத் தரும். எப்பொழுதும் கர்ப்பிணி மனைவியுடன் நேர்மறையான அணுகுமுறை, நேர்மறையான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது. கர்ப்ப காலத்தில் கலவையான உணர்வுகள், மனநிலையில் அடிக்கடி மாற்றங்கள் வரலாம். இவற்றையெல்லாம் புரிந்து பொறுமையாக இருப்பது முக்கியம்.கர்ப்ப காலத்தில் உடல் எடை மாறுவது, ஹார்மோன் மாற்றங்களால் உடல், மன சோர்வு போன்றவை தற்காலிக மாற்றங்கள்தான் என்று கர்ப்பிணிக்கு புரிய வைப்பது அவசியம். சிகரெட் பழக்கம் இருந்தால் நிறுத்த வேண்டும். புகைப்பதால் மனைவி, பிறக்கும் குழந்தை, சுற்றியுள்ள அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் கை, கால் மசாஜ் செய்து விடுவது, ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்வது, வசதியான உடைகள், காலணிகள் அணியச் செய்வது, மனைவிக்கு மன மகிழ்ச்சியைத் தரும்.அடுத்த ஒரு வாரத்தில் பிரசவத்தை எதிர்பார்க்கும் போது, தேவையான பொருட்கள், மருத்துவமனைக்கு செல்வதற்கான வாகன வசதி, மருத்துவக் காப்பீடு, கையில் சிறிதளவு பணம், அலுவலக விடுமுறை என்று முன்கூட்டியே தயாராக இருப்பது அவசியம்.பிரசவத்தின்போது மனைவியின் கைகளை பிடித்துக் கொள்வது, குழந்தை பிறந்ததும் உங்கள் கையில் வாங்கிக் கொள்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். பிரசவத்திற்குப் பிறகு மருத்துவ மனையில் கணவர்கள் தங்களுடன் இருக்கும்போது பெண்கள் பாதுகாப்பாக உணர்வர்.டாக்டர் விக்னேஷ்குமார்பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர்,சென்னை. 98941 60690