உள்ளூர் செய்திகள்

பற்கள் தானே விழுவதற்கு காரணம் என்ன?

இரண்டு வாரங்களுக்கு முன்பு, பல்டாக்டரிடம் சென்று சொத்தையான பல்லை அடைத்துக் கொண்டேன். தற்போது அடைத்த பல்லில் வலி ஏற்பட்டுள்ளது. இது எதனால்?

பல்லில் படியும் உணவுப் படலத்தில் உள்ள பாக்டீரியா நுண்கிருமிகள் பல்லின் மேற்பரப்பை அரித்து பற்சொத்தையை உருவாக்குகின்றன. இச்சொத்தை எனாமல் என்னும் பல்லின் மேல் உள்ள கடினமான மேற்பரப்பை அரித்த பின், டென்டின் என்ற அதற்கு அடுத்த அடுக்கை தாக்குகிறது. இந்நிலையில்தான் பற்சொத்தை பற்குழியாகிறது. நாம் மேற்கொள்ளும் சூடான அல்லது குளிர்ச்சியான உணவு மற்றும் திரவங்கள் பற்குழியில் படும்போது பற்கூச்சம் ஏற்படும். டென்டின் அடியில் உள்ள பற்கூழ் பகுதியில்தான் பல்லிற்கு ஊட்டம் அளிக்கும் ரத்தநாளங்கள் மற்றும் நுண்ணிய நரம்புகள் உள்ளன. பற்சொத்தை இப்பகுதியை தாக்கும்போது பல்வலி உருவாகிறது. தங்கள் பற்சொத்தை ஆழமாக பற்கூழ் பகுதிக்கு மிகஅருகில் இருந்தால், பல் அடைத்த பின் அழுத்தத்தால் பல்வலி ஏற்பட்டு இருக்கலாம். இப்பல்லை எக்ஸ்ரே மூலம் பரிசோதித்தால் இதை அறிய முடியும். பல்வலி தொடர்ந்து இருந்தால் இப்பல்லை அவர் வேர் சிகிச்சை செய்வது நல்லது. சில ஆண்டுகளாக எனது பற்கள் அரித்து தானே விழுந்து விடுகின்றன.

சிறுதுண்டுகள் மட்டும் ஈறுக்குள் உள்ளது. இதனால் எனக்கு வலி எதுவும் இல்லை. ஆனால் அவ்வப்போது ஈறுகளில் இருந்து சீழ் வருகிறது. இதற்கு மருந்து உண்டா?

தங்கள் பற்கள் அரித்து விழுவதற்கு காரணம் பற்சொத்தை மற்றும் ஈறுகள் பலம் இல்லாமையே. மீதியுள்ள வேர் துண்டுகளில் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தங்கிவிடக் கூடும். இதனால் கிருமி தொற்று ஏற்பட்டு சீழ் ஏற்படலாம். எஞ்சி உள்ள வேர்துண்டுகள் பலமாக இருந்தால் வேர்சிகிச்சை செய்து, அதன் மேல் செயற்கை பல் பொருத்தலாம். இல்லாவிட்டால் மீதியுள்ள வேர்த் துண்டுகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஈறுகளில் ஏற்படும் சீழ் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவக்கூடும். எனவே வேர்த் துண்டுகளை அகற்றி செயற்கை பல் பொருத்தலாம்.

புதிதாக உள்ள 'இம்பிளான்ட்' முறையில் செயற்கை பல்செட் பொருத்தினால் அதிக வலி ஏற்படுமா? அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

இம்பிளான்ட் முறையில் பற்களை கட்டுவதற்கு பொதுவாக மரத்து போவதற்கான ஊசி செலுத்தி, அதன் பின்பே இம்பிளான்ட் செய்யப்படும். இவ்வாறு செய்யும்போது அந்த ஊசிபோடும் வலி மட்டுமே இருக்கும். வேறு எந்த வலியும் இருக்காது. உங்களுக்கு ஊசிபோட பயமாக இருந்தால் அதை பல் மருத்துவரிடம் கூறி நவீன கருவி மூலமாக வலியின்றி மரத்து போகும் மருந்தை செலுத்தி, பிறகு இம்பிளான்ட் சிகிச்சை அளிப்பர். பெரும்பாலோருக்கு எலும்பு நன்றாக இருந்தால் இம்பிளான்ட் சிகிச்சை பல் எடுப்பதைக் காட்டிலும், எளிதாக இருக்கும். எலும்பு குறைவாக இருந்தால் செயற்கை எலும்பு உபயோகிக்க வேண்டி இருக்கும். அவ்வாறு செய்யும்போது மூன்று நாட்களுக்கு சிறிது வீக்கம் ஏற்படலாம். இதைத் தவிர அதை பொருத்தியபின் உணவு மெல்லும்போது வலி எதுவும் ஏற்படாது. இம்பிளான்ட் மூலம் பொருத்திய பல்செட் அல்லது தனிப்பற்களை நம் இயற்கையான பற்களை பராமரிப்பது போல, அன்றாடம் இருமுறை பல்துலக்கி, பிளாஸ் செய்து சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். இதைத் தவிர ஆறுமாதத்திற்கு ஒருமுறை பல் டாக்டரை சந்தித்து இம்பிளான்ட் மூலம் சுத்தம் செய்வதற்கென விசேஷ கருவிகள் மூலம் சுத்தம் செய்வது சிறந்தது. இவ்வாறு பராமரிக்கப்பட்ட இம்பிளான்ட் வாழ்நாள் முழுவதும் உபயோகப்படும்.

- டாக்டர் எஸ்.முத்துராமன்,மதுரை. 94430-61160


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்