சிசேரியன் செய்ய என்ன காரணம்?
கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் விருப்பம், 'நார்மல் டெலிவரி'யில் குழந்தை பெற வேண்டும் என்பது தான். குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல; டாக்டர்களாகிய நாங்களும் அதைத் தான் விரும்புகிறோம். அதனால் தான், கர்ப்பம் உறுதி ஆனதில் துவங்கி, கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கரு வளர்ச்சியில் குறைபாடு போன்ற, 'ஹை ரிஸ்க்' எனப்படும் அபாயகரமான உடல் பிரச்னைகள் உள்ளதா என்பதை கவனமாக கண்காணிக்கிறோம். இது போன்ற சூழ்நிலையில், நார்மல் டெலிவரிக்கு தரப்படும் காலக்கெடுவை மிகக் குறைவாகவே தருவோம். பிரச்னை வரலாம் என்று தெரிந்தால், உடனடியாக 'சிசேரியன்' செய்து குழந்தையை எடுத்து விடுவோம். இது வெறும் 10 சதவீத கர்ப்பிணிக்கு மட்டுமே. மற்ற 90 சதவீதம் பேருக்கு நார்மல் டெலிவரி ஆவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். அதே சமயம், பிரசவத்தின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 37 வாரங்களுக்கு பின், எப்போது வேண்டுமானாலும் பிரசவ வலி வரலாம். இயல்பாக வலி வந்தாலும், மருந்துகள் வாயிலாக வலியை வரவழைத்தாலும், நார்மல் டெலிவரி ஆவதற்கு நான்கு விஷயங்கள் சாதகமாக அமைய வேண்டும். * இடுப்பெலும்பு சுருங்கி விரிவது * குழந்தையின் தலை கீழ்நோக்கி வருவது * கர்ப்பப்பை வாய் 10 செ.மீ., வரை திறப்பது. குழந்தையின் தலை 9.5 செ.மீ., இருக்கும். கர்ப்பப்பை வாய் 10 செ.மீ., திறந்தால் தான், தலை எளிதாக வெளியில் வர முடியும். சிலருக்கு 4 செ.மீ., திறந்து, அதன்பின் எத்தனை ஊசி மருந்து செலுத்தினாலும், அதற்கு மேல் கர்ப்பப்பை வாய் திறக்காது. 10 செ.மீ., திறக்காவிட்டால் பிரவச வலி எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், குழந்தையின் தலை வெளியில் வராது. * இயல்பாக 120 - 160 வரை நிமிடத்திற்கு துடிக்க வேண்டிய குழந்தையின் இதயம், 110க்கு கீழ் துடித்தால், கர்ப்பத்திலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். சிசேரியன் செய்து உடனடியாக குழந்தையை எடுக்க வேண்டியது அவசியம். 'மெக்கோனியம்' கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை கழிக்கும் மெக்கோனியம் எனப்படும் முதல் மலம் திரவத்துன் இருந்து, குழந்தையின் இதயத் துடிப்பும் சீராக இருந்தால், அடுத்த 2 - 3 மணி நேரத்தில் பிரசவம் ஆகிவிடும். குழந்தை அடர்த்தியாக மலம் கழித்து, கர்ப்பப்பையின் வாய் 10 செ.மீ., திறந்து, பிரசவம் ஆவதற்கு ஐந்தாறு மணி நேரம் ஆகலாம் என்ற சூழ்நிலையில், குழந்தை மலத்தை விழுங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். இது, நுரையீரலுக்குள் சென்று தீவிர தொற்று ஏற்படும். அதிக கட்டணத்திற்காக சிசேரியன் செய்கிறோம் என்று சொல்வது தவறு. நார்மல் டெலிவரியில் குழந்தையை கையில் எடுக்கும் போது மகப்பேறு டாக்டருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி போன்று, வேறு எதிலும் கிடைக்காது என்பது என் அனுபவம். அம்மா, குழந்தை இருவரின் நலனை கருத்தில் கொண்டு சிசேரியனா, நார்மல் டெலிவரியா என்று மகப்பேறு டாக்டர் முடிவெடுப்பார். டாக்டர் சந்தியா வாசன், இயக்குநர், மகப்பேறு பிரிவு, சிம்ஸ் மருத்துவமனை, சென்னை 044 - 2000 2001 enquiry@siimshospitals.com