உடல் பருமன் குறைக்க செய்ய வேண்டியதென்ன?
அவசரமான இன்றைய உலகில், எதை சாப்பிடுகின்றோம், எப்படி சாப்பிடுகின்றோம் என்பதை கண்டுகொள்வதில்லை. நம் தட்டில் உள்ள உணவை சரியாக கவனித்தாலே ஆரோக்கியமான வாழ்க்கை எளிது என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் இந்து வைஷ்ணவி.நம் உணவில் பிரதானமாக இடம் பெறும் அரிசியை தவிர்க்க பலர் கூறுகின்றார்களே?அரிசி என்பது உடல் நலத்திற்கு கேடானது அல்ல. ஆனால், மூன்று நேரமும் சமநிலை இன்றி அரிசி உணவு எடுத்துக்கொள்ளக்கூடாது. அரிசியுடன் காய்கறி, பருப்பு, தயிர், முட்டை, மீன், பயறு போன்ற புரத உணவு சேர்த்துக்கொள்வது அவசியம். சாதத்தின் அளவு குறைவாக, அளவாக எடுத்துக்கொள்ளலாம்.மூன்று வேளை நன்றாக சாப்பிட்டாலும் அடிக்கடி சோர்வு ஏற்படுகின்றதே...?மைதா, பேக்கரி பொருட்கள் அதாவது ரிபைன் செய்யப்பட்ட உணவு அதிகம் எடுத்துக்கொண்டாலும், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உடலில் இல்லை என்றாலும் சோர்வு காணப்படும். இது தவிர, உணவு நேரம் ஒழுங்கில்லாமல் இருப்பது, தண்ணீர் குறைவாக குடிப்பது, துாக்கம் இன்மையும் சோர்வுக்கு மிக முக்கிய காரணம்.சிறுதானியம் அனைவருக்கும் ஏற்ற உணவா?சிறுதானியங்கள் மிகவும் சத்தான உணவு. வயது, ஜீரணத்திறன் உடல்நிலை, சமைக்கும் முறை பொறுத்தே சிறுதானியங்களை தேர்வு செய்யவேண்டும். அரிசியை முழுவதும் மாற்றாமல், வாரம் இருமுறை, மூன்று முறை என சேர்த்துக்கொள்ளலாம். பல்வகை உணவுகளே நல்ல உடல்நலத்திற்கு தேவை.உடல் எடை குறைப்பில் மக்கள் செய்யும் தவறுகள் என்ன?உடல் எடையை பலர் அழகு சார்ந்து பார்க்கும் சூழல் தொடர்கிறது. இது ஆரோக்கியத்திற்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைத்துவிடும். உடல் எடையை சரியான உணவு பழக்கம், அடிப்படை உடற்பயிற்சி இருந்தாலே எளிதாக குறைத்து விடலாம். காலை உணவை தவிர்ப்பது, டயட் பற்றி புரிதல் இன்றி பட்டினி கிடப்பது, கல்யாணம், பிறந்தநாள் என டார்கெட் வைத்து ஓடுவது போன்றவை உதவாது.காலை உணவை தவிர்த்தால், மதியம் அதிகம் சாப்பிடும் பழக்கம் உருவாகும். மூன்று வேளையும் சத்தான சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது, தேவையற்றதை தவிர்ப்பது, உடற்பயிற்சி போதுமானது. இரவு உணவு முடிந்தவரை, 7 மணிக்குள் முடிப்பது நல்ல பலனை தரும்.குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடுகள் என்ன?இன்றைய குழந்தைகளில் மறைமுக ஊட்டச்சத்து குறைபாடுஅதிகம் காணப்படுகிறது. துரித உணவு, காய்கறி தவிர்ப்பு, அதிக ஸ்கிரீன் டைம் போன்றவை இதற்கு முக்கிய காரணம். குழந்தைகள் சோர்வாகவும், கவனக்குறைவாகவும் இருந்தால் இரும்புச்சத்து குறைபாடும், எலும்பில் வலி இருப்பின் வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாடும், வளர்ச்சி பிற குழந்தைகள் போல் இல்லை எனில் புரதச்சத்து குறைபாடும், அதிக மறதி ஏற்படின் வைட்டமின் பி12 குறைபாடும் இருக்க வாய்ப்புண்டு. இக்குறைபாடு உங்கள் குழந்தைகள் மத்தியில் இருந்தால், உணவு முறையை உடனடியாக மாற்ற வேண்டும்.கர்ப்ப காலத்தில் அவசியமான, தவிர்க்க வேண்டிய உணவு எவை?பொதுவாக, கர்ப்பம் உறுதியான உடன், உறவினர்கள் இனிப்பு, பலகாரங்களை வாங்கி வருவது வாடிக்கை. இது முற்றிலும் தவறானது. ஹோட்டல் உணவுகள், இனிப்பு, பாக்கெட் உணவுகள், சர்க்கரை பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துகொள்ள வேண்டும். முருங்கைக் கீரை, கொண்டைக்கடலை, கம்பு, பால், தயிர், எள், ராகி, பருப்பு, முட்டை, கீரை, பீட்ரூட் போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும்.பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் உடல்சார் பிரச்னைகள் என்ன?பொதுவாக, 30 வயதுக்கு பிறகு கால்சியம் குறைபாடு ஆரம்பிக்கும். மெனோபாஸ் பிறகு இதன் வேகம் அதிகரித்து, எலும்புகளின் வலு குறையும். இதனால், சத்தான உணவை ஆரம்பம் முதலே எடுத்துக்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேல் மருத்துவர்களின் அறிவுரைப்படி சப்ளிமென்ட் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.பள்ளி குழந்தைகளின் ஸ்நாக்ஸ் டப்பாவில் தவிர்க்க வேண்டியது என்ன?சில பள்ளிகளில் நேரடியாக குழந்தைகளின் ஸ்நாக்ஸ் டப்பாக்களை மூன்று நாட்கள் தொடர்ந்து ஆராய்ச்சிக்காக கணக்கெடுத்தோம். அதில், பெரும்பாலும் பிஸ்கட், இனிப்புகள், சிப்ஸ் இருப்பதை அறிந்தோம். இது முற்றிலும் தவறு. சத்தான உணவை சாப்பிட வைக்க பள்ளி சரியான இடம். பத்து நாட்கள் சாப்பிடவில்லை என்பதற்காக மாற்றாமல் தொடர்ந்து சுண்டல், மக்காச்சோளம், நிலக்கடலை, சேலட், சிறுதானிய லட்டுகள், பழங்கள் போன்றவை கொடுத்தால் நாளடைவில் பழகிக்கொள்வார்கள்.poshantree.hs@gmail.com93797 50708