வேர்க்கால்களை தாக்கும் வெள்ளை அணுக்கள்!
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தலையில் முடி இல்லாமல் இருந்த தன் மனைவி ஜடாபிங்கெத் ஸ்மித்தை கேலி செய்த காமெடி நடிகரை, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அறைந்தது, அனைவரையும் கவனிக்க வைத்தது. ஜடாபிங்கெத் ஸ்மித்திற்கு, 'அலோபேஷியா ஏரியேட்டா' என்ற முடி உதிரும் பிரச்னை உள்ளது.வெள்ளை அணுக்களில் ஏற்படும் சில மாற்றங்கள், முடியின் வேர் பகுதியை தாக்கும். அந்த இடத்தில் உள்ள முடி மொத்தமும் விழுந்து விடும். இது தலையில் மட்டுமல்ல; புருவம், மீசை, தாடி என்று எந்த இடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.நோயின் தீவிரத்தைப் பொறுத்து, முடி இழப்பு இருக்கும். சில சமயங்களில் உடல் முழுதும் முடியே இல்லாமல், மொத்தமும் உதிர்ந்து விடும். பொதுவாக, இப்பிரச்னை குழந்தைகளுக்கு தான் அதிகம் வரும்; தற்போது எல்லா வயதினருக்கும் வருகிறது.மன அழுத்தம், ஹார்மோன் செயல்பாடுகளில் சமச்சீரற்ற தன்மை, சிகரெட், பதப்படுத்திய உணவு என்று இதற்கு பல காரணிகள் உள்ளன. பெரும்பாலும் நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவு சாப்பிட்டாலே, தானாகவே பிரச்னை சரியாகி விடும். உதிர்ந்த இடத்தில் முடி முளைத்து விடும்; சிலருக்கு சிகிச்சை தேவைப்படும்.ஆனால், யாருக்கு எந்த மாதிரி இருக்கும் என்று கணிப்பது சிரமம். லேசர், இம்மியூனோ தெரபி, மாத்திரைகள் என்று தேவைக்கு ஏற்ப சிகிச்சை தர வேண்டும். உடனடியாக தீர்வு கிடைக்காது; அதிக நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படும்.மன அழுத்தத்தை குறைத்தாலே, அலோபேஷியா ஏரியேட்டா மட்டுமல்ல; வேறு எந்த உடல் பிரச்னையும் வராது.டாக்டர் கதீஜா நாசிகா,தோல் மருத்துவர், ரேலா மருத்துவமனை, சென்னை.044 - 6666 7777