ஸ்கேன் செய்வது எதற்காக?
கர்ப்ப காலத்தில் ஐந்தாறு முறை வழக்கமாக 'ஸ்கேன்' பரிசோதனை செய்யப்படும். ஆறாவது வாரத்தில் கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு ஸ்கேன் செய்யப்படும். 10 - 12 வாரங்களில் கருவின் வளர்ச்சியை பார்ப்பதற்கு ஒரு முறை ஸ்கேன் செய்யப்படுகிறது. 20வது வாரத்தில் பிறவிக் கோளாறுகள் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக, 'அனாலமலிஸ் ஸ்கேன்' எடுக்கின்றனர். பனிக்குடத்தின் அளவு இயல்பாக உள்ளதா என்பதை அறிய, 30 வாரங்களுக்குப் பின் பனிக்குடத்தின் அளவு, குழந்தையின் நிலை பற்றி அறிய அடிக்கடி ஸ்கேன் செய்யப்படும். ஆனாலும் சில உடல் கோளாறுகளுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம், கருவின் உடல் உறுப்புகளின் அமைப்பை மட்டுமே ஸ்கேன் பரிசோதனையில் பார்க்க முடியும். அதன் செயல்பாடு எப்படி உள்ளது என்பது தெரியாது.கரு உருவாகும் போது, அம்மாவிடம் இருந்து ஒரு மரபணு, அப்பாவிடம் இருந்து ஒன்று என்று இரு மரபணுக்கள் இருக்கும். இரு மரபணுக்கள் கருவிற்கு வரும். நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்யும் போது, அம்மா, அப்பா இருவரிடம் இருந்தும் இரு குறையுள்ள மரபணுக்கள் குழந்தைக்கு சென்றால், அது கோளாறில் முடிகிறது. குடும்பத்தில் மரபணு பிரச்னை இருந்தால், குறையுள்ள குழந்தைகள் பிறந்திருந்தால், குறையுள்ள குழந்தைகள் பிறக்குமோ என்ற அச்சத்தில் இருப்பவர்கள், 'ஹோல் எக்ஸ்சோம் சீக்வென்சிங்' என்ற மரபணு பரிசோதனை செய்து கொள்ளலாம். எந்த மரபணுவில் குறை என்பது தெரிந்து விடும். கருவிலேயே அல்லது குழந்தை பிறந்த பின் சரி செய்யக்கூடியதாக இருந்தால், மருத்துவ ஆலோசனையுடன் கர்ப்பத்தை தொடரலாம். பச்சிளங் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; முழு உடல் பரிசோதனையிலும் மரபணு பரிசோதனையை சேர்த்திருக்கின்றனர். விருப்பம் இருப்பவர்கள், கேன்சர் உட்பட எந்த நோய் தாக்கும் அபாயம் எதிர்காலத்தில் உள்ளதா என்பதை தெரிந்து, முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.டாக்டர் தீபா ஹரிஹரன்,இயக்குனர், பச்சிளங் குழந்தைகள் சிறப்பு பிரிவு, சூர்யா மருத்துவமனை, சென்னை044 - 2376 1750 *nicu_deepa@yahoo.com