உள்ளூர் செய்திகள்

"குளிர்பிரதேசங்களில் பல்வலி வருவது ஏன்

நான் கடந்த வாரம் ஊட்டி சென்றபோது, எப்போதும் இல்லாத வகையில் பல்கூச்சம், வலி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் சரியாகிவிட்டது. மலைப்பிரதேசங்களுக்கு சென்றால் பல் வலி அதிகம் வருமா?பற்களுக்கு சூடான மற்றும் குளிரான சூழ்நிலையை தாங்கும் சக்தி இயற்கையாகவே உள்ளது. நாம் குளிர் பிரதேசங்களுக்கு செல்லும்போது, தொடர்ந்து குளிர்ந்த காற்று வாயினுள் சென்று கொண்டே இருக்கும். ஆரோக்கியமான பற்களும், ஈறுகளும் உள்ளவர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் வராது. ஆனால் பற்கள் தேய்ந்து இருந்தாலோ, சொத்தையாக இருந்தாலோ, குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் கூச்சம்வரத் துவங்கும்.சாதாரணமாகவே குளிர்ந்த உணவு உண்ணும்போது கூச்சம் உள்ளவர்களுக்கு, இச்சூழ்நிலையில் கூச்சம் அதிகமாகும். குளிர்ந்த சூழ்நிலையில் தொடர்ந்து இருக்கும்போது, ஈறுகள் சற்று சுருங்கியே இருக்கும். ஈறுநோய் உள்ளவர்களுக்கு மேலும் ஈறுகள் சுருங்கும்போது, கூச்சமும் வலியும் வரும். பற்களை கடிப்பவர்களுக்கு அவர்களை அறியாமல் பற்களில் விரிசல் இருக்கும். இதனுள் குளிர்ந்த காற்று செல்லும்போதும், கூச்சமும், வலியும் வரும். எனவே ஈறுகளையும், பற்களையும் ஆரோக்கியமாக வைப்பதே முதல் தீர்வு.லேசான கூச்சம் இருந்தாலும் பல் டாக்டரிடம் காட்டி தேவைப்பட்டால், சீலண்ட் என்னும் மருந்தினை பற்களில் பூசவேண்டும். இது நுண்ணிய விரிசல்களிலும், பற்களில் தேய்ந்த பகுதியிலும் மெல்லிய படலம் போல படர்ந்து, குளிர்காற்று பற்களின் உள்ளேவரை செல்லாமல் தடுத்து, கூச்சத்தை குறைக்கும்.எனது மகனுக்கு சொத்தை பற்களால் வலி வந்துள்ளது. அவனுக்கு வேர் சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் கூறுகிறார். பால் பற்களில் வேர் சிகிச்சை செய்யலாமா? பால் பற்களில் வரும் வலி, நிரந்தர பற்களில் வரும் வலியில் இருந்து சற்று வித்தியாசமானது. குழந்தைகளுக்கு ஈறுநோய் வராது. உண்ணும் உணவினால் வரும் சொத்தை மட்டுமே காரணம். சொத்தை பரவி பற்களின் நரம்புவரை செல்லும்போது, வலி வரும். இப்பற்களை ஒரு எக்ஸ்ரே படம் எடுத்து பரிசோதித்து, பின் சொத்தையின் நிலைக்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும். சொத்தை ஆரம்ப நிலையில் இருந்தால் 'பல் கேப்பிங்' என்னும் சிகிச்சை செய்யலாம். இச்சிகிச்சையில் சொத்தை உள்ள பாகத்தை மட்டும் சுத்தம் செய்து, பற்களின் மேல்பகுதியில் ஒரு மருந்து வைத்து அடைத்துவிட வேண்டும். இது சொத்தை பரவாமல் தடுக்கும். ஆனால் சொத்தை பரவி நரம்புவரை செல்லும்போது வேர் சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு செய்யும் வேர் சிகிச்சை இரண்டு வகைப்படும். 'பல்பாடமி' என்னும் சிகிச்சை முறையில் பற்களின் பாதிவரை வேர் சிகிச்சை செய்து அடைக்க வேண்டும்.தேவையின்றி வேரின் அடிவரை செல்வது, பால் பற்களுக்கு உகந்ததல்ல. ஒருவேளை சொத்தை பல்லின் வேர் முழுவதும், பரவி இருந்தால் 'பல்பெக்டமி' என்னும் சிகிச்சை செய்து பல்முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். பால் பற்களுக்கு சிகிச்சை செய்யும்போது அவற்றின் கீழ் உள்ள நிரந்தர பற்களுக்கு பாதிப்பு இல்லாமல், இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பால் பற்கள் தானாக விழும்வரை அவற்றை கவனமாக பார்த்துக் கொள்வதன் மூலம் நிரந்தர பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை. 94441-54554


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்