UPDATED : மார் 27, 2025 06:47 PM | ADDED : மார் 27, 2025 06:43 PM
சாருகேஷி இது ஒரு அருமையான ராகத்தின் பெயர்.இந்த பெயரில் வரும் ஒய்ஜி மகேந்திரன்தான் படத்தின் நாயகன், பெரும் இசைமேதை இவரின் இசைக்கு மயங்காத இசை பிரியர்களே இல்லை, இவர் மேடை ஏறினால் தாள சத்ததை மீறி கைதட்டல் காதை பிளக்கும்.இப்படிப்பட்ட மனிதர் வாழ்க்கையில் மகன், மருமகள் வடிவில் இடிபோல பல வேதனைகள் வருகிறது,விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கிறது.இதை எல்லாம் மனிதர் எப்படி கையாளப்போகிறார் என்ற ஆர்வத்தை படம் முழுவதும் பல ட்விஸ்ட்டுகளுடன் கடிய திரைக்கதையாக வைத்துள்ளதால் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.வாழ்க்கையில் இப்படி பல வழிகளை சந்திக்கும் சாருகேசிக்கு அல்சைமர் எனும் மறதி நோயின் பாதிப்பும் வந்துவிடுகிறது.இந்த நோய் காரணமாக மனைவி, மக்கள், நண்பர்கள் என் அனைவரையும், அவ்வளவு ஏன் தன்னையே மறந்துவிடுவர்.பாடிக்கொண்டு இருக்கும் மேடையில் பாடலை மறந்து திணறுவதும்,ஆமா நீங்க யாரு ஏம்மா இப்படி அழறீங்க என்று 33 வருடமாக தன்னுடன் உயிராக ஒட்டியிருந்த மணைவியை கேட்கும் போது சாருகேசியாக நடித்திருக்கும் ஒய்ஜிஎம் ரசிகர்களை அழவைத்துவிடுகிறார்.படத்தில் உள்ள நாயகனின் வயதும் தற்போது ஒய்ஜிஎம்மின் வயதும் கிட்டத்தட்ட ஒன்று என்பதால் படத்தில் அவரோடு ஒன்றிப்போய்விட முடிகிறது.இந்த நோயின் தாக்கத்துக்கு ஆளான ஒய்ஜிஎம் நிலைமை என்ன ?அதில் இருந்து மீண்டாரா?இல்லையா? என்பதுதான் படத்தின் முக்கிய ட்விஸ்ட்.சிவாஜியின் பக்தனாக அவரின் நடிப்பை தன்னுள் வாங்கிக் கொண்டுள்ளதாக கூறிவரும் ஒய்ஜிஎம் இந்தப் படத்தில் அதை செவ்வனே வெளிப்படுத்தியள்ளார்.இசை நாயகனாக மிக எதார்த்தமாக தன் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்ஒரு நகைச்சுவை நடிகரால் இவ்வளவு சீரியசான கனமான கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு அருமையாக பதில் தந்துள்ளார்.பாட்ஷா வெள்ளி விழா படத்தை தந்த சுரேஷ் கிருஷ்ணா தான் சாருகேசி படத்தின் இயக்குநர்,ஒரு மேடை நாடகத்தை அருமையான திரைப்படமாக்கியுள்ளார.சுகாசினி, சமுத்திரகனி, சத்தியராஜ், தலைவாசல் விஜய், ஜெயபிரகாஷ், மதுவந்தி என ஒரு தேர்ந்த நடிகர்கள் பலர் படத்தில் உள்ளனர்.கானா பாடல்களால் ரசிகர்களை கட்டிப்போடும் தேனிசைத் தென்றல் தேவா, கர்நாடகா இசையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அருமையான கர்நாடக இசையை வழங்கியுள்ளார்.சாதாரண மரத்தில் செய்த புல்லாங்குழலின் இசையே நம்மையே மயக்கும் போது 'சாருகேசி' சந்தன மரத்தில் செய்த புல்லாங்குழலாகும் மயங்காமல் இருக்கவேமுடியாது.
படத்தை பார்ப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள், அந்த வகையில் நான் பாக்கியசாலி என்று சாருகேசி படத்தின் விசேஷ திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக.,தமிழக தலைவர் அண்ணாமலை படம் பார்த்துவிட்டு நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.இது போன்ற படங்களை மக்கள் குடும்பத்துடன் பார்த்து கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.-எல்.முருகராஜ்